கதையல்ல நிஜம்
அவளும் பெண் தானே
- திருமதி. ஆரோக்கியமேரி
கண் துஞ்சாது, கடும் குளிரில் பனிக்காற்று. இதோடு போட்டியிட்டு, இந்திய நாட்டின், மக்களுக்காக இந்திய எல்லையோர பகுதியில் இராணுவ வீரராக, காவல் புரியும் ஆறுமுகம், கம்பீரமான தோற்றம் உடையவர். யாரிடமும் இனிமையாக பழகும் பண்புள்ளம் கொண்டவர். அவருடைய அப்பா, ஒரு கம்பெனியில் பணிபுரிபவர். தன் மகனை நல்லதொரு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்திருந்தார். பையனும் நன்றாகத்தான் படித்துக் கொண்டிருந்தான். பள்ளி பருவத்திலே காதலும் மலர ஆரம்பித்து விட்டது. அதே ஊரைச் சேர்ந்த வெங்கடாசலத்தின் மகள் மணிமாலாவும் படித்தாள். இந்த மணிமாலாவுக்கும் அந்த ஆறுமுகத்துக்கும் சின்ன வகுப்பிலே முளைத்த காதல், உயர்நிலைப் படிப்பு வரை தொடர்ந்தது. இந்த பையன் இராணுவத்தில் சேர்ந்து சில ஆண்டுகள் கழித்து, தன் தந்தையிடம் தன் காதலை தெரிவிக்கிறான். அவளும் தன் பெற்றோரிடம் தெரிவிக்கிறாள். இருவருக்கும் திருமணம் நடந்தது. குடும்பம் சந்தோமாக, இறக்கைக் கட்டி பறக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனந்தப் பூங்காவிலே ஒரு நாள் புயல் வீசத் தொடங்கியது. கணவனின் தொண்டையில் கேன்சர் கட்டி. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் குணம் பெறவில்லை. இராணுவத்தை விட்டு வெளியேறி, வேறு ஊரில் குடியிருந்தனர். குடும்பம் வறுமையில் வாடியது. தன்னுடைய கணவனையும், குழந்தையையும் விட்டு விட்டு இன்பத்தை நாடி, உல்லாச வாழ்க்கையைத் தேடி, வேறு ஓர் ஆடவனுடன் காதல் பச்சைக்கிளி பறந்து போய் விட்டது. இராணுவ வீரர் அவருடைய அக்கா ஆதரவிலிருந்து கொஞ்ச ஆண்டுகள் கழித்து இறந்து விட்டார். ஆசைநாயகனின் இறப்பைக் கேள்விப்பட்டும், ஆசைநாயகி எட்டிக்கூடப் பார்க்காத நிலை. பெண்களை தெய்வத்திற்கும், பாரத தாய்க்கும் ஒப்பிடுவார்கள். நளவெண்பாவில் எல்லோரும் படித்திருக்கிறோம்.. தொழுநோயால் உள்ள தன் கணவனை கூடையில் வைத்து தூக்கிச் சென்றாள் நளாயினி என்று இவள் பிறந்ததும் இந்த பாரத மண்ணில் தான். வேறு ஓர் ஆடவனுடன் ஓடிய மணிமாலா பிறந்ததும் இந்த பாரத மண்ணில் தான்.
அதே ஊரில் மற்றொரு குடும்பம். செல்வ செழிப்போடு வாழும் குடும்பத்தில் 3 அண்ணன்கள், 2 அக்காக்கள், கடைக்குட்டியாக பிறந்தவள்தான் கோமதி. கூட பிறந்த எல்லோருக்கும் திருமணம் ஆனவுடதன் கடைக்குட்டி கோமதிக்கும் திருவண்ணாமலையில் வசிக்கும் வேலாயுதத்தின் ஒரே பையன் சுந்தருக்கும் திருமணம் முடிந்தது. வாழ்க்கைச் சக்கரங்கள் இன்பத்தில் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால், குழந்தைச் செல்வம் இல்லை. சில ஆண்டுகள் கழித்து, குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. கணவன் சுந்தர் விபத்தில் இறந்து விட்டார். மாமனார், மாமியாரை விட்டு விட்டு, தான் பிறந்து வளர்ந்த, தன் வசதியான தன் அப்பா குடும்பத்திற்கே சென்றிருக்கலாம். கோமதியின் பெற்றோர்கள் வேறு ஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். அவற்றை எல்லாம் வேண்டாமென்று கூறி, மறுமணம் செய்து கொள்ளவில்லை. தன் வயதான மாமனார், மாமியாரை காப்பாற்றுவதிலேயே ஒரே குறிக்கோளாக இருந்தாள் கோமதி.
தினந்தோறும் கூலி வேலைக்குச் (சித்தாள் வேலை) சென்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்தே, அவர்களைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறாள். தன் சுகத்தை மறந்து பெற்ற தாய், தந்தையைப் போல், மாமனார், மாமியாரை காப்பாற்றிக் கொண்டு வருகிறாள். “தன் சுகத்தைத் தேடி ஓடிய மணிமாலாவும் ஒரு பெண் தான். தன் சுகத்தை மறந்து, பெற்ற தாய் தந்தையைப் போல் மாமியாரை மாமனாரை பாதுகாத்துவரும் கோமதியும் ஒரு பெண் தானே”.
“கண் தெரியாத தாய் தந்தையை கூடையில் வைத்து, தூக்கிச் சென்றான் சரவணன் என்று இராமாயணத்தில் படிக்கின்றோம். வயதான மாமனார், மாமியாரை கண்ணின் இமைப்போல் காத்து வருகின்றாள் இந்த கோமதி”.
No comments:
Post a Comment