சிலுவைப் பாதை
- அருள்சகோ. அமலா கபிரியேல் SMMI,
கும்பகோணம்.
முன்னுரை :
புரட்சி ஏடுகளை புரட்டிப் பார்த்தால் புனிதப் பயணம் செய்தோர் ஏராளம், ஏராளம். புவி வாழ் மாந்தரின் புதுவாழ்வுக்காய் பொய்த்துப் போன உலகில், புது விடியலுக்காய், சுமையால் சோர்ந்த உள்ளங்களில் சுடர்வீசும் ஜோதி விளக்காய், வறண்டு போன நிலங்கள் வளம்தருபவனவாய், கனமான சுமைகளை சுகமாய் தன்தோளில் தூக்கி புறப்படுகின்றார் புரட்சி நாயகன். இது ஓர் இலட்சியவாதியின் பயணம். ஓர் நீதிமானின் நீதிக்கானப் போராட்டம். அன்பை மனதில் சுமந்து தீர்ப்பிடாமல் அனைவரையும் ஏற்று உண்மைக்காக உயிர் கொடுக்க, ஏன் உயிரையும் தாரை வார்த்து, உயிர்க்கும் வரை போராடும், இச்சிலுவைப் பயணத்தில், வாழ்வின் அனுபவங்களைத் திரும்பிப் பார்ப்போம்.
முதல் நிலை : இயேசுவின் சிலுவை மரணத் தீர்ப்பு
தலைவர் : ஆளுநன் பிலாத்து இயேசுவைத் தீர்ப்பிடுகிறான். உண்மை ஊமையான நேரம் இது. நீதி விலைபோன நாள் இது. பதவியும் பணமுமே பிரததானம்.
இன்றும் அநீதி தலைவிரித்தாடுகிறது அநியாயமாக கற்பழிப்புக் குற்றம் சுமத்தப்பட்டு, 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற ஓர் ஆங்கிலேயர், அதன்பிறகு நிரபராதி என்று தீர்ப்புப் பெற்று விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் உற்றார், உறவினர் எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் உண்மைக்கு சான்று பகர்பவர்களா? நீதியை எந்நாளும் காப்பவர்களா?
துணை : எங்கள் மேல் இரக்கமாயிரும்.
இரண்டாம் நிலை: இயேசுவின் தோள் மேல் சிலுவை
தலைவர் :
பழியில்லா பரமன் இயேசுவின் தோளில் சிலுவை மரம். இவனிடம் எந்தக் குற்றமும் காணவில்லை என்ற தீர்ப்புப் பெற்ற இயேசுவிற்கு கசையடி? முள்முடி? ஏளனப் பேச்சு? அடி, உதை? போதாதென்று சிலுவைப் பயணம். சென்ற ஆண்டு 2016 இல் தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைப் பாருங்கள். அவர்தம் தோளில் இருந்தது ஆளுயர மலர்மாலை. 5 விரல்களில் தங்க மோதிரங்கள், கத்திக் கோம் போடும் பக்த கோடிகள். பணம், பதவி, செல்வாக்கு, தொண்டர்களுக்காக தியாகம் செய்யும் தலைவர்களா இவர்கள்? இயேசவின் சீடர்களான நாம், நம் தலைவர் இயேசுவைப் போல் துவண்டுவிடாது, பிறர் நலம் காப்போமா?
துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.
மூன்றாம் நிலை: இயேசு முதன்முறையாக கீழே விழுகிறார்
தலைவர் :
அண்டத்தை ஆக்கிய ஆண்டவன் இயேசு, சிலுவையோடு விழுந்து கிடக்கிறார். தலைநிமிர்ந்து தரணியில் வலம் வந்த நாயகன், சிலுவை பாரம் தாங்காது தரையில் விழுந்து கிடக்கிறார். தன்னால் இயலவில்லையே என்ற தன் இயலாமையை தரணிக் கண்டு எள்ளி நகையாடுமே என்ற வேதனை. இருப்பினும், அவர் நம்பிக்கை இழக்கவில்லை. நம் நாயகன் இயேசுவைப் போல் திருச்சபையும் தன் ஆற்றாமையை, அகிலத்தன்முன் ஏற்றுக் கொண்டது. ஜீபிலி ஆண்டான 2000இல் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் ஜெருசலேம் சென்றபோது, பழமை வாய்ந்த புலம்பும் மதில் முன் மண்டியிட்டு, திருச்சபை கடந்த 2000 ஆண்டுகளாக மத நம்பிக்கையின் பெயரால் யூதர்கள், இஸ்லாமியர், பிறஇனத்தாரக்கு எதிராகச் செய்த கொடுமைகளை எண்ணி மனம் வருந்தி, மன்னிப்பு வேண்டி செபித்தார். நம் திருத்தந்தையைப் போல் நாமும் நம் இயலாமைகளை ஏற்றுத், தயங்காது ஏற்றுக் கொண்டு, மீண்டும் எழுந்து பயணத்தைத் தொடர்வோம்.
துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.
நான்காம் நிலை : தாயும், மகனும் சந்திக்கின்றனர்
தலைவர் :
தாயும், மகனும் சந்திக்கும் நேரம் கொடுமையானது. வரலாறு காணாத ஓர் சந்திப்பு. 10 மாதம் சுமந்த தாய், 30 ஆண்டுகள் மகனை வளர்த்த தாய், உறவின் இலக்கணமாய், உறவின் பாடங்களை உலகிற்கு கற்பித்த தாய். ஜே, ஜே நகரைச் சார்ந்த ஜெயலெட்சுமி என்ற 18 வயது பெண் தீக்காயங்களால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மரணமடைந்தாள். அவள் தந்த மரண வாக்குமூலம் என் அண்ணனின் நண்பன் எங்கள் குடும்பத்தில் ஒருவனாய் பழகினவன், வலுக்கட்டாயமாய் என் கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்டி, என்னைக் கற்பழித்து தீயிலிட்டான். நான் செய்த குற்றம். அவனின் ஆசையை அறியாது, பெற்றோர் பார்த்தவரை இரண்டு வாரங்களில் திருமணம் செய்ய இருந்தது. உலகில் அன்பும், பண்பும் பஞ்சாய் பறந்துபோய், போலித்தனமும், சுயநலமும் உறவுகளில் உருவாகும்போது, மரியன்னையும் இயேசுவும் கண்ணீர் விடுகின்றனர்.
துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.
ஐந்தாம் நிலை: சீமோன் இயேசுவுக்கு உதவுகிறார்
தலைவர் :
இயேசுவிற்கு தோள் கொடுக்கிறார் சீமோன். கொடிய யூதர்கள் வலுக்கட்டாயமாய் சீமோனின் தோளில் இயேசுவின் சிலுவையை வைத்து சுமக்கச் செய்கிறார்கள். வரம் கொடுக்கும் வல்ல தேவனுக்கே கரம் கொடுத்த சீமோன் இவர்.
அஞ்சலகத்தில் அஞ்சல் பிரிக்கும் பெண்மணியின் ஓர் அனுபவம். கடவுளின் முகவரிக்கு ஓர் அஞ்சல், அதைப் பிரித்துப் படித்துப்போது, வயதான மூதாட்டி கருணைத் தொகை ரூ. 1000 அனுப்பக் கடவுளைக் கெஞ்சி வேண்டினார். படித்த அஞ்சலகப் பெண்ணின் மனமிரங்க, சக ஊழியர்களிடம் பெற்ற நன்கொடையோடு ரூ. 900 அனுப்பினாள் சில நாட்கள் கழித்து மூதாட்டியிடமிருந்து மற்றுமொரு கடிதம். பிரித்துப் படித்துப் பார்த்த போது, கடவுளே நன்றி, நீர் 1000 ரூபாய் அனுப்பியிருந்தாலும், எனக்கு ரூபாய் 900 மட்டுமே கிடைத்தது. அஞ்சலகத்தில் உள்ள அயோக்கியர்கள் வஞ்சகம் செய்துவிட்டனர் என எழுதியிருந்தாள் மூதாட்டி.
நேசக்கரங்கள் நீட்டும்போது அவைகளுக்குப் பின் இருப்பது தன்னலமா? அல்லது தியாக உணர்வா?
துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.
ஆறாம் நிலை : வீரப் பெண்மணி வெரோணிக்காள் இயேசுவின் திருமுகத்தை துடைக்கிறாள்.
தலைவர் :
சூரியனை மங்கடிக்கும் ஜோதிபிரகாச இயேசுவின் திருமுகம் முள்முடி அழுத்திட இரத்தங்களாக வியர்வைகள் வெளியேறி அலங்கோலமானது முகம். வாளேந்திய வீரர் நடுவே வருகிறார். தன் உயிரையும் துச்சமென்று மதித்து, பரிவு கொண்ட நெஞ்சோடு இயேசுவின் திருமுகத்தைத் துடைக்கிறாள். என்ன ஆச்சரியம்! துடைத்தத் துணியில் இயேசுவின் திருமுகம் பதிந்தது. கல்கத்தாவில் நம் புனித அன்னை தெரசா 60 ஆண்டுகளாக தெருத்தெருவாக தன்னந்தனியே சென்று, துன்புறும் மானிடரை, அவர்தம் தனிமை, பிணி போன்றவற்றைத் துடைத்தார். இன்றும் இயேசுவின் பாடுகள் தொடர்கின்றன. துயர் போக்கிடும் மேலும் பல வீர வெரோணிக்காக்கள் தேவை.
துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.
ஏழாம் நிலை : இயேசு இரண்டாம் முறை தரையில் கீழே விழுகிறார்
தலைவர் :
இயேசுவின் பாதையில் மீண்டும் தரையில் சாய்கிறார். கொளுத்தும் வெயில். பாதங்களைச் சுட்டுப் பொசுக்குகின்றன. சிலுவையின் சுமை. இயேசுவின் பயணத்தில் மீண்டும் தடங்கல்.
பத்துக் கட்டளைகளை நிலைநாட்டும் இயக்கம் என்னும் போலி கிறிஸ்துவ அமைப்பில் 500 பேர்களுக்கு மேலான கிறிஸ்தவர்கள் இறுதிநாளைத் துரிதப்படுத்தும் வகையில் தங்களையும், கோவிலோடு தீக்கிரையாக்கினர் என்ற செய்தி உலகையே உலுக்கியது. ஆனால் நடந்தது, இரு தலைவர்கள் தங்கள் சீடர்களை வற்புறுத்தி சொத்துக்களை விற்கச் செய்து, மறுத்தவர்களை கொலை செய்து, கோவிலில் புதைத்து, அங்கத்தினர் 200 பேரையும் கோவிலில் தீயிட்டுக் கொளுத்திவிட்டு, சொத்துக்களோடு தப்பிவிட்டனர். விடுதலை தரவேண்டிய மதம் பலரின் அறிவை மழுங்கச் செய்து, உள்ளங்களை அடிமையாக்கி கீழே விழத்தாட்டுகின்றனர். நாம் பிறரை ஏமாற்றி விழவைக்கிறோமா?
துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.
எட்டாம் நிலை : அழுத ஜெருசலேம் பெண்களுக்கு இயேசு ஆறுதல் கூறுகிறார்
தலைவர் :
பெண்களின் மனம் இரங்கும் தன்மையுடையது. பிறர் துன்பம் கண்டு மனம் பொறுக்காது. அழுது கண்ணீர் வடிக்கின்றனர். பெரும்பாலும் பெண்கள், தங்களுக்காக அழுவதைவிட, தங்கள் அன்பிற்கும், பாசத்திற்கும் உரியவர்களுக்காகவே அதிகம் கண்ணீர் வடிக்கின்றனர்.
காஷ்மீர் - குக்கிராமத்தில் அதிகாலையில் 40 தீவிரவாதிகள் வந்தனர். உறங்கிக் கொண்டிருந்த அத்தனை ஆண்களையும், வீட்டிற்கு வெளியே வரச்சொல்லி, வரிசையில் நிற்க வைத்து கண் இமைக்கும் நேரத்தில் 35 பேரை சுட்டுக் கொன்றனர். அத்தனைப் பெண்களும், கணவனை இழந்தும், மகனை இழந்தும் கதறி அழுகின்றனர். நமது வீட்டில், சமுதாயத்தில் பெண்களின் கண்ணீருக்கு நான் எந்த விதத்தில் காரணம்?
துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.
ஒன்பதாம் நிலை : இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்
தலைவர் :
ஒருமுறை தவறியவருக்கு மூன்று முறை. இதோ! இயேசு மூன்றாம் முறை விழுகிறார். செங்குத்தான பாதை, சுமையான சிலுவை. உடல் பெலனற்று வீழ்கின்றார். ஆயினும் இது பயணத்தின் பாதை. நான் எழவேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன், அமைதியாய், அழகாய், அரணாய் நின்ற எரிமலை, திடீரென்று குமுறத் தொடங்கி, ஒரு சில நாட்களில் வெண்புகை எழும்பி, அதன் நெருப்புக் குழம்பை பல மைல்கள் தூரத்தில் துப்பியது. பல்லாயிரக் கணக்கான மக்கள் அத்தனையையும் விட்டு விட்டு, அபலைகளாக, அனாதைகளாக, உயிருக்குப் பயந்து ஓடிய காட்சியை தொலைக்காட்சி காட்டியது. ஏன் இவர்களுக்கு இந்த சோகம்? இயேசுவைப் போல் நம்பிக்கையோடு எழுந்து நடப்போம் வாழ்வில். நாம் நம்பிக்கையை இழப்பது எப்போது? மனம் சோர்ந்து, தளர்ந்து போவது எதனால்?
துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.
பத்தாம் நிலை : இயேசுவின் ஆடைகள் களையப்படுகிறது
தலைவர்:
மனிதன் பிறக்கும் போது ஆடையின்றிப் பிறக்கிறான். இறக்கும்போதும் ஆடையோடு இறக்கின்றான். இயேசுவின் ஆடைகள் மட்டும் உரியப்படவில்லை. மனித மாண்பும் உரியப்பட்டது.
நம் உலகில் பலருக்கு நிர்வாணம் ஒரு நிர்ப்பந்தம். ஆனாலும் அதுவே ஒரு சிலருக்கு நாகரீகம். உடுத்த உடையின்றி வாடும் ஏழைகள் ஒருபுறமிருக்க ஆடம்பரச் செலவுகளுக்கதன பணத்தை விரயமாக்கும் நபர்களை நினைப்போம். பலரின் வறுமைக்கும், சிலரின் பேராசைக்கும் உண்மையில் தொடர்பு உண்டு. நமது நிலை என்ன? நாம் ஆடம்பரப் பிரியர்களா?
துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.
பதினொன்றாம் நிலை: இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள்
தலைவர் :
சிலுவைப் பாதையின் உச்சக்கட்டம் சிலுவையில் அறைதல். தொட்டில் இல்லை இவர் பிறக்கும்போது. துணி இல்லை அவர் குளிரில் வாடியபோது. உலகம் சேர்ப்பதில் பெருமை கொள்கிறது. இயேசுவோ தன்னை இழப்பதில் பெருமை கொள்கிறார். தான் சுமந்து வந்த சிலுவையே தற்போது இயேசுவை தாங்கி அறையப்படும் சிலுவையாக மாறிவிட்டது. நல்லதைச் சொல்ல நடந்த கால்களும், நல்லதைச் செய்த கைகளும் கூரிய ஆணிகளால் துளைக்கப்படப் போகின்றன.
நம் பாரதநாட்டிலும் கற்கவேண்டிய ஆயிரமாயிரம் சிறுவர் சிறுமியர் கொத்தடிமைகளாக, சுமைத் தூக்கிகளாக, குப்பை பொறுக்குபவர்களாக ஏன்? பட்டாசு உற்பத்தித் தொழிற்சாலைகளில் எத்தனை கொடுமைகள்? எத்தனை வேதனைகள்? எத்தனை ஆணிகள்? இவர்களின் பிஞ்சு உடலைத் துளைக்கின்றன. இவர்களின் மென்மையான இதயத்தைக் கிழிக்கின்றன. அறையப்படுவது குழந்தைகள், துயரப்படுவது இயேசு.
துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.
பன்னிரெண்டாம் நிலை : இயேசு சிலுவையில் மரிக்கிறார்
தலைவர் :
மானத்தைக் காக்க அங்கியைக் கேட்டாய் ‡ கொடுத்தேன்.
மூச்சை நிறுத்த மூன்று ஆணிகளைக் கொடுத்தாய் ‡ பெற்றுக்கொண்டேன்.
இரத்தம் சிந்தி உன் உயிரைக் காத்தேன்
மீதம் இருக்கும் என் அருமை உயிரும் உனக்குத்தான்.
மனிதன் வாழ்வதற்கென்றே பிறக்கிறான். இயேசுவோ இறப்பதற்கென்றே பிறக்கிறார். வாழ்வின் ஊற்றாகிய இறைவனே இறந்ததால், இறப்பே வாழ்வின் பிறப்பானது. துயரத்தின் சின்னமாகிய சிலுவை மீட்பின் கருவியானது. இயேசுவின் இறப்பு நமக்கெல்லாம் பிறப்பு. இயேசுவின் சாவு, நமக்கெல்லாம் வாழ்வு.
இயேசுவின் பிறப்பு நம் அனைவரின் மீட்பு. நாம் வாழ அவர் இறந்தார்.
துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.
பதிமூன்றாம் நிலை : மரித்த இயேசுவின் உடல் மரியின் மடியில்
தலைவர் :
“தாயின் மடியில் தலை வைத்தால் துயரம் தெரிவதில்லை” (கண்ணதாசன்) “தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை”. இறைவனை எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் காணமுடியாது என்றுதான் இறைவன் தாய்மார்களைக் கொடுத்துள்ளார். கருவறை முதல் கருவிழி போல் காத்த மகனைத் தோளைக் தொட்டிலாக்கித் தாலாட்டிய மகனை, இரத்தத்தைப் பாலாக்கி ஊட்டி வளர்த்த மகனை, பாராட்டிச் சீராட்டி வளர்த்த மகனை வேதனைக் கடலில் அமிழ்த்துள்ளார். இன்றும் சமுதாயத்தில், பலவிதமான மகன்களை இதயத்தில் வைத்து அழும் தாய்மார்கள் இதோ.
1. திடீர் விபத்து, வியாதியால் இறந்த மகன்களால்.
2. பாடுபட்டு நீரை வியர்வையாக்கி, வாழ வைத்தும் பெற்றோரைப் பராமரிக்காத மகன்களால்.
3. குடி, போதையினால் சீர்கெட்டு வாழும் மகன்களால்.
4. உழைத்துப் படிக்க வைத்தும் வேலையில்லா மகன்களால், வாழ்வில் குறிக்கோள் இல்லாமல் வாழும் மகன்களால்.
துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.
பதினான்காம் நிலை : இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்கின்றனர்
தலைவர் :
“ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே நமக்கு சொந்தமடா”. இங்கே ஒரு வரலாறு புதைக்கப்படுகிறது. ஒரு சகாப்தம் முடிவடைகிறது. பிறந்ததும் அடுத்தவரின் மாடடைக்குடில். அடக்கப்படுவதும் அடுத்தவரின் கல்லறையில். இலட்சியவாதி அழிக்கப்படுவதில்லை. மாறாக, விதைக்கப்படுகின்றான். சாவும், கல்லறையும் நமக்காகக் காத்திருக்கின்றன. எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பதைவிட, எப்படி வாழ்ந்தோம்? என்பதே முக்கியம். வாருங்கள் நாமும் சமாதி கட்டுவோம். நமக்கல்ல, மாறாக நம் சுயநலத்திற்கு, நம் ஆணவத்திற்கு, நம் மனிதத்தன்மைய்ற செயலுக்கு, நம் சாதி வெறிக்கு, நம் கொள்கையற்ற வாழ்வுக்கு, நம் சந்தேகப் புத்திக்கு, உதட்டளவில் சமாதி கட்டாமல், உள்ளத்தைத் தொட்டுக் கட்டுவோம்.
இறுதி ஜெபம் :
அன்பின் இறைவா, உம் சிலுவையின் பாதையை தியானித்து நடந்த எங்களைக் கண்ணோக்கும். எம் வாழ்வின் பாதையில் சிலுவையை எங்களின் அடிச்சுவடுகளாக, அடையாளமாக, தியானிக்க, வாழ்வில் நடக்க, எம்மோடு வாரும். கரம்பிடித்து வழிநடத்தும். ஆமென்.
No comments:
Post a Comment