Pages - Menu

Saturday, 4 February 2017

பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு 12-02-2017

பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு   12-02-2017

சீராக் 15 : 15 - 20 ,   1 கொரி 2 : 6 - 10,  மத் 5 : 17 - 37

மத்தேயுவின் நற்செய்தி இன்று ஜெருசலேம் அழிவிற்கு பிறகு இருந்த சூழ்நிலையை பிரதிபலிக்கின்றது. நற்செய்தி முழுவதும் இயேசு சட்டத்தின் நிரந்தர உறுதித்தன்மையை எடுத்தியம்புகின்றார். ஆனால் புதுவகையான புரிதலோடு அதிகாரத்தோடு கொடுக்கின்றார். சில இடங்களில் பழைய சட்டங்களை அழித்துவிடுகிறார். (விவாகரத்து, பழிக்குப்பழி). சில இடங்களில் மேலும் கடமையை சேர்த்து கூறுகிறார் (கொலை, விபச்சாரம், ஆணைகள்). சில இடங்களில் வளைந்து கொடுக்கக்கூடிய செய்தியாக கூறுகிறார் (ஓய்வுநாள்). எல்லாவற்றிற்கும் மேலாக இறைவாக்கினர்கள் மற்றும் சட்டங்கள் எல்லாம் சார்ந்திருக்கக் கூடிய இரட்டை கட்டளைகளை இயேசு தருகின்றார். 1. இறையன்பு மற்றொன்று 2. பிறரன்பு.

இயேசு கிறிஸ்துவின் மலைப்பொழிவை புரிந்து கொள்ளாமல் இந்த மாபெரும் நற்செய்திப் பகுதியைப் புரிந்து கொள்வது சிறிது கடினமான காரியம். தான், சட்டத்தை அழிக்க வரவில்லை. சட்டத்தை சீர்திருத்தவும், நிறைவேற்றவும் வந்தேன் என்றுரைக்கின்றார். யூதர்களுக்கு சட்டம் மிகமிக முக்கியமானது. ஏனெனில் அது இறைவனால் மோசே வழியாக மக்களுக்கு கொடுக்கப்பட்டது என்பதை நம்பினார்கள். ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன் என்கிற வார்த்தைகள் சட்டத்தின் நிரந்தர நீடிய இயல்பை அதிகரிக்கின்றது. கட்டளைகளை கடைபிடித்து கற்பிக்கிறவரே இறைவன் அருகில் இருப்பவர் என்ற கருத்தை விளக்கிக்காட்டி, பல கட்டளைகளை சுட்டிக்காட்டி அவைகளை எப்படி வாழ வேண்டும் என்று விளக்குகிறார்.

இயேசு வாழ்ந்த, வாழப்போகின்ற வாழ்க்கையை தீர்மானமாக கூட இவற்றை நாம் எடுத்துக் கொள்ளலாம். கொலை, விபச்சாரம், காணிக்கை, விவாகரத்து, இச்சை நிறைந்த பார்வை என அனைத்தையும், புதிய கண்ணோட்டத்தோடு புதுப்பிக்கின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக இறுதியாக பேச்சு வழக்கில் இன்றியமையா சட்டமாக, உங்கள் பதில் ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை என்றிருக்கட்டும் என்று சொல்லி பேச்சு முறையையும் வரையறை செய்கின்றார்.

இயேசு கிறிஸ்து புதிய சட்டங்களை, பழைய சட்டங்களை வைத்து தருவதால் விவிலிய அறிஞர்கள் இயேசுவை புதிய மோசேவாக பார்க்கின்றார். இயேசுவின் இந்த சீர்த்திருத்தம் திருச்சட்டங்களை முழுமையடைய செய்கின்றது. இயேசுவினுடைய புதிய கண்ணோட்டம் முதல் வாசக குறிப்புகளடங்கிய சீராக்கின் வாக்கியங்களுக்கு பொருத்தமானதாக இருக்கின்றது.

இயேசுவின் வழிகாட்டுதல் என்பது, சட்டங்களை பின்பற்றி வா என்று அழைப்பது அல்ல. மாறாக, என்னை பின்பற்றி வா என்னை பிரதிபலித்துவா என்னுடைய ஒளியில் வா என்பதாகும். நம்மை ஒளிர்விக்கின்ற உண்மையான ஒளி இயேசு கிறிஸ்துவே (யோவா 1 :9). அவரே முதலும் முடிவும். என்றென்றும் வாழ்பவரும் அவரே (திருவெளி 1 : 17 ‡ 18). எனவே கிறிஸ்து விவிலியத்தின் விளக்கம். இவ்வாறு இயேசுகிறிஸ்துவே திருச்சட்டத்தின் முழுமையாகவும், நிறைவாகவும் விளங்குகின்றார்.

துணைநலம் ஆக்கம் தரும் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும் (குறள் 651)
எதனையும் சிறப்பாக செய்தல் எல்லா நலன்களையும் தரும் என்கிறார் வள்ளுவர்.

No comments:

Post a Comment

Ads Inside Post