வருந்திடு, திருந்திடு, மகிழ்ந்திடு
தவக்காலச் சிந்தனைகள்
- அருள்பணி. அ. பிரான்சிஸ்,
பாபநாசம்.
தவஞ் செய்வார் தங்கபடுஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு- (குறள் 266)
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவார். அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே. ஆன்மீக முன்னேற்றத்திற்காக உடலாலும், வாக்காலும், மனதாலும் செய்யப்படும் சாத்வீகமான ஆன்மீக செயல்பாடுகளே தவம் எனப்படுகிறது. உடலையும், மனதையும் உருக்கிச் செய்யப்படும் நோன்பு, தியானம், விரதம், பதயாத்திரை, தீர்த்த யாத்திரை, செபம் சொல்லுதல் போன்றவை தவச் செயல்பாடுகளே.
இந்து சமயத்தில் திருநீற்றின் விளக்கம்
நாம் வெளியில் செல்லும்போது அங்கு இருக்கம் அதிர்வுகளை பல வழிகளிலும் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நமது உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது என்கின்றனர். அதனால்தான் நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாச்சாரத்தில் இடம் பெற்றுள்ளது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல்தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு நோய் எதிர்ப்புச் சக்தி உண்டு என்றும், விபூதி இட்டுக் கொள்ளும்போது வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம் என்றும் கருதுகின்றனர். நம்மைச் சுற்றிலும் இறைமை மிளிரும். இதனால் தீயவனவற்றைத் தவிர்க்க முடியும்.
விவிலியம் கூறும் சாம்பல் அல்லது திருநீறு
:
சாம்பல் என்ற சொல் 56 முறையும், நெருப்பு என்னும் சொல் 641 முறையும் விவிலிய நூல்களில் காணப்படுகின்றது. இது கீழ்க்காணும் அடையாளங்களைக் குறிக்கின்றது.
எசேக் 27 : 30 அவமானத்தின் அடையாளம்
லேவி 6 : 11 பலியிடுதலின் அடையாளம்
தொநூ 37 : 34 துக்கத்தின் அடையாளம்
யோபு 42 : 6 மனமாற்றத்தின் அடையாளம்
எபி 9 : 13 தூய்மைப்படுத்துதலின் அடையாளம்
திருநீறு பூசி தொடங்கும் தவக்காலம் :
தொடக்ககாலத் திருச்சபையிலேயே சாம்ல் பூசித் தவக்கோலம் பூண்ட வரலாற்றினைக் காணுகின்றோம். புனிதர்களாகிய பொலிக்கார்ப் மற்றும் ஐரேனியஸ் விவிலிய நிகழ்வுகளின் அடிப்படையில் சாம்பல் பூசி ஆண்டவரின் பாடுகளை தியானிக்கும் காலத்தைக் கொண்டாடியதாகத் தெரிவிக்கின்றனர். அது மட:மன்று 325இல் கூடிய நிசேயா திருச்சங்கம் இயேசுவின் உயிர்ப்பு விழாவினைக் கொண்டாடுவதற்குத் தயாரிப்பாக சாம்பல் பூசி 40 நாட்கள் துக்க நாட்களாகக் கடைப்பிடி;க வேண்டும் என்கின்றது.
மேலும் 4, 5ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த புனிதர்களாகிய அத்தானிசியுஸ் அவர்களின் விழாக்காலக் கடிதங்கள்
(க்ஷூeவிமிஷ்ஸழியி யிeமிமிerவி), எருசலேம் நகர் புனித சிரில். அலெக்சாண்டிரியா நகரத்து புனித சிரில் மற்றம் புனித முதலாம் லியோ ஆகியோரின் மடல்களும் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கப்பட வேண்டியதின் கருத்தினை வலியுறுத்துகின்றன.
ஏன் 40 நாட்கள்?
40 என்ற சொல் 98 முறை விவிலிய நூல்களிலும், இஸ்லாமியரின் குரானில் 5 முறையும் பயன்படுத்தப்படுகிறது.
- நோவா காலத்து 40 நாள் பெருவெள்ளம். (தொ நூ 6 : 1 - 10 : 32)
- மோசேயின் 40 நாள் சீனாய் மலை அனவபம் (விப 19 : 1 -24 : 18)
- ஒரேபு மலையினை அடைந்திட இறைவாக்கினர் எலியா நடந்த நாட்கள் 40 (1 அரசர் 19 : 1 - 7).
- ஆண்டவர் இஸ்ராயேல் மக்களைப் பாலை வனத்தில் காத்த ஆண்டுகள் 40 (இச 29 : 5)
- புதிய ஏற்பாட்டு நாயகன் கிறிஸ்து சோதிக்கப்பட்ட நாட்கள் 40 (மாற்கு 1 : 13).
வெற்றியின் சின்னம் திருநீறு :
இந்த உலக வாழ்வே ஒரு போராட்டக் களம். சோதனைகளைச் சாதனைகளாக்கிட்ட இயேசுவின் அடியார்களாகிய நாமும் நம் வாழ்வின் பாவச் சோதனைகளை வென்று வாழ்ந்திட திருநீறு பூசுகிறது திருச்சபை. தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! உன்னதத்தில் ஓசன்னா ( மத் 21 : 9) என்று வெற்றி முழக்கம் செய்திட்ட மக்கள் தங்களின் கரங்களில் குருத்தோலைகள் ஏந்தி ஆண்டவரை யயருசலேம் நகரினுள் சரவேற்கின்றனர். இந்தக் குருத்தோலை வெற்றியின் அடையாளம் (1 மக் 13 : 51, திவெ 7 : 9). இந்தக் குருத்தோலைகளை எரித்துச் சாம்பலாக்கி அதனை நமது நெற்றியில் அணிந்து வாழ்க்கையில் வீறு கொண்டு வாழ அழைக்கப்படுகின்றோம்.
பொய்தீர் ஒழுக்க நெறி :
மனித மனம் இளமையிலிருந்தே தீமையின் மீத நாட்டம் கொண்டுள்ளது (தொ நூ 8 : 21). எனவே மனிதன் பொய்தீர் ஒழுக்க நெறி கொண்டு வாழும்போது மட்டுமே தீமையின் மீதுள்ள கவர்ச்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியும்.
இதனையே திருவள்ளுவர்,
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றான் நீட வாழ்வார் என்கின்றார்.
ஐம்புலன்களினால் விளையும் அவா அறுத்து பொய்மையில்லாத ஒழுக்க நெறியின்படி வாழ்பவரே உலகம் உள்ளளவும் அவர் புகழ் நிலைபெற வாழ்வார். பொய்தீர் ஒழுக்க நெறி வாழ்வதற்கான பயிற்சிக் காலமே இத்தவக்காலம். எனவே பொய்தீர் ஒழுக்க நெறி வாழ்வு பற்றி இவண் ஆய்வோம்.
புனிதமான நோன்பு (யோவேல் 1 : 15) :
வாழ்வின் உயர்வினுக்காக தான் விரும்புவதனை ஒதுக்கி வாழ்தலே நோன்பு. இந்து மதம் மாதத்திற்கு 15 நாட்கள் நோன்பு அனசரிக்க அழைக்கின்றது. இஸ்லாம் மதத்தவர் ரமலான் மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை மிக கடினமான நோன்பினை ஒன்றும் சாப்பிடாமல்க் கடைப்பிடிக்கின்றனர். ஆன்ம ஈடேற்றம் கருதிச் செய்யும் சாதனைகளில் ஒன்றே விரதம் அல்லது நோன்பாகும். இதனோடு தொடர்புடைய மற்றொரு சொல் உபவாசம். உண்ணும் உணவு, செய்யும் தொழில், உறங்கும் நேரம் இவற்றின் அளவைக் குறைத்து செபம், தியானம், இறைவார்த்தை வாசிப்பு ஆகிய புனித காரியங்களில் ஈடுபடுதலே தூய ஆவிக்குரிய உபவாசம் எனப்படுகின்றது.
புலனைந்தும் பொறி கலங்கி
நெறி மயங்கி அறவழிந்திட்டு என்கின்றார் திருஞான சம்மந்தர்.
அறவழி வாழ்வே கிறிஸ்தவ வாழ்வு. புலனைந்தினையும் அடக்கிடும் பயிற்சிக் காலமே தவக்காலம். தவக்கோலம் பூண்டு வாழும் நோன்புகளின் பன்முதல் பண்புகள் இதோ ...
தவக்கால நோன்புகள் : வாய்மையும், நல்லுறவும் நாடும் நாள்களே நோன்பு நாட்கள். இது களிப்பும், மகிழ்ச்சியும் நிறைந்த நாள்கள் (செக் 8 : 19).
அ. சிந்தனை நோன்பு :
எருசலேமே, நீ விடுவிக்கப்பட வேண்டுமானால் உன் இதயத்திலிருந்து தீயதைக் கழுவி விடு (எரே 4 : 14) என்கின்றார் ஆண்டவர். நன்மை, தீமைகளின் பிறப்பிடம் சிந்தனை. எனவே நல்லரை கேட்பதில் சிந்தனையைச் செலுத்தி, அறிவூட்டும் மொழிகளுக்குச் செவிசாய்க்க வேண்டும் (தி பா 119 : 27). அறிவுக் கூர்மை கொண்ட சிந்தனையில் அமைந்த உள்ளம் சுவரை அழகு செய்யும் பூச்சுப் போன்றது (சீஞா 22 : 17).
ஆ. சொல் நோன்பு :
நரம்பில்லா நாவுடையோனே! நீ விரும்பும் சொற்கள் அனைத்தும் கேடு விளைவிப்பனவே (திபா 52 : 4). கடுங்சொல்லோ சினத்தை எழுப்பும் (நீமொ 5 : 1). இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும். பண்பான பேச்சு உன் மதிப்தைப உயர்த்தும் (சீஞா 6 : 5).
இ. செயல் நோன்பு :
என் சகோதரரே, தீச்செயல் செய்யாதிருங்கள் (தொநூ 19 : 7). உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன. உங்கள் பாவங்களே அவர் செவிசாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளனர் (எசாயா 59 : 2). ஆகவே இறைவன் விரும்பும் நோன்பு என்ன? மத்தேயு நற்செய்தி 25 : 31 ‡ 46 பகுதி. இதற்குப் பதில் தருகின்றது.
1. பசியாய் இருப்போருக்கு உணவளித்தல்.
2. தாகமாய் இருப்போரின் தாகத்தைத் தணித்தல்.
3. அன்னியரை ஏற்றுக் கொள்ளுதல்.
4. ஆடையின்றி இருப்போரை உடுத்துதல்.
5. நோயுற்றிருப்போரைக் கவனித்துக் கொள்ளுதல்.
6. சிறையிலிருப்போரைத் தேடிச் செல்லுதல்
ஈ. ஊடக நோன்பு :
இன்றைய சூழலில் ஊடகங்கள் மனித வாழ்வினை அதிகம் பாதிக்கின்றன. இவற்றினை அளவோடு பயன்படுத்தி நேர்மறை சிந்தனையோடு செயல்பட்டு சமூக மறுமலர்ச்சியினுக்குச் செயல்படல் காலத்தின் கட்டாயமாகும்.
இறுதியாக :
மனம் போன போக்கில் வாழ்ந்து சொத்துக்களையயல்லாம் ஊதாரித்தனமாகச் செலவழித்து தந்தையின் அரவணைப்பினை தேடிவந்த ஊதாரி மகன் போன்று விண்ணகத் தந்தையோடு நம்மை இணைந்துக் கொள்வோம். பாவங்களை எண்ணி மனம் வருந்திடுவோம். பாவப் பரிகாரமாக உடலை வருத்திடுவோம். மனம் திருந்திடுவோம். மகிழ்வோடு வாழ்ந்திடுவோம் (லூக்கா 15 : 11 ‡ 31).
கொடுக்கப்பட்டிருக்கும் இத்தவக் காலத்தில் கெடுதலை தருபவைகளை தவிர்ப்போம். ஏதாவது ஒரு செயலை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட முன்வருவோம். அச்செயலை இப்போதே தேர்ந்தெடுப்போம். ஒரு தவக்காலத்தில், ஒவ்வொரு நாளும், ஒரு ஏழையுடன் சேர்ந்து உண்ணுதல் என்ற செயல்பாட்டை முன்நிறுத்தி ஒருவர் செயல்பட்டார். அதாவது, காலை உணவு உண்பதில்லை. மதியம் ஒரு ஏழையை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் சேர்ந்து உணவு அருந்தினார். மிகவும் திருப்தியாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது என்றார். இதோபோன்ற அன்பு செயல்களை நடைமுறைபடுத்தி தவக்காலத்தை வளர்ச்சியின் காலமாக்குவோம்.
No comments:
Post a Comment