Pages - Menu

Saturday, 4 February 2017

பொதுக்காலம் 8ஆம் ஞாயிறு 26-02-2017

பொதுக்காலம் 8ஆம் ஞாயிறு      26-02-2017

எசா 49 : 14 - 15    1 கொரி 4 : 1 - 5,  மத் 6 : 24 - 34

நிறைய சம்பளம் வாங்கும் அலுவலர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டார். காரணம், தன் வீட்டிற்கு அடுத்த வீட்டில் இருப்பவர் வாங்கியிருக்கும் பென்ஸ்காரை போல தானும் வாங்க முடியவில்லை என்ற ஏமாற்றம்தான். வறட்சியின் காரணமாக தற்போது பல விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். காரணம் கவலை.

இன்றைய நற்செய்தியில் இயேசு மனிதனின் நிதர்சன தேவைகளை நிராகரிக்கவில்லை. ஆனால் அத்தேவைகள் அனைத்தும் அவர்களின் முதன்மை தேவைகளாக மாறாத வண்ணம் எச்சரிக்கையாய் இருக்க அழைப்பு விடுக்கின்றார். உலகமயமாக்கலின் மிகப்பெரிய வெற்றி இதுதான். எது அத்தியாவசியம் இல்லையோ அதை நம்மையும் மீறி அத்தியாவசியமாக நினைவில் ஏற்றுவது. உதாரணமாக ஒரு காலத்தில் செல்போன் இல்லாமல் வாழ்ந்தோம். இப்போது அதுதான் வாழ்க்கை என்கின்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளோம். ஒரு காலத்தில் விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்று இருந்த நினைவு, இன்று அது மழுங்கப்பட்டிருக்கிறது. தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் இருக்கவேண்டிய தொலைவை உணர்த்தக்கூடிய ஒரு நற்செய்தியாக இன்றைய நற்செய்தி பகுதி அமைந்திருக்கிறது. உணவு, உடை, உறைவிடம் என்ற முக்கியமான இன்றியமையாத தேவைகளையே இறைவன் வானத்து பறவைகளுக்கு இலவசமாக கொடுக்கின்றார் என்றால், அவற்றைவிட மேலான நமக்கு கொடுக்க மாட்டாரா?

கவலை வேண்டாம்

பறவைகள் போல வாழ்க்கை என்பது கவலைகள் மறந்த வாழ்க்கையாகும். கவலைப்படுவதனால் எவன் ஒருவன் தன் உயரத்தில் ஓர் அங்குலம் கூட்ட முடியும் என்கின்ற வார்த்தைகளில் உள்ள வாழ்வின் தெளிவை புரிந்து கொண்டாலே போதும். தேவைகளையே மனதில் கொண்டு  உலகத்தில் சீடர்கள் பயணம் செய்வார்கள் எனில், கடவுளுக்கு பணி செய்யும் மனப்பக்குவம் அவர்களுக்கு இல்லாமல் போய்விடும். இந்த நிலை செல்வத்திற்கு அடிமையாகும் நிலைக்கு நம்மை இழுத்துச் செல்லும். ‘முழுமையாக விடுதலையை அனுபவிக்க கடவுள் ஒருவருக்கு மட்டும் ஊழியம் செய்தால்போதும்’ என்பதுதான் இயேசு கற்றுத் தரும் பாடம்.

றைபராமரிப்பு

இன்றைய மூன்று வாசகங்களுமே கடவுளின் அனுக்கிரக கருணையை நமக்கு நினைவூட்டுகின்றது. கடவுளை படைப்பாளியாகவும், தந்தையாகவும் நம் வாழ்வின் யதார்த்தங்களுக்கு அர்த்தத்தை கொடுப்பவராகவும் கண்டு பாவிக்க அனுபவிக்க கொடுக்கப்படுகின்ற சவால்களை தொட்டு காட்டுகின்றது. இன்றைய வாசகங்கள். இறைபராமரிப்பு பற்றிய பதிவுகள் விவிலியத்தின்  மூன்று இடங்களில் வருகின்றது (யூதித் 9 : 5, சாஞா 14 : 3, 6 : 17, சஉ 5 : 5). கடவுள் அனைவரையும், அனைவரது மீட்பையும் விரும்புகின்றார் என்பதை இறைபராமரிப்பு செய்தி நமக்கு சுட்டிக்காட்டுகிறது. கடவுள் பாவிகளின் இறப்பை அல்ல, மாறாக அவர்களின் பாவம் இல்லா மறுவாழ்வையே விரும்புகின்றார். நம்முடைய செயல்களுக்கு ஏற்பவும், குணங்களுக்கு ஏற்பவும், சிந்தனைகளுக்கு ஏற்பவும் நமக்கு பரிசளிக்கின்றார். கடவுள் ஒருவர் மட்டுமே தீயனவற்றை நன்மைதனத்தால் நிரப்ப முடியும்.

நாம் மேலானவர்கள் :

கடவுளின் மேல் நம்பிக்கை வைத்து வாழ்க்கை நடத்துபவரும், தனது நம்பிக்கையை சிதறாமல் பார்த்துக் கொள்பவரும் கடவுளின் பார்வையில் மேலானவர்களாக கருதப்படுகிறார்கள். தென்றலுக்கும், புயலுக்கும், வாழ்விற்கும், சாவிற்கும் இடையே கடவுள் மீது மட்டில்லா நம்பிக்கையை பதித்து வாழ்பவர்கள் மேலானவர்கள். கடவுளின் பார்வையில் மேலானவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை. மனித பலவீனம் சில நேரங்களில் நம்மை அதற்கு இட்டுச் செல்கின்றது. விவிலிய மாமனிதர்களின் வாழ்வையும் பயம் கவ்வுவதை பார்க்கின்றோம். மோசே‡ விப 34 : 30, யோசுவா ‡ யோசு 4 : 14, சாமுவேல் ‡ 1 சாமு 12 : 1). புதிய ஏற்பாட்டின் இறைபராமரிப்பின் தூதுவர் இயேசு கிறிஸ்து தரும் செய்தி  ‘பயப்படாதே’ என்கின்ற செய்திதான். மாற்கு 5 : 36; 6 : 50, மத் 17 : 7;  28 ; 10, லூக் 1 : 13, 30; 2 : 10).

நம்முடைய  நினைவுகளையும், எண்ணங்களையும், கனவுகளையும் சிதைக்க முடிந்தவருக்கு மட்டுமே அஞ்சுங்கள் என்பதுதான் செய்தி. நம்முடைய நம்பிக்கையை சிதைப்பவருக்கும், மகிழ்ச்சியை எடுப்பவருக்கும் பயம் கொள்ள வேண்டும். நம் நம்பிக்கை, மகிழ்ச்சி, பயம், அனைத்தும் இறைவன்பால் இருக்கின்ற போது ஞானம் நிறைந்தவர்களாய், கவலையில்லாதவர்களாய் இறைவனுக்கு சேவை செய்ய முடியும், தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம் (நீமொ 9 : 10).

நம் வாழ்வு, நாமும் இறைவனும் சேர்ந்து செய்யும் நெய்யும் பணியைப் போல. ஆனால் நிறத்தை தேர்ந்தெடுப்பது நம் கையில் இருப்பதில்லை - கோரி.   

No comments:

Post a Comment

Ads Inside Post