Pages - Menu

Tuesday 29 November 2016

இயற்கையை நேசிக்கும் கிறிஸ்மஸ்

இயற்கையை நேசிக்கும் கிறிஸ்மஸ்

- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

சோதிமணிப் பெட்டகமே சுடரொளியே - யூதருக்கு
ஆதி மகனாய்ப் பிறந்த அருந்தவமே தாலேலோ
மாணிக்கத் தொட்டிலுக்கு வாய்க்காத பெருமையயல்லாம்
ஆநிரைத் தொழுவினுக்கு ஆரளித்தார் எங்கோவே!

- இயேசு காவியம் எண் : 9

வையகம் மீட்க வந்திட்ட வானவன் இயேசு பிறந்ததுவோ மாட்டுத் தொழுவத்தில். பழைய கந்தல் துணிகளால் சுற்றப்பட்டு கிடத்தப்பட்ட இடமோ தீவனத்தொட்டியில். இவரின் பிறப்புச் செய்தி ஒலித்திட்ட இடம் வெட்டவெளி. வயல்வெளி. மீட்பர் பிறந்திட்ட மகிழ்ச்சியின் செய்தியினை வானவர் அறிவித்தார். ஆடுகளை சாமக்காவல் காத்திட்ட இடையருக்கு எல்லாமே இயற்கைச் சூழலில் நிகழ்ந்திட்ட வரலாற்றுப் பதிவுகள் (காண் லூக்கா 2 : 1 - 16)

கடும்குளிர் நிறைந்த நடுச்சாம வேளையில் ஆடு, மாடுகள் தின்னும் புல், வைக்கோல் நிறைந்த தீவனத் தொட்டியில் தவழ்கின்றது தெய்வக் குழந்தை. காட்டை, மேட்டைப் பண்படுத்தி சேற்றில் உழன்று வியர்வை சிந்தி உலகோருக்கு உணவளிப்பவர் உழவர். உலகின் முதன்மைத் தொழிலாகிய உழவுத் தொழிலாளருக்கு உற்ற தோழராய் இருப்பவை கால்நடைகள். இயற்கையைப் பேணி உழைப்போருள் ஒருவராக இயேசு பிறப்பெடுக்கின்றார்.

எல்லாம் நன்றாயிருந்தன :

நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியன பிரபஞ்சம் எனப்படுகின்றன. வாய்ச் சொல்லால் உலகினைப் படைக்கின்றார் இறைவன். தனது  உருவிலும், சாயலிலும் மண்ணால் மனிதரை  உருவாக்கி, அவர் நாசிகளில் உயிர்மூச்சை ஊதி உயிரளிக்கின்றார். தனியாயிருந்த  முதல் மனிதனாகிய ஆதாமுக்குத் துணையாகப் பெண்ணாகிய ஏவாளைத் தந்து ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும், பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு குடியிருக்கச் செய்கின்றார் (காண் தொநூ 1 ‡ 2 பிரிவுகள்). இறுதியில் தாம் படைத்த அனைத்தும் நன்றாயிருக்கின்றது என்று இறைவன் மகிழ்கின்றார் (தொநூ 1 : 31).

இறைவா, உமக்கே புகழ் :

புத்துலகச் சிற்பியாம் இறைவனின் மாபெரும் கொடையாகத் திகழும் பிரான்சிஸ் திருத்தந்தை இயற்கை பற்றிய தனது கொள்கைகளை, ‘இறைவா, உமக்கே புகழ்’ என்னும் கொள்கைத் திரட்டு மூலம் மக்களோடு உறவாடுகின்றார். படைப்பெங்கும் நிறைந்திருப்பவர் இறைவன். படைப்பின் அழகினை ரசித்து அனுபவிக்கும்போது நாம் கடவுளைக் கண்ணாரக் காணுகின்றோம். எங்கணும் நீக்கமற நிறைந்திட்ட இறைவனின் உடனிருப்பினை உணர்ந்து வாழ அழைக்கப்படுகின்றோம்.

மேலும் சுற்றுச் சூழலைப் பேணி வாழ்கின்ற போது இயற்கை புதுப்பொலிவடைகின்றது. இயற்கையில் உறையும் தெய்வத்தின் சாயல் சீர்குலையாது வாழ்வதுவே உண்மையான விசுவாச வாழ்வு என்று திருத்தந்தை தெளிவுபடுத்துகின்றார்.

நிலத்தின் உரிமையாளர் :

‘நிலத்தை அறுதியாய் விற்றுவிட வேண்டாம், ஏனெனில் நிலம் என்னுடையது. நீங்களோ என்னைப் பொறுத்த மட்டில் அன்னியரும், இரவற்குடிகளுமே’ (லேவியர் 25 : 23). ஆக, ஆண்டவரே நிலத்தின் உரிமையாளர். கால்நடைகள் மனித உழைப்பின் தோழர்கள் மட்டுமல்ல, இயற்கையின் கொடைகள். எனவே நல்லார் தம் கால்நடைகளைப் பாதுகாப்பர் (நீ மொ 12 : 10) என்று விவிலியம் கூறுகிறது.

இயேசுவும் இயற்கையும் :

இயற்கையோடு ஒன்றித்து வாழும் ஏழையரின் ஏழ்மையில் பங்காளியாகப் பிறந்தார் இயேசு. இவரின் போதனைகள் அனைத்தும் இயற்கையில் நாம் காண்பவற்றையே உவமைகளாக்குகின்றார். எடுத்துக்காட்டாக விதைப்பவர் உவமை (மத் 13 : 4 - 9, 18 - 23), திராட்சைக் கொடி (யோவான் 15 : 1 - 17), காணாமற் போன ஆடு (லூக் 15 : 4 - 7), கடுகு விதை (மத். 13 : 31 - 33), வயலில் தோன்றிய களைகள் (மத். 13 : 36 - 43).

மேலும் வானத்துப் பறவைகள் (மத். 6 : 26). காட்டு மலர்ச் செடிகள் (மத். 6 ; 28). அத்திமரம் (மாற்கு 11 : 12 - 14, 20 - 24) போன்றவை. அது மட்டுமன்று திராட்சைக் கனிகளை முட்செடிகளிலும், அத்திப் பழங்களை முட்பூண்டுகளிலும் பறிக்க முடியாது. நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும். நச்சு மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும் (மத். 7 : 16, 17). இவையனைத்தும் நமது அன்றாட வாழ்வின் எதார்த்தங்களை இயற்கையிலிருந்து கற்றுக் கொள்ள இறைவன் நமக்கு விடுக்கும் அழைப்பாகும்.

தாயாகும் இயற்கை :

நாம் நம்மை ஈன்றெடுத்த தாயை அதிகம் நேசிக்கின்றோம். காரணம் தாயின் கருவறைதான் உயிரை வரவேற்று, பாதுகாத்து, உணவளித்து, உருதந்து உலகிற்குக் கொண்டு வருகிறது. அதே போன்றே இயற்கை அன்னையும் நம்மை வரவேற்று, பாதுகாத்து, உணவளித்து, இறுதியாக நமது உடல்தனை அவளோடு இணைத்து விண்ணகப் பேரின்ப வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றாள்.

இயற்கை இறையியல் : 

படைப்பினில் இறைவனைக் கண்டதனால்தான் அசிசி நகர் புனித பிரான்சிஸ் சூரியனை தன் சகோதரன் என்றும் சந்திரனை தன் சகோதரி என்றும் அழைத்தார். முண்டாசு மீசைக்கவிஞர் பாரதி படைப்பனைத்தும் இறைவனின் சாயலே என்றுணர்ந்து கீழ்க்காணும் வரிகளில் பாடுகின்றார். 

காக்கைச் சிறகினிலே நந்தலாலா! நின்றன்
கரிய நிறந் தோன்றுதைய்யா நந்தலாலா ...

நாம் வாழும் இக்காலத்தின் சுற்றுச்சூழல் அறிஞர்களுள் முதன்மையாளராகத் திகழ்பவர் சால்லி மைக்பேக் (றீழியியிஷ்e னிஷ்உக்ஷூழிஆற்e) என்னும் பெண்மணி. னிலிdeயிவி லிக்ஷூ றூலிd: வீஜுeலியிலிஆதீ க்ஷூலிr ழிஐ சிஉலியிலிஆஷ்உழியி ஹிற்உயிeழிr புஆe என்னும் தனது கட்டுரையில் காணப்படும் கருத்துக்கள் நமது சிந்தனையைக் கூர்மைப்படுத்துவதாக உள்ளது.

1. இயற்கை இறைவனின் உடல்
2. இயற்கை நமது தாய்
3. இயற்கை நமது காதலி
4. இயற்கை நமது தோழி
5. இயற்கை இறைவனின் பிரசன்னம்

இருவகை இறப்புக்கள் :

அ. மனித வாழ்வின் அழிவு
ஆ. இயற்கையின் அழிவு
முந்தையது தனி மனிதரோடு முடிந்துவிடுவது.
பிந்தையது நாளைய சந்ததியினை அழிப்பது.

இயற்கையை அழிக்கும் ஏரோதுக்கள் : 

தனக்குப் போட்டியாக எவரும் உருவெடுக்கக் கூடாது என்பதற்காக ஏரோது மன்னன் பச்சிளங் குழந்தைகளைக் கொன்றதாக மத். 2 : 1 - 18 பதிவு செய்கின்றது.

இயற்கையை அழிக்கும்போது எழும் ஓசை மாசில்லாக் குழந்தைகளின் மரண ஓலங்களே. இயற்கையை அழிக்கும் எவரும் நவீன ஏரோதுவே. உலக  மயமாக்கல், நவீனத் தொழில் நுட்பம், வணிகம் மற்றும்  உற்பத்தி  என்னும்  பெயரில் நடைபெறும் செயல்பாடுகள் மூலம் ஒவ்வோராண்டும் ஆயிரக்கணக்கான தாவர மற்றும் விலங்கின உயிர்கள் மறைந்து வருகின்றன. 2050க்குள் நமது  சுயநலச்  செயல்களால்  ஆயிரக்கணக்கான தாவர மற்றும் விலங்கின  உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது (புகழ் அனைத்தும் உமதே , 32 - 42). இன்னும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மூலம் மனித குலச் சீரழிவு நடைபெறுகிறது. இந்நிலை தொடர்ந்தால் உறவு நிலைகள் குறைந்து நாம் வாழும் பூமி ஒரு பெரிய சாவுக்குழியாக மாறும். எனவே இயற்கையைப் பாதுகாப்போம். சுற்றுச் சூழலை நேசிப்போம். வளமான வாழ்வைப் பெறுவோம். இதுவே இன்றைய சூழலில் உண்மையான கிறிஸ்மஸ் கொண்டாட்டம்.

No comments:

Post a Comment

Ads Inside Post