Pages - Menu

Sunday, 3 December 2017

ஒளியின் விடிவு, இருளின் முடிவு, கிறிஸ்மஸ் சிறப்புக் கட்டுரை

ஒளியின் விடிவு, இருளின் முடிவு 
 கிறிஸ்மஸ் சிறப்புக் கட்டுரை 

ஒளி, இருள் இரண்டும் முரண்பட்டு நிற்பவை. படைப்பு முழுவதும் இருள் பரவியிருந்த வேளையில் ஒளி தோன்றுக (தொநூ 1:3) என்னும் சொல்லால் உருவமற்று வெறுமையாக இருந்த படைப்பு புத்துயிர் காணுகின்றது. இருளை விரட்டும் சக்தி ஒளிக்கு மட்டுமே உண்டு. ஒளியான இயேசு உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது (யோவான் 1:10) தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொண்டுள்ள எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார் (யோ 3:16).
அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக
இன்புறு சிந்தை  இருதியாக - பூதத்தாழ்வார்.

 ஒளியாம் கிறிஸ்துவின் பிறப்பு: 

யூதா நாட்டின் மலை நகர் பெத்லகேம். இங்குதான் சாமுவேல் இறைவாக்கினரால் தாவீது அரசனாக முடி சூட்டப் பெற்றார் (1 சாமு 16: 4‡13). விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு நானே ( யோவா 6:51)  என்றவர் அப்பத்தின் வீடு எனப் பொருள்படும் பெத்லகேம் என்னும் ஊரில் பிறக்கின்றார். சத்திரத்தில்  இடம் இல்லாத காரணத்தினால் மாட்டுத் தொழுவமே உலக மீட்பரின் பிறப்பிடமாகின்றது (லூக் 2: 1-7). நன்கு மக்கிய கழிவுகளாகிய தாவரக் கழிவுகள், கால்நடைக் கழிவுகள், கோமியம் கலந்த மண் மற்றும் தீவனக் கழிவுகள் நிறைந்த இடமே மாட்டுத் தொழுவம். ‘உலகின் ஒளி நானே’ என்றவரின் பிறப்பினால் மாட்டுத் தொழுவம் தெய்வக் குழந்தையின் இல்லமாக மாற்றம் பெறுகிறது.

ஒளியாகிய ஆண்டவரின் மாட்சி: 

நாளெல்லாம் உழைத்து களைத்து சோர்ந்து போய் உடலெங்கும்  அழுக்கடைந்து பஞ்சப் பரதேசிகளாய்த் திகழும் பாட்டாளி வர்க்கத்தின் சொந்தங்களாகிய இடையர்கள், தங்கள் கிடையைச் சாமக் காவல் காத்து வருகின்றனர். ஆண்டவரது பிறப்பின் செய்தி இவர்களுக்கே முன்னறி விக்கப்படுகின்றது. ஆண்டவரின் தூதர் இடையர் முன் வந்து நின்ற போது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது (லூக் 2:9). மேலும், ‘அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்’ (லூக் 2:10-12). என்ற செய்தியும் அறிவிக்கப்படுகிறது. ஏழ்மையில் உதயமான இயேசு, ஏழையரில்  ஏழையாக உள்ள இடையர்களுக்குத் தனது பிறப்பின் செய்தியை அறிவித்து ஏழைகள் மீது தனக்குள்ள பேரன்பினை வெளிப்படுத்துகின்றார்.

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!
அன்பெனும் குடிபுகு அரசே!
அன்பெனும் வலைக்குப்படும் பரம்பொருளே!
அன்பெனும் காத்தமர் அமுதே!
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே!
அன்பெனும் உயிரொளிர் அறிவே!
அன்பெனும் அணுவுள் அமைந்த போரளியே! - திருவருட்பா.

மனிதர் வாழ்வில் ஒளியேற்றிட இறைமுகம் களைந்து மனித முகம் ஏற்ற தெய்வம்:

முகம் ஒரு மனிதரின் அடையாளம். முகவரி ஒரு மனிதரின் இருப்பிடத்தைச்  சுட்டிக் காட்டுவது. முகம் உணர்வை, உறவை வெளிப்படுத்துகிறது. மகிழ்ச்சி, சோகம், ஆனந்தம், அருள், பக்தி, பசி, வறுமை, வலி, வெற்றி, தோல்வி, இழப்பு போன்றவற்றினை ஒருவரின் முகத்தை வைத்தே நாம் அறிந்து கொள்கின்றோம்.          வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14) என்னும் இறைவார்த்தை தெய்வமுகம் களைந்து நமது முகமெடுத்து நம்மில்  ஒருவரானதையே சுட்டுகிறது. இன்றைய அறிவியல் தொழில் நுட்ப உலகில், மனிதர் தனது முகத்தைக் தொலைத்து முகவரியிழந்து நிற்பதனால் நமக்காக இயேசு  முகமானார். உணவு, அரசியல், பேச்சு, உறவு, மொழி வழக்கு எல்லாமே கலப்படம்தான். அசலை அதாவது ஒரிஜினலை மறைத்து நகலை அதாவது  வெளிவேடத்தையே மனித முகம் காட்டி நிற்கின்றது. சொகுசு வாழ்க்கைக்காக பிள்ளைகளைப் பாசத்தோடு வளர்க்க நேரமில்லாத பெற்றோர்கள். இதன் காரணமாக வன்முறை, மதுவுக்கு அடிமையாகும் வாலிப உள்ளங்கள். சமூக வலைத்தளங்களில் மூழ்கி  யயிற்e நிஜுழியிe போன்ற தீய இன்டர்நெட் விளையாட்டில் ஈடுபட்டு தங்களையே தொலைத்து நிற்கும் நிலை. கரங்களில் கத்தி, துப்பாக்கி, மதுபாட்டில்கள் ஏந்தி இருப்பதும் முகவரியிழந்த நிலையே. இப்படிப்பட்டோரின் வாழ்வில் ஒளியேற்றி சுய முகம் அளித்து வாழ்ந்திட அழைப்பதுவே கிறிஸ்து பிறப்பு விழா.
எல்லாருக்கும் இன்று  திருவிழா
ஏழை மக்களுக்குப் பெருவிழா 
பொல்லார்க்கும் நல்லார்க்கும்
பொழிகின்ற மழை போலவே
பொல்லார்க்கும் அருள் வழங்கும்
இயேசு பிறந்த திருவிழா.

முதல் துறவு இல்லம் திருக்குடும்பம்:

கிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய நாயகர்கள் குழந்தை இயேசு, அன்னை மரியா, புனித சூசையப்பர். இவர்கள் உருவாக்கி வாழ்ந்து வந்த குடும்பமே முதல் துறவு இல்லம். கற்பு, கீழ்ப்படிதல், ஏழ்மை போன்றவற்றினை அனுசரித்த முதல் துறவிகள் இவர்களே. ஏழ்மையின் உச்சம் திருக்குடும்பம். தாழ்ச்சியின் ஊற்று திருக்குடும்பம். கற்பு நெறி தவறாது வாழ்ந்த பெற்றோர் மரியாவும் வளனாரும். ஏழ்மை தவழ்ந்த மாட்டுத் தொழுவமே  இயேசுவின் பிறப்பிடம். விண்ணகத் தந்தையின் நிலையை விட்டிறங்கி மனித முகம் எடுத்த நிகழ்வு தாழ்ச்சி. விண்ணகத் தந்தையின் திருவுளம் நிறைவேறிட முழுமையாக தன்னையே முழுமையுமாக அர்ப்பணம் செய்தது கீழ்ப்படிதலின் வெளிப்பாடு. பல்வேறு தியாகங்களை அனுசரித்து வாழ்ந்த குடும்பமே திருக்குடும்பம்.

ஆனால் இன்று ஏழ்மை, கற்பு, கீழ்ப்படிதல் போன்ற சொற்கள் வெறும் வெளிப்பகட்டுக்கான விழாக்களாகி விட்டன. ஏழ்மை இல்லாவிட்டாலும் எளிமையாவது வேண்டும். எதிலும் ஆடம்பரம், பகட்டு, பந்தா, ஊதாரித்தனம், தற்பெருமை. துறவு இல்லங்கள் என்றழைக்கப்படும்இடங்களில்கூட மேற் கூறப்பட்டி ருப்பவற்றின் ஆக்கிரமிப்பே அதிகமாகத் தெரிகிறது. இயேசு என்னும் ஒளியின் வெளிச்சத்தில் நாம் வாழ விரும்பினால் தாழ்ச்சி, எளிமை, கிடைத்ததை ஏற்கும் தியாக உணர்வு மேலோங்கியிருக்க வேண்டும். அப்போதுதான் இயேசு நமது இல்லத்தில் பிறப்பார். ஒளி  உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியை விட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது (யோவா 3:19).

கிறிஸ்மஸ் விழாவை அர்த்தமுள்ளதாக்கிட ஒரு சில பரிந்துரைகள்:

 1. ஈகோவை விட்டொழிந்து வெறுக்கும் நபரைத் தேடிச் சென்று பிளவுபட்ட உறவினைப் புதுப்பித்துக் கொள்ளுதல்.

2. இறைவனை மையமாகக் கொண்ட மகிழ்ச்சி மிகுந்த நிகழ்ச்சிகளை நடத்துதல்.

3. முன்பின் அறிமுகம் இல்லாத பிற சமயத்தினரை அணுகி இயேசுவின் அன்பினை வெளிப்படுத்தும் அறச் செயல்கள் புரிதல்.

4. உங்கள் பெயரை முன்னிலைப்படுத்தாது முதியோர் இல்லம் அல்லது அனாதை இல்லம் சென்று இயேசுவை மட்டுமே முன்னிலைப்படுத்துதல்.

5. குடும்ப உறவுகளைப் பயன்படுத்தும் நாளாகக் கொண்டாடுதல்

6. விதவையின் காணிக்கையினை  ஆண்டவர் பாராட்டினார். குறைந்த விலையிலான பொருளே ஆகினும் ஆத்மார்ந்தமாக பரிசுகள் வழங்குதல்.

7. நாம் எவரிடமிருந்து  திரும்பப் பெற முடியாதோ அவர்களுக்கு உதவிகள் செய்தல்.

8. இயேசு உலகோர் அனைவரின் மீட்பர். எனவே இதனை சர்வ சமய விழாவாகக் கொண்டாடுதல்.

9. கோபம், பொறாமை, எரிச்சல், வெறுப்பு போன்ற தீய குணங்களை அகற்றி அன்பு, அமைதி, மகிழ்ச்சி, நிறைவு போன்றவற்றினைக் கடைப்பிடித்தல். 

10. பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் உண்டு. ஆனால் உயிர் வாழ உணவுப் பொருள்களை விளைவிக்கும் உழவுத் தொழிலே முதன்மையானது. வாழ்வுக்கு ஆதாரமானது என்பதனை உணர்ந்து, விவசாயத் தோழர்களின் நியாயமான போராட்டங்களுக்குத் தோளோடு தோள் கொடுத்து உறுதுணையாயிருத்தல்.

‘உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள்’ என்பது வெளியாகும் (யோ 3:21).

ஆண்டவரின் அருள் வழங்கும் புத்தாண்டு:

நிகழாண்டு தொடக்கத்திலிருந்து இந்த நாள் வரை நடந்த நிகழ்வுகளைப் பின்னோக்கிப் பார்ப்போம். ‘கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கின்றேன். நன்றியோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்’ என்று நன்றிப் பண் இசைப்போம். வாழ்வின் வெற்றிக் களிப்பில் மிதந்து விடாமல்  தோல்வியில் துவண்டு விடாமல் புத்தாண்டில் அடியயடுத்து வைப்போம்.

2018 ஆண்டவரின் அருள் வழங்கும் புத்தாண்டு. ஏனெனில் ஆண்டவர் ஆண்டு முழுவதும் தமது நலத்தால் முடிசூட்டுகின்றார். அவரது  வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன(திபா65:11). ‘உங்களுக்காக நான் வைத்திருக்கும் திட்டங்கள் வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல’ என்கிறார் ஆண்டவர் (எரே23:11). நல்லதே நடக்கும் என்று நம்புவோம். நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கியிருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி 11:1).

மங்கலம் பொங்கும் பொங்கல் விழா: 

உலகில் முதன்மையான தொழில் உழவுத்தொழில். அதுவே தமிழரின் தொழில். எனவேதான்

 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழதுண்டு பின் செல்பவர் (குறள் 1033)

என்று வள்ளுவர் கூறுகின்றார். படைப்பிற்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் தமிழரின் பாரம்பரியம் மிக்க பண்பாட்டுப் பெருவிழா. இதுவே பொங்கல் விழா. பருவமழை பொய்த்துப் போனதாலும், மீத்தேன் எரிவாயு திட்டம் போன்றவற்றாலும் சாகுபடி நிலங்கள் குறுகிக் கொண்டே வருகிறது. ஊருக்கெல்லாம் சோறிடும் உழவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிக் கொண்டே வருகிறது. தை மகளின் வருகையினாலே விவசாயிகளின் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றப்படட்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும்
தரணியிலே ஒளி பிறக்கும்
தை மகளின் வருகையிலே
பரணி சொல்லும் வழி பிறக்கும்

இருள் எரித்து ஒளி வளர்ப்போம்:

‘கடவுள் ஒளியாய் இருக்கிறார். அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம். உண்மைக்கேற்ப வாழாதவராவோம். மாறாக, அவர் ஒளியில் இருப்பது போல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் நம்மை எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.’
(1 யோவா 1: 5-7).

அனைவருக்கும் இனிய இயேசு பிறப்பு, புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துக்கள்.... 

No comments:

Post a Comment

Ads Inside Post