பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்.
பேராசிரியர் முனைவர் ச. சாமிமுத்து, திருச்சி
நம் தாய்த்திரு இந்திய நாடு 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் ஆங்கிலேயர் அடிமை ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. இன்று 70 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. நான் வெள்ளையர் ஆட்சியில் 1931 இல் அடிமை இந்தியனாகப் பிறந்து 15 ஆண்டுகள் கடந்த பின் அண்ணல் காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்ற தொடர் அறப் போராட்டங்களின் விளைவால் இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வழங்கியது இங்கிலாந்து அரசு. இந்திய நாட்டிலிருந்து வெளியேறியது. 1950 ஜனவரி 30 இல் நம் நாடு நமக்கே உரிய குடியரசு நாடாக, டாக்டர் அம்பேத்கார் தலைமையில் அமைந்த இந்திய அரசியல் சட்ட அறிஞர் பேரவையால் உருவாக்கப் பெற்ற அரிய பெரிய அரசியல் ஒழுங்கற்று சட்டப்படி இந்தியா குடியரசு நாடாக மலர்ந்தது. அதன் அடிப்படையில் நான் முழு குடி உரிமை பெற்ற இந்தியக் குடிமகனாகத் தலை நிமிர்ந்தேன். இதே நிலைதான் அனைவர்க்கும்.
அன்று இந்நாடு எல்லாத் துறைகளிலும் பின் தங்கிய ஏழ்மைப்பட்ட நாடு. மக்கள் தொகை மிகுந்த நாடு. பொருளாதார வளர்ச்சி குன்றியநாடு. வேளாண்மைத் தொழிலைத் தவிர வருமானத்திற்கான பிறதொழில், நிறுவனங்கள், வணிகத்திற்கான பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இல்லாமல் மக்கள் வாழ்க்கை மிகமிகப் பின் தங்கி இருந்தது.
நாடு விடுதலை பெற்ற பிறகுதான், மக்களாட்சி மலர்ந்த பின்புதான் நாடு பல்துறை வளர்ச்சி காணும் முயற்சியில் ஈடுபட்டது. அரசியல் சட்டப்படி குடிமக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற பாராளுமன்ற, சட்டமன்ற அரசியல் கட்சி சார்ந்த அங்கத்தினர்களின் கூட்டு முயற்சியால் நாடு கல்வியிலும், தொழில் துறையிலும், போக்குவரத்து வசதியிலும், வணிக்கத்திலும், பன்னாட்டு ஒத்துழைப்பிலும் பையப் பைய முன்னேறிக் கொண்டிருக்கின்றது. பல உலக நாடுகளின் முன்னேற்றத்திற்கு இணையாக இல்லை என்றாலும், இந்த 70 ஆண்டு இந்திய நாட்டின் அரசியல் விடுதலை வாழ்வில் நம் தாய்த்திருநாடு பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.
இன்றைய நம் நாட்டு இளைஞர்களின் கண்களுக்கு இந்திய நாட்டைப் பிற உலக நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்நாடு ஏழ்மை நாடாகத் தான் தோன்றுகின்றது. ஆனால், என்னைப் போன்று 80 வயதைக் கடந்த முதியவர்களுக்கு இந்நாடு எவ்வளவோ வளர்ச்சி பெற்றிருக்கின்றது என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.!
நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அமரர் அப்துல் கலாம் அவர்கள், இந்தியாவின் இன்றைய பல்துறை வளர்ச்சியை கூர்ந்து பார்த்துக் கணித்துக் கூறிய அவர், இந்திய நாடு 2020 இல் ஒரு வல்லரசு நாடாக மாறும் என்றார். நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி, தருவதாக அவர் கூற்று அமைந்துள்ளது. ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலையை நோக்குகையில் மத்தியில் அரசு கட்டிலில் அமர்ந்து ஆட்சி புரிவோர் செயல்பாடுகள் வல்லரசு நாடு வன்முறை நாடாக மாறி விடுமோ என்னும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.
1921 ஆம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த பாட்டுக்கொரு புலவனெப் போற்றப் பெற்ற பாரதி, நாடு வெள்ளையரின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற இந்நாட்டு மக்களின் சாதி வெறியும் சமய வெறியும் தடையாக இருக்கக் கண்டார். அதனால் அன்று,
“ஜாதிமதங்களைப் பாரோம் ‡ உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே ‡ அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே”
என்று தேசிய கவிஞர் பாரதியார் பாடினார். இன்று நாம் பெற்ற சுதந்திரத்திற்கு, விடுதலை வாழ்விற்கு அச்சுறுத்தலாக இருப்பவை அன்று அவர் கூறிய அதே சாதி வெறியும் சமய வெறியும் தாம்.
இந்திய அரசியல் ஆளுமைச் சட்டப்படி, இந்தியக் குடியரசு என்பது இன்றைய இந்திய 120 கோடி மக்களுக்கும் சம உரிமை வழங்கும் குடியரசாகத்தான் இருக்க முடியும். இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமே இல்லை.
இந்நாட்டில் 29 மாநிலங்களும் 7 யூனியன் பகுதிகளும் உள்ளன. இப்படிப்பட்ட இந்திய நிலப்பரப்பில் ஒரு நாட்டுக் குடி மக்களாக ஒற்றுமையுடன் இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அரசியல் வாழ்வு வாழவேண்டியவர்கள் தாம் இந்த 120 கோடி இந்திய மக்களும். மத்தியில் இருந்து ஆள்பவர்களும் மாநிலத்தில் இருந்து ஆள்பவர்களும் மக்களால், மக்களுடைய மக்களுக்காக,
அரசாளுபவர்கள். மக்களின் பன்முக நல்வாழ்வுக்காக வளர்ச்சிக்காகத் தொண்டாற்ற வந்தவர்களே அன்றி, மக்களைப் பிளவுபடுத்தவோ, அச்சுறுத்தவோ அரசியல் சட்டம் வழங்கியுள்ள தனி மனித உரிமைகளைப் பறித்துத் தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டு வெறியாட்டம் ஆடவோ வந்தவர்கள் அல்லர்.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்ற இளங்கோவடிகள் பிழைபுரியும் அரசியல்வாதிகளுக்குச் சிலப்பதிகார காப்பியத்தின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசாள வரும் எந்த ஓர் அரசியல் கட்சியும் அதனுடைய தனிப்பட்ட கொள்கையை மக்கள் மீது திணிக்க, நினைத்து செயல்படுவது நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்துச் சீரழிக்கும் செயலாகும். இந்த நாடு பல்வேறு மொழிகளையும் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களையும் கொண்ட, மக்களைக் கொண்ட நாடு. இந்திய அரசியல் சட்டம் ஒவ்வோர், இந்தியக் குடிமகனுக்கும், அவரவரது மொழியைப் பேச அவரவரது சமயத்தைப் பின்பற்றி வாழ, அவரவரது பண்பாட்டு வாழ்க்கையில் பாதுகாத்து உரிமை வாழ்வு வாழ இந்திய அரசியல் சட்டம் இடமளித்திருக்கும் போது, ஒரு கூட்டத்தார் மொழியையும், சமயத்தையும், கலாச்சாரத்தையும் இன்னொரு கூட்டத்தார் மீது, இனத்தார் மீது வலிய திணிக்க நினைப்பது, வன்முறைச் செயல்களைக் கையாள்வது இந்திய மக்களின் சுதந்திரத்தையே குழிதோண்டிப் புதைக்க நினைக்கும் காரியமல்லவா?
இந்துத்துவாக் கோட்பாட்டை அனைத்து இந்தியரும் ஏற்று வாழவேண்டும் என்பதா இந்திய அரசியல் சட்டத்தின் கோட்பாடு, இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் அவரவரது சமயத்தை சமய வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழ கடந்த எழுபது ஆண்டுகாலச் சுதந்திர இந்தியாவில் உரிமை வாழ்வுச் சூழ்நிலை இருந்ததை, இன்றைய மதவாத, மத அடிப்படைவாத, பிரிவினைவாத அரசில் கருத்தாளர்கள், கொள்ளையர்கள் மாற்றிட நினைப்பது, ஒரு சமயத்தவரின் தேசிய உரிமையை மற்றொரு சமயத்தினர் பறிக்க நினைப்பதுவா அண்ணல் காந்தியார் இந்தியக் குடிமகன் ஒவ்வொருவனுக்கும் தந்து விட்டுச் சென்ற அகிம்சை கோட்பாடு சகிப்புத் தன்மைக் கோட்பாடு?
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுவே இந்தியக் குடியரசு நாட்டின் அனைத்து மக்களின் அனைத்துத் தேசிய வாழ்க்கை வளர்ச்சிக்கான சரியான வழியாக அமையும். இல்லையயன்றால் நாம் வெள்ளையனை எதிர்த்துப் போராடிப் பெற்ற அரசியல் சுதந்திரம். குடியாட்சி வாழ்வு உரிமை கேள்வி குறியாகிவிடும்.
இன்று இந்திய நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் சமய அடிப்படைவாதத்தை அன்றே முன்னுணர்ந்து தான். இப்படிப்பட்ட போக்கு இந்திய நாட்டின் சுதந்திர வாழ்விற்கு, நாட்டின் சுதந்திர வாழ்விற்கு, நாட்டின் ஒற்றுமைக்கே கேடாகி விடுமோ என்றுதான்.
“தண்ணீர்விட் டோ வளர்த்தோம் சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்;
கருகத் திருவுளமோ?”
என்று உளம் நொந்து பாரதியார் பாடினாரோ!
நாம் நட்டு வளர்க்கும் சுதந்திரப் பயிர் வாடாமல் வளர்ந்து பலன்தர நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று காப்போம்.
No comments:
Post a Comment