Pages - Menu

Monday, 27 February 2017

இளைஞனே விழித்தெழு

இளைஞனே விழித்தெழு

- பேராசிரியர். ச. சாமிமுத்து, திருச்சி

“ஒளிபடைத்த கண்ணினாய் - வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினதய் - வா வா வா”
உன்னைத்தான் இளைஞனே பாரதியார் அழைக்கின்றார், பாரதத்தை வாழ்விக்க அழைக்கின்றார்!

விழித்தெழு இளைஞனே விழித்தெழு!
“ஒற்று மைக்குள் உய்யலே நாடெல்லாம்
ஒருபெ ருஞ்செயல் செய்வாய் - வா வா வா”

ஆம், எம் தமிழ் இளைஞனே, தாழ் நிலைகளை எல்லாம் உமிழ்ந்து துப்பி,, ஒளி நிறை வாழ்வினை ஆள்வினை உழைப்பினால் ஆக்கிட, உன் கண்களை அகலவிரித்து அகன்ற இம்மண்ணுலக மாந்தரையயல்லாம் உற்றார், உறவினராக, ஓர் இறைவனின் படைப்பினராக எண்ணி ஏற்கும் எண்ணத்தினனாய், மனித நேய நெஞ்சத்தினனாய் நீ, நிமிர்ந்து பார்!

நீ கல்வி கற்கும் மாணவ பருவத்தினனாய் இருக்கலாம். பட்டம் பெற்றுப் பல்துறைகளிலே பணி புரிபவனாய் இருக்கலாம். உடலை வருத்தி  உழவுத் தொழில் புரிபவனாக இருக்கலாம். நாள் கூலிக்காய் உழைத்து உண்டு, உடுத்தி வாழ்பவனாய் இருக்கலாம். பிறக்கும்போது குழந்தையாய்ப் பிறக்கின்ற நீ, வளரும்போது வலிமைமிக்க வாலிபனாக வளருகின்ற நீ, படிப்பினால், பதவியினால் ஏன் உனக்குள் பாகுபாட்டை வளர்த்துக் கொள்ளுகின்றாய். நீ ஒரு தமிழன், தமிழ் இனப் பண்பாட்டு வாழ்வுக்கு உரியவன். நீ மொழிவெறியனாகவோ, இனவெறியனாகவோ இருக்க வேண்டாம். இருக்கவும் கூடாது! ஆனால் நீயோ, “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்னும் மனித நேய பண்பாட்டு வாழ்வுக்கு உரியவன். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்னும் செவ்விய வாழ்வியல் நெறியில் உன்னை ஆற்றுப்படுத்தும் வள்ளுவ முன்னோனின் மனித சமுதாய வாழ்வு நெறியில் நிலைத்து நின்று வாழும் வாழ்வுக்கு உரியவன் நீ.

மனித வாழ்க்கை என்பது, வாழ்ந்து, இதுதான் வாழ்க்கை என்று வாழ்ந்தவர்கள் வாழ்ந்து காட்டியதுதான். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று யாரும் மனித வாழ்க்கையை மாற்றிவிட முடியாது. மாற்றி அமைக்கவும் முடியாது.

வாழ்க்கையில் காலப்போக்கிற்கு ஏற்ற மாற்றம் நிகழும். அதை யாரும் தடுக்கவும் முடியாது. தடுத்தால் வாழ்வே தடுமாறி தறிகெட்டுப் போகும்.

ஆண்டுதோறும் தைத் திங்களில் பொங்கலிட்டு அறுவடை விழாக் கொண்டாடும் தமிழன், தானும் தன் மாடும் உழைத்த  உழைப்பில் வந்த புத்தரிசியைப் பொங்கலாகப் பொங்குகின்றான். அப்பொங்கலைத் தானும் உண்டு, தன் மாடும்  உண்ணக் கொடுக்கின்றான். அவ்வுணவுக்குரிய நெல்லை விளைவித்து வழங்கிய இறைவனுக்கு அவன் நன்றி செலுத்துகின்றான். அவ்விழாவின் ஒரு கூறாகத்தான் தமிழன் ஏறு தழுவும் நிகழ்வை நிகழ்த்திக் கொண்டாடுகின்றான். பன்னூறாண்டுக் காலமாகத் தமிழர் வாழ்ந்த வாழ்க்கையில் நிகழ்த்தி மகிழ்ந்து வந்த ஏறு தழுவுதலை, விலங்குவதை என்று பீட்டா போன்ற அமைப்பினர் சட்டத்தைக் கூறித் தடுத்து வந்த வேளையில், உன் பாரம்பரியப் பண்பாட்டு வாழ்வையே பாழ்படுத்த வந்த சட்டத்தையும், அந்தச் சட்டத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆட்டம் போட்ட பீட்டாவையும் எதிர்த்து நீ காட்டமாய் அறப்போராட்டக் களத்தில் கூட்டமாய் கூடினாய். சென்னை மெரினா கடற்கரையில் நீ  உன் தமிழ் இனமான பண்பாட்டு வாழ்வைக் காக்க இலட்சோப இலட்சம் பேராய் சனவரி 16 முதல் 21 முடிய அறப்போர் புரிய உன்னை அர்ப்பணித்துக் கொண்டாய்! அதன் விளைவுதான் இன்று தமிழ்நாட்டில் ஊரெல்லாம் ஏறு தழுவல் விளையாட்டு! சல்லி கட்டு ‡ மஞ்சு விரட்டு, அந்தச் சட்டம் உன் முன் தோற்றுப்போய் விட்டது!  உன் பண்பாட்டு வாழ்க்கையை மீட்டெடுத்து விட்டாய் நீ. உன்னை நான் பாராட்டுகின்றேன். ஆனால் இதுமட்டும் உன் வாழ்வை வளப்படுத்தி விடாது! உன் உரிமை வாழ்வைப் பறித்துவரும் கரிய சட்டங்களையயல்லாம் முறியடித்து முன்னேற முனைந்திடு நீ.

ஊழலை எதிர்த்து, இலஞ்ச லாவண்யத்தை எதிர்த்து, அரசியல்வாதிகளின் அடாவடித்தனத்தை எதிர்த்து, அரசு அதிகாரி களின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து, நீதி மன்றத்தில் நிலவும் அநீதத்தை எதிர்த்து, சொல்லாட - மல்லாடத் துணிந்தெழு இளைஞனே! போர்க்களமல்ல உன் வாழ்வுத் தளம். எதை எதிர்க்க வேண்டும் - ஏன் எதிர்க்க வேண்டும் - எந்த அளவு, எப்பொழுது இணைந்து எதிர்க்க வேண்டும் என்பதையயல்லாம் இளைஞனே நீ, உன்னை ஒத்த இளைஞர்களோடு கலந்து உறவாடி, அறிவுபூர்வமாகச் சிந்தித்து, சாதக பாதகங்களை நன்கு கணித்துப் பார்த்து நீ அறப்போராட்டக் களத்தில் இறங்க வேண்டும். குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்தை ஒழிக்க அதற்குக் காரணமான டாஸ்மாக்களை ஒழிக்க உன் போர் முரசு முழங்கட்டும்!

தமிழக மாணவ இளைஞனே, குறிப்பாகத் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட், எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்குப் பெற்று, 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. அதை நடைமுறைக்குக் கொண்டுவர ஒன்றுபட்டுப் போராட உறுதி பூண்டெழு. பொறியியல் படிப்புக்கும், தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்த நடுவண் அரசு முடிவு செய்திருக்கின்றது. இந்தத் தேர்விலிருந்தும் தமிழகத்திற்கு விலக்குப் பெற வேண்டும். இதில் நீ விழிப்பாய் இருந்து செயல்படு.

இளைஞனே நீ, மாணவனாக இருந்தாலும் சரி, தொழில்புரிந்து வாழும் இளைஞனாக இருந்தாலும் சரி உன் எழுச்சி அறப்போராட்டத்திற்கு, உன் உரிமையைப் பாதுகாக்கும் நியாயமான - வன்முறையற்ற - பொதுநலக் கூட்டுப் போராட்டத்திற்கு என்றும் வெற்றிதான். உன் வாழ்க்கை அனுபவ அறிவு குறைவாக இரந்தாலும், நீ பலரோடு இணைந்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் பொழுது , நீ அறிவு தெளிவு பெறுவாய்; உன் பாதையை நீயே வகுத்துக் கொள்ளும் நல்வழி கண்டடைவாய். விழிப்பாய் இருந்து செயல்படு - அறிவு வெளிச்சத்தில் இருந்து செயல்படு - அறநெறி பிறழாது செயல்படு.
“தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும்.”

No comments:

Post a Comment

Ads Inside Post