வெற்றி உங்கள் கையில்
இசையை தன் வசமாக மாற்றிய ராசா
அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்
அவர் பெயர் ராசய்யா. ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரைதான் படித்தார். நன்றாகப் பாடுவார். மெட்டெடுத்துப் பாடுவதில் வல்லவர். அதற்கு ஒரு உதாரணம் :
“குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால்
வாடகை என்ன தர வேண்டும்”.
இது ஒரு பிரபலமான திரைப்பட பாடல். அதை ராசய்யா பழனி முருகன் பக்தர்களிடம் இவ்வாறு பாடினார்.
“முருகப்பெருமான் கோயிலிலே
முடியயடுக்க நான் வரவேண்டும்
முடி எடுக்க நான் வருவதென்றால்
காணிக்கை என்ன தரவேண்டும்?”
பொதுவுடைமைப் பாடல்களை கச்சேரிகளில் பாட வாய்ப்பு கிடைத்தது. கச்சேரியில் பாடி கலக்கினார். டேய், ராசய்யா உம் பாட்டு அருமையாக உள்ளது. நீ சினிமாவில் பாடு, சென்னைக்குப் போ என்று பலர் அவரிடம் சொன்னார்கள். ராசய்ய சென்னைக்குச் சென்றார். வீதி வீதியாய் அலைந்தார். எட்டு வருடம் கடந்துவிட்டது. பட்டினி, பழக்கப்பட்ட ஒன்றாயிற்று. ஆனால் அவர் மனம் உடைந்து போகவில்லை. மெல்லிய காற்று அவர் மீது வீசியது. ஆம் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அழைத்து அவரது இசைக்குழுவில் இசைக்கருவிகளை வாசிக்க வாய்ப்புக் கொடுத்தார். ஆரம்பத்தில் ராசய்யாவிற்கு நாட்டுப்புற இசை மட்டுமே தெரியும். பின்னர் கர்நாடக சங்கீதம். அதன்பின் மேற்கத்திய இசை, இந்துஸ்தானி இவ்வாறு இசைத்துறையில் கற்று தேர்ந்தார். பிறகு, சினிமா துறையில் தனி இடம் பிடித்தார். இந்தியாவில் ஸ்டீரியோ போனிக் இசையை முதன்முதலில் புகுத்தியது ராசய்யா தான்.
1983ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்று உலகப்புகழ் பெற்ற மெல்லிசை அரசர் பால்மரியாவை சந்திக்க வாய்ப்பு கேட்டார். பால்மரியாவும் அவருக்கு ஐந்து நிமிடம் மட்டுமே ஒதுக்கினார். கர்நாடகா சங்கீதத்தையும், மேற்கத்திய இசையையும் ஒருங்கிணைத்து அமைத்த இசைப்பேழையை பால்மரியாவுக்கு இசைத்துக் காண்பித்தார். இரண்டு மணிநேரம் கடந்தது. இது இந்திய சங்கீதமல்ல, சர்வதேச சங்கீதம் என்று பால்மரியா புகழ்ந்தார். லண்டனில் உள்ள இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்குச் சொந்தமான ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவிடம் இருந்து ராசய்யாவுக்கு அழைப்பு வந்தது. ஜான் ஸ்காட் தலைமையில் 81 இசைக்கலைஞர்கள் இசைக் கருவிகளை இசைத்தனர். அதில் ராசய்யாவின் சிம்பொனி இசை மட்டுமே முழுமையாக இசைக்கப்பட்டது. அந்த இசைக்கலைஞர்கள் அனைவரும் இசைக்கருவியை கீழே வைத்துவிட்டு கைதட்டி வாழ்த்துக் கூறினர். ராசய்யாவுக்கு மேஸ்ட்ரோ பட்டம் வழங்கப்பட்டது.
என்னங்க, ராசய்யா யாருன்னு நீங்களே கண்டுபிடிச்சிருப்பீங்களே!!! ஆமாங்க அந்த ராசய்யா தான் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்திற்கு வாயால் பாடி, கையால் மேசையில் தாளம்போட்டு பஞ்சு அருணாசலத்திடம் வாய்ப்பு கேட்டவர். இன்றைக்கு அவருடைய வளர்ச்சியைப் பார்த்தீர்களா? கிடைத்த வாய்ப்புக்களை வெற்றிப் படிக்கட்டுகளாக்கி தன்னிடம் இருந்த அறிவையும், திறமையையும் அகலப்படுத்தி, ஆழப்படுத்தி இந்த அகிலத்தையும் தன்வசமாக்கிய இசைஞானியின் வாழ்வு நமக்கும் பாடமாக அமையட்டும். வாய்ப்புக்கள் நம்மைத் தேடி வந்து கதவைத் தட்டாது. நாம் தான் வாய்ப்புக்களைத் தேடி ஓட வேண்டும். அப்போது ஏற்படும் ஏமாற்றங்களை ஏணிப்படிகளாக மாற்றி, துன்பங்களை துரத்திவிட்டு, வேதனைகளை வேரெடுத்து, சங்கடங்களுக்கு சவுக்கடி கொடுத்து, தோல்விகளைத் தோற்கடித்து, சவால்களை சந்தோமாய் சந்தித்து சக்திமானாய் மாறுவோம். வெற்றியாளர்களாக வலம் வருவோம்.
வியர்வைத் துளிகளும்
கண்ணீர் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.
ஆனால், அவை தான்
வாழ்வை சுவையாக மாற்றும்.
No comments:
Post a Comment