Pages - Menu

Thursday 1 March 2018

கிறிஸ்தவ வாழ்வும் அருள் அடையாளங்களும்

கிறிஸ்தவ வாழ்வும் அருள் அடையாளங்களும்
 அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

முன் குறிப்பு

  கடந்த இரு ஆண்டுகளாகத் திருப்பலிக்கடுத்த  அடிப்படை உண்மைகள் பற்றியும், அதன் அமைப்புக் கூறுகள் பற்றியும் விளக்கம் எழுதிக் கொண்டிருந்தேன். இது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களோடு முடிவடைந்தது. அதோடு முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் இவ்விதழின் ஆசிரியர் தொடர்ந்து ஒப்புரவு அருள் அடையாளம் பற்றி எழுதும்படிக் கேட்டார். வேறு சிலர் அருள் அடையாளங்கள் எல்லாவற்றையும் பற்றி எழுதலாமே என்ற ஆலோசனை கொடுத்தார்கள்.

முதலில் சற்று தயங்கினேன். பிறகு சரி எழுதலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் ஒவ்வொரு அருள் அடையாளங்கள் பற்றி எழுதும் முன்பு அருள் அடையாளங்கள் பற்றிய அடிப்படை புரிதல் அவசியம் எனத் தோன்றிற்று. எனவே “கிறிஸ்தவ வாழ்வும் அருள் அடையாளங்களும்”  என்ற தலைப்பில் எனது விளக்கத்தைத்  தொடங்குகிறேன்.

முன்னுரை

கிறிஸ்தவ வாழ்வு அருள் அடையாளங்களைப் பின்புலமாக வைத்து உருவெடுத்து வளர்ந்து வளமையை நோக்கி நகர்வது என்று சொல்லலாம். அருள் அடையாளங்களைப் பெறுவதும் கொண்டாடுவதும் இறையனுபவத்திற்கு இட்டு செல்ல வேண்டும். அப்போதுதான் கிறிஸ்தவ வாழ்வு வளரவும், வளமையை நோக்கி நகரவும் முடியும். எனவே  அனுபவம் பற்றியும், அருள் அடையாளம் பற்றியும் உண்மையான புரிதல் வேண்டும். முதலில் இவை பற்றிய புரிதலைக் காண்போம்.

1. அனுபவம் என்றால் என்ன?

நமது கட்டுப்பாட்டிற்கும் செல்வாக்கிற்கும் அப்பாலுள்ள ஒரு பொருளையோ, ஆளையோ, நிகழ்வையோ  அகபுற புலன்களால் நேருக்கு நேராக துய்த்துணர்ந்து, அதனால் விளையும்  பயனை, அதாவது இன்ப துன்பங்களை நுகருவதைப் பொதுவாக அனுபவம் (Experience) என்று சொல்லலாம். எடுத்துக்காட்டாக தொலைகாட்சிகளில் பல பொருள்கள் பற்றிய (சோப்பு, தைலம், உணவுப்பொருள்கள்) விளம்பரத்தைப் பார்க்கிறோம். அவை இப்பொழுது  நம் கையில் இல்லை. அவற்றில் ஒன்று - சாக்லேட்டை -  வாங்கி வாயில் போட்டவுடன் நீர் வாயில் சுரக்கிறது, ருசியை உணர முடிகிறது. அதனால் ஒருவித இன்ப உணர்வு ஏற்படுகிறது. சப்கொட்டி, ஆகா! என்ன ருசி! என்கிறோம். இது புறபுலனின் அனுபவம். சில சமயங்களில் நாம் தவறுதல்களைச் செய்து விடுகிறோம். அதனால் நஷ்டம் ஏற்படுகிறது. நிறுவன அதிகாரி என்ன சொல்ல போகிறாரோ, என்ன தண்டனையை அளிப்பாரோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அவரைச் சந்திக்கவும் பயம் உண்டாகிறது. கடைசியில் சந்திக்கும் நேரம் வருகிறது. கூனி குருகி, ஐயா, நான் செய்தது தவறுதான், வருந்துகிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன் எனக் கெஞ்சிக் குழைக்கிறோம். அவரும் பெருந்தன்மையோடு நம்மை மன்னித்து விடுகிறார். இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார். அப்போது நம் உள்ளத்தில் ஒரு நிம்மதி பிறக்கிறதல்லாவா? அது ஒரு அனுபவம். அகபுலனால் உணரப்படுவது இந்த அனுபவம்.
   
2. இறையனுபவம்

கட்புலனாகாத இறைவனைக் கட்புலனாகும் பொருள்கள் வழியாகவும், எ.கா. தண்ணீர், எண்ணெய், அப்பம், இரசம், ஆள் வழியாகவும், (இயேசு கிறிஸ்து வழியாக) நிகழ்வு வழியாகவும்  எ.கா. பாவ மன்னிப்பு செயல் - மனிதன் இறைவனைச் சந்திப்பது இறையனுபவம் ஆகும். இச்சந்திப்பினால் விளையும் பயனைத் துய்த்துணர்கிறோம். இதிலிருந்து மனிதப் புலன்களுக்குட்பட்டவைகள் வழியாகதான் அறிவையும், அனுபவத்தையும் நாம் அடைகிறோம் என்பது தெளிவாகிறது.

3. இறையனுபவத்தில் உருவானதே இஸ்ரயேல் மக்கள் வாழ்வு

மனிதர் எவ்வாறு இறைவனைச் சந்தித்து அனுபவித்து வாழ்ந்துள்ளனர் என்பதற்கு மீட்பின் வரலாறு சான்றாக உள்ளது. இஸ்ரயேல் மக்களை அழைத்து தம் மக்களாக்கிக் கொண்ட இறைவன் அவர்களது அன்றாட வாழ்வில் நுழைந்து  ஈடுபாடு கொண்டார். அவர்களது பதிலையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்த்தார். அவர்களோடு உரையாடினார். புதியதோர் நாட்டிற்கு அழைத்துச் செல்வதாக வாக்களித்தார். அது நடைபெறும் என்பதை எவ்வாறு அறிவது என்று அவர்கள் கேட்டபோது அவர்களுடன் உடன்படிக்கை செய்து பதிலளித்தார். எகிப்திலிருந்து அவர்களை விடுவிக்கவும், தாம் உடன்படிக்கையின் வழியாக அவர்களோடு என்றும் ஒன்றித்து இருப்பதை உணர்த்தவும் கடவுள் பல அரும்பெரும் செயல்களைப் புரிந்தார். பின் சீனாய் மலையில் மேகங்கள் நடுவில் அவர்களுக்குத் தோன்றினார். பல அடையாளச் செயல்கள் வழியாக உடன்படிக்கைக்கு உடன்பட அவர்களை அழைத்தார் (காண் விப .19) பாலைவன பயணத்தின் போதும் இன்னும் பல மகத்தான செயல்களைப் புரிந்தார். பிற்காலத்தில் இறைவாக் கினர்கள் வழியாக அடையாளச் செயல்கள் பல செய்தார். இச்செயல்கள் வழியாக வரவிருந்த  துன்பங்களையும், தண்டனைகளையும் நல்வாழ்வையும் சுட்டிக் காட்டினார்.
இவ்வாறு பலமுறை பலசெயல்கள் வழியாக இஸ்ரயேல் மக்கள் கடவுளைச் சந்திக்கவும், அவரது பாதுகாவலை அனுபவிக்கவும் முடிந்தது. அத்தகையை அனுபவங் களின் தொகுப்பே இறைமக்களுடைய வாழ்வாக அமைந்திருந்தது. 

4. கிறிஸ்தவ மக்களின் இறை அனுபவத்திற்கும் வாழ்வுக்கும் அடிப்படை இயேசு கிறிஸ்து

இறுதியாக இந்த இறை அனுபவம் மனிதராகி நம்மிடையே குடிகொண்ட இயேசுகிறிஸ்துவில் நிறைவெய்தியது. ஏனெனில் “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்” (யோவா 3:16) என்பதிலிருந்து கடவுள் யார் என்றும், அவரது அன்பு எத்தகையது என்றும் உணர முடிகின்றது. இந்த இயேசுவோ தந்தையின் நெஞ்சுக்கு நெருக்கமானவர்.. இந்த ஒரே மகனே அவரை வெளிப்படுத்தினார் (காண் யோவா 1:18). அவர் வழியாக கடவுள் இறுதியில் நம்மோடு பேசினார் (காண் யோவா 1:18).  உறவுக் கொண்டார். மனிதரும் இயேசுவைக் கண்டதால் இறைவனைக் காண முடிகிறது (யோவா 14:9). 

இவற்றிக்கெல்லாம் மேலாக இயேசுகிறிஸ்து வினுடைய பாஸ்கா மறைபொருளின் அதாவது, அவரது பாடுகள், மரணம், உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகியவற்றின் வழியாக இந்த இறையனுபவம் உச்சநிலையை அடைந்தது. “கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்துக் கொண்டோம்” (1 யோவா 3:16). இயேசு கிறிஸ்துவை அறிவதின் வழியாக இறைவனை அறிய முடிகின்றது (யோவா 14:7). இவ்வாறு கிறிஸ்தவன் மனிதராகிய இயேசு கிறிஸ்து வழியாக இறை அனுபவம் பெறுகிறான்.

இயேசுகிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருள் தங்களுக்கு இறை அனுபவம் கொடுத்தது என்றும், அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்காமல் தங்களால் இருக்க முடியவில்லை என்றும் திருத்தூதர்கள் துணிச்சலோடு கூறுவதை நாம் திருத்தூதர் பணியில் வாசிக்கிறோம். “நாங்கள் கண்டதையும், கேட்டதையும் எடுத்துரைக் காமலிருக்க எங்களால் முடியாது” (தி.ப 4:20). “தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம், கண்ணால் கண்டோம்... கையால் தொட்டுணர்ந்தோம்... அதற்குச் சான்று பகர்கிறோம்... தந்தையுடனும், அவருடைய மகன்  இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1 யோவா 1:1-3)  என்று திருத்தூதர் யோவான் கூறுவது  எந்த அளவு அவர்களுடைய இறையனுபவம் அவர்களது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைக் காட்டுகிறது.

திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவ மக்கள் புதிய இஸ்ரயேல் ஆவர். இவர்களும் இந்த இறை அனுபவத்தை அடைய வேண்டுமல்லவா? இயேசுகிறிஸ்துவின் வாழ்விலும், அவரது பாஸ்கா மறைபொருளிலும் இறைவனைச் சந்தித்து தந்தையோடும் இயேசு கிறிஸ்துவோடும் நட்புறவு கொண்டத் திருத்தூதர்களைப் போல் கிறிஸ்தவர்களும் நட்புறவு கொள்ள வேண்டு மல்லவா? இன்று இவர்கள் இதை எவ்வாறு அடைவது? அருள் அடையாளங்களைப் பெற்று, அவை அளிக்கும் அருள்கொடைகளில் பங்கு பெறுவதின் வழியாக இதை அடையாளம். அப்படியானால், 

5. அடையாளங்கள் என்றால் என்ன?

அடையாளம் (Symbol) அல்லது குறியீடு  (Sign) என்பது மற்றொன்றிக்காக நின்று எதைக் குறிக்கிறதோ, அதைச் சுட்டிக்காட்டுவதாகும் அல்லது உணர்த் துவதாகும். 
“சைகை” தான் மனிதர் முதன் முதலில் பயன்படுத்திய அடையாளம். காலபோக்கில் இதுவே பேச்சு என்ற அடையாளமாகவும், மொழி என்ற அடையாளமாகவும் மாறியது. அதே  போல் குறியீடு என்பது ஏதோ ஒன்றின் மீது ஒரு குறிப்பிட்ட பொருளை ஏற்றிக் கூறுவதாகும். உதாரணமாக, தங்க பதக்கம் வெற்றி, திறமையின் அடையாளம். சாலைக் குறியீடுகள் ( சிவப்பு, பச்சை) போக்குவரத்து அடையாளங்கள்.

  இதே போன்று சமய சார்ந்த அடையாளங்கள் உள்ளன. சிறப்பாக இவற்றை சமய வழிபாடுகளில் காண்கிறோம். இந்து சமயத்தில் ஒரு இளைஞன் பூநூலை அணிவது அவன் பிரமசாரி நிலையை அடைந்துள்ளான் என்பதற்கு அடையாளமாக அமைகிறது. இது “சம்ஸ்காரா” என்று அழைக்கப்படுகின்றது.

விவிலியத்தில் இது போன்ற அடையாளங்கள் இருப்பதைக் காண்கிறோம். வானவில் கடவுளுக்கும், நோவாவுக்கும் இடையே செய்யப்பட்ட உடன்படிக்கையின் அடையாளமாக இருந்தது. வீட்டு நிலைகளில் பூசப்பட்டிருந்த ஆட்டின் இரத்தம் அது யூதர்களின் வீடு என்பதற்கும், தொடர்ந்து அவர்களின் பாதுகாப்பு, விடுதலைக்கும் அடையாளமாக இருந்தது.

6. இயேசு கிறிஸ்து முதன்மையான அருள் அடையாளம்

மனிதரான இறைவார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவே ஒரு மாபெரும்  அரும் அடையாளமாகத் திகழ்ந்தார். “வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிக்கொண்டார்” (யோவா 1:14). அதாவது நாசரேத்து ஊர் இயேசுவில் இறைவன் மனிதர் ஆனார். எனவேதான் என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்( யோவா 14:9) என்றார். கட்புலனாகும் இயேசுவில் கட்புலனாகாத இறைவன் இருக்கிறார். “நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறோம்” என்று இயேசு கூறியது இயேசுவும் இறைவன்தான் என்பதைக் குறிக்கிறது (காண் யோவா 14:10).

இதனால் அவர் இறைவனுக்கும் மனிதருக்கும் இடையே ஓர் ஒப்பற்ற, நிகரற்ற இணைப்பாளராகத் திகழ்கின்றார். “கடவுளையும் மனிதரையும் இணைப்பவர் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்”  (1 திமோ 2:5) என்று பவுல் குறிப்பிடுகிறார். மேலும் இவர் கட்புலனாகா கடவுளின் சாயல் என்றும், இறை இரக்கத்தின் அருள் உருவம் என்றும், இறை மீட்பின் திருவெளிப்பாடு என்றும் (காண் கொலோ 1:15) சொல்கிறார். இதேபோல் இவர் கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுபதிவாகவும் விளங்குகிறார் என்று எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் வாசிக்கிறோம் (எபி1:3).

இவ்வாறாக இயேசு கிறிஸ்து இறை-மனித சந்திப்பின் இணைப்பின், ஒன்றிப்பின் காணக் கூடிய அடையாளமாகத் திகழ்கிறார்; அருள் பொழியும் அடையாளமாக விளங்குகின்றார். எனவே அவரே முதன்மையான அருள் அடையாளமாவார் (Primordial Scrament).

7. திருஅவை அடிப்படை அருள் அடையாளம்

உலகம் முடியும் வரை தம் பணியைத் தொடர்ந்தாற்ற இயேசு கிறிஸ்து திருஅவை ஏற்படுத்தினார். இன்று நாம் கிறிஸ்துவை கண்ணால் காணாவிட்டாலும், அவரது மறை உடலாகிய திருஅவையைக் காண்கிறோம். திருஅவை கிறிஸ்துவின் உடல், எல்லா வகையிலும் எப்பொழுதும் இறைவனால் நிறைவாக்கப் பெறும் கிறிஸ்துவின் நிறைவே அத்திருஅவை (காண் கொலோ 1:18).
இத்திருஅவை எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும், தமது சொல், செயல் அடையாளங்கள் வழியாக கிறிஸ்துவை உடனிருக்கச் செய்கிறது. இதனுடைய செயல்கள் ஏழு அருள் அடையாளங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே திருஅவை ஓர் அடிப்படை அருள் அடையாளம் (Fundamental Sacrament)  எனப்படுகிறது.  

8. ஏழு அருள் அடையாளங்கள்

இவ்வுலகு சார் முறையில் மனித வாழ்வு பல்வேறு பருவங்களால் ஆனது. ஒவ்வொரு பருவ நிலைக்கேற்றவாறு  ஒரு மனிதர் பேணிக்காக்கப் படுகிறார். அதேபோல் ஒரு  மனிதருடைய ஆன்மீக வாழ்விலும் பலவித படிநிலைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றையும் புனிதப்படுத்த திருஅவை பயன்படுத்தும் மீட்பளிக்கும் செயல்களே அருள் அடையாளங்கள் எனப்படுகின்றன. இவை ஏழு படிநிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. முதல் மூன்று அருள் அடையாளங்கள் (திருமுழுக்கு, உறுதிபூசுதல், நற்கருணை) உருவாகும் இறைவாழ்வு, வளர்ச்சி வளமை நிலைகளைச் சார்ந்தவையாகும். அடுத்து இரு அருள் அடையாளங்கள் (ஒப்புரவு, நோயில் பூசுதல்) ஆன்மீக வாழ்வில் உண்டாகும் தடுமாற்றங்களுக்கு ஈடு செய்யும் மருந்தாக அமைந்துள்ளன. கடைசி இரு அருள் அடையாளங்களும் (குருத்துவம், திருமணம்) சமூக கண்நோக்கும், பணியைச் சார்ந்தவைகளாக அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த ஏழு அருள் அடையாளங்களும் கிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருளில் இருந்தே மீட்பளிக்கும் தம் ஆற்றலைப் பெறுகின்றன. அதே நேரத்தில் இவை இறைவனை வழிபடும் செயல்களாகவும் அமைந்துள்ள ( காண் தி.வ 7:1-2; திரு அவை 11). எனவே இவற்றை திருவழிபாட்டு அருள் அடையாளங்கள் என்றும்  சொல்லலாம். இனி இவ்வருள் அடையாளங்கள் ஒவ்வொன்றையும் பற்றியும் விளக்கம் காண்போம்.
                                                                                                                                                        தொடரும்...

No comments:

Post a Comment

Ads Inside Post