Pages - Menu

Wednesday 1 June 2016

அமெரிக்கக் கடிதம், இயற்கையைப் போற்றுவோம்

அமெரிக்கக் கடிதம்
இயற்கையைப் போற்றுவோம்
- சவரி,
கேரி, வடகரோலினா

(இயற்கையை தெய்வமாக வழிபடுகிற மரபு இந்திய நாட்டில் உள்ளது. மரம், மலை, இடி, மின்னல், மழை, நீர் இவைகளெல்லாம் தெய்வநிலையில் போற்றப்படுகின்றன. ‘தாயை பழித்தாலும் பழிக்கலாம். தண்ணீரை பழிக்கக் கூடாது’ என்ற பழமொழி உண்டு. ஆனால், இப்போது இயற்கையை, பேணிகாக்காது, அதனை பொருட்படுத்தாது நம் மக்கள் நடப்பது எதார்த்தமாகிறது. நதி நீரில் கழிவு நீரை எவ்வித தயக்கமுமின்றி கலக்க செய்கிறார்கள். காவிரி நதி வரும் வழியிலுள்ள நகரங்களின் சாக்கடைகள் காவிரியில் விடப்படுகின்றன. திருப்பூரில் சாயப்பட்டறையின் கழிவு நீர் அப்பகுதியின் நிலத்தடி நீரையே பாதித்திருக்கிறது. எழிலான சந்தனமரம், செம்மரங்கள் அரசியல்வாதிகளின் துணையுடன் வெட்டி சாய்க்கப்படுகின்றன. இச்சூழலில் வாழ்கின்ற நாம், அமெரிக்காவில் எவ்வாறு இயற்கை பேணப்படுகிறது, பாதுகாக்கப்படுகிறது என்று தெரிவிக்கிறார் கட்டுரையாளர் ).

அமெரிக்காவில் மக்கள் இயற்கையை மதிக்கிறார்கள். அதன் முக்கியத்துவத்தை உணர்கிறார்கள். ஒவ்வொரு நகரங்களிலும் அந்த நகரத்தின் தண்ணீர் தேவையை நிறைவேற்ற ஏரிகளை அமைத்து, மழை தண்ணீரை சேமிக்கின்றனர். ஏரில் உள்ள நீரை நாம் அறிவியல் பாடங்களில் படித்துள்ளதுபோல, பாறைகளில், மணலில் வடிகட்டி தூய்மைபடுத்தி குடிநீராக மாற்றுகின்றனர். அந்த தண்ணீரை குழாய்களின் மூலம் வீட்டிற்கு அனுப்புகின்றனர். உலகில் வருங்காலத்தில் தண்ணீர் பிரச்சனை வரவிருப்பதை உணர்த்தி, தண்ணீரை வீணாக்காமல் எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது என்பதை ஆய்ந்து கண்டுபிடித்து அதை நடைமுறைபடுத்தி வருகின்றனர். உதாரணமாக துணி துவைக்கும் (Washing Machine) இயந்திரங்கள், பாத்திரம் கழுவும் (Dish Wash) போன்ற கருவிகள் மனிதன் வேலை பழுவை மட்டும் குறைப்பது மட்டும் இல்லாமல், அவ்வியந்திரங்களை கச்சிதமாக வடிவமைத்து, மனிதர்கள் பயன்படுத்துவதைவிட, இந்த இயந்திரங்கள் மிக மிக குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. மேலும் விவசாயத்திற்கு சொட்டு நீர் பாசனம் மூலம் செடிகளுக்கு தண்ணீரை பயன்படுத்துகின்றனர்.
நமது ஊரில் குறிப்பிட்ட நேரத்தில் இலவசமாக அரசாங்கம் தண்ணீர் விடுகிறது என்று தண்ணீரை சும்மா திறந்து விட்டு செடிகளுக்கு விடுவதையும், சும்மா ஓடினாலும் அடைக்காமல் இருப்பதையும், விவசாயிகள் தண்ணீரை வீணடிப்பதையும் பார்த்திருக்கிறேன். நமது நாட்டில் தண்ணீருக்காக உள்ள தட்டுபாட்டை உணர்ந்து, மழை நீரை சேமிக்க நமது அரசு புதிய ஏரிகளை அமைக்க வேண்டும். இருக்கும் ஏரிகளை தூர்வாரி அவைகளின் கொள்ளளவை அதிகரிக்க  வேண்டும். மக்களாகிய நாமும் தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து புத்திசாலி தனத்துடன் பயன்படுத்த வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, நல்ல உணவு மட்டும் போதாது. நல்ல, தூய்மையான சுற்று புற சூழல் வேண்டும். தூய்மையான காற்று வேண்டும். தூய்மையான காற்றுக்கு நிறைய மரங்கள் அவசியம். நல்ல மரங்கள் நமக்கு நல்ல கனியையும், மழையையும், நிழலையும், நம் அசுத்த காற்றை அவை சுவாசித்து, நாம் சுவாசிக்க நல்ல காற்றை கொடுக்கும் கொடை வள்ளல்களாக விளங்குகின்றன. மரங்களின் அருமையை இங்குள்ள மக்கள் உணர்ந்து உள்ளார்கள். சட்டம் இயற்றி காடுகளையும், வன விலங்குகளையும் மனித ஆக்கிரமிப்பில் இருந்து காத்து வருகின்றார்கள். மனிதர்கள் நடப்பதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் மரங்கள் நிறைந்த, மலர்கள் நிறைந்த கண்கவர் பூங்காக்களை உருவாக்கி வைத்துள்ளார்கள். வீட்டை சுற்றி மரங்களையும், பூக்களையும் வளர்த்து சுற்றுபுறத்தை பேணுகிறார்கள். நாமும் மரம் வளர்ப்போம். நம் சுற்றுபுறம் காப்போம். மரங்களை வளர்க்கவில்லையானாலும், இருக்கும் மரங்களை வெட்டாமல் காப்போம்.

கிளி வளர்த்தேன், பறந்து விட்டது 
அணில் வளர்த்தேன், ஓடி விட்டது 
மரம் வளர்த்தேன், இரண்டும் திரும்பி வந்து விட்டது.
                                                                     A.P.J. அப்துல் கலாம்.

No comments:

Post a Comment

Ads Inside Post