நான் எழுத்தாளன் ஆனேன்...
16. ஆயர் தாமஸிடம் ஒப்படைத்தார்
- லெயோ ஜோசப்,
திருச்சி
எழுத்துப் பிரதியை கவியரசு கண்ணதாசன் தாமஸ் ஆயரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புனித சின்னப்பர் குருத்துவக் கல்லூரியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், குருக்கள், கன்னியர்கள் குழுமி இருந்தனர்.
உரிய நேரம் வந்ததும் கவியரசு கண்ணதாசன் எழுத்துப்பிரதியை ஆயரிடம் கொடுத்துப் பேசினார் : இந்த இயேசு காவியத்தைக் கண்ணதாசன் எழுதலாமா என்று உங்கள் பக்கமும் எதிர்ப்பு எங்கள் பக்கமும் எதிர்ப்பு. அவன் குடிகாரன் என்று உங்கள் பக்கத்தில். அர்த்தமுள்ள இந்து மதம் பற்றி எழுதிய கண்ணதாசன் இயேசுவைப் பற்றி எழுதலாமா என்று எங்கள் பக்கத்தில்!
‘மரிய மதலேனாளைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவள் எவ்வளவு பெரிய பாவி என்பதும் தெரியும். அவளை மன்னித்த இயேசு இந்த கண்ணதாசனை மன்னிக்க மாட்டாரா?’
கைதட்டல் வானைப் பிளந்தது. அதன் பிறகு 2 மணி நேரம் பேசினார். அதன் பிறகுதான் பிழைத்திருத்தம் எல்லாம். கடைசி அமர்வை கொடைக்கானலில் வைத்துக் கொண்டோம். இயேசு சபைக்குச் சொந்தமான மிக உயர்ந்த இடத்தில் இறுதி அமர்வை முடித்தோம்.
இறுதி ஸ்கிரிப்ட், அசை சேர்த்தல் எல்லாம் முடிந்தது. ஃபாதர்.ஸ்தனிஸ்லாஸ் உப தலைப்புகள் எல்லாம் எழுதினார். ஸ்க்ரிப்ட் ரெடி. கண்ணதாசனிடம் படித்துக் காட்டிவிட்டு அச்சகத்துக்குப் போக வேண்டியதுதான். கண்ணதாசனிடம் படித்துக் காட்டவேண்டும். யார் போவது? ஃபாதர்.ஜார்ஜ், ஃபாதர்.அமுதனையும், என்னையும் தேர்வு செய்தார்.
ஒரு குழுவாக சென்னை சென்றோம். கண்ணதாசன் கவிதா ஹோட்டலுக்கு வந்து விடுவார். அவர் ‘போதும்’ என்று சொல்கிற வரையில் ஃபாதர் அமுதனும், நானும் மாறி, மாறி படிப்போம். அவர் ‘போதும்’ என்று சொன்னதும் நிறுத்தி விடுவோம். இனி மறுநாள்தான்.
சில சமயங்களில் சில சுவையான வியங்களைப் பற்றிப் பேசுவார். நான் எற்கனவே எழுத்தாளர் கூட்டங்களில் அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன். மிகவும் நகைச்சுவையாகப் பேசுவார்.
‘ஒரு புலவன் அரசனைப் பார்க்கப் புறப்பட்டான். நெடுந்தொலைவு நடந்து வந்த களைப்பு, தூக்கம் வந்தது. அரசனின் மஞ்சத்தின் மீதே படுத்து உறங்கிவிட்டான். அரசன் வந்தான். தனது மஞ்சத்தில் புலவர் படுத்து உறங்குவதைக் கண்டான். புலவர் எழுந்திருக்கும்வரை விசிறியால் விசிறி விட்டான்’. இதை எழுதி வைத்தவன் ஒரு புலவன்தான்.
‘இன்னொரு புலவன் அரசனைப் புகழ்ந்து பாடினான். மகிழ்ந்த அரசன், என்ன வேண்டும்?’ என்று கேட்டான். அதற்கு புலவன் ‘யானைக் கன்றும், வளநாடும் வேண்டும்’ என்றான். ‘ஏன் புலவரே, உமக்கே, சாப்பாட்டுக்கு வழியில்லை. இதில் யானைக் கன்றை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்?’ என்று அரசன் கேட்டான். அதற்குப் புலவன், ‘நான் இன்னொருவருக்குத் தருவதாக வாக்களித்திருக்கிறேன்’ என்றான்.
‘வேறொரு புலவன் அரசனைப் புகழ்ந்து பாடினான். மகிழ்ந்த அரசன் பொற்கிழி கொடுக்க விரும்பினான். பொற்கிழியை சும்மா நீட்டினால் அவ்வளவு மரியாதையாக இருக்காதே என்பதால் ஒரு தட்டு கொண்டுவரச் சொன்னான்’. தங்கத்தட்டு ஒன்று வந்தது. பொற்கிழியைத் தட்டில் வைத்து நீட்டினான். புலவனுக்குத் தங்கத்தட்டுமேல் ஆசை வந்துவிட்டது.
‘மன்னா, பணத்தட்டு உனக்கா? எனக்கா?’ என்று கேட்டான்.
‘பணத்தட்டு’ என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ‘பணத்தட்டு’ என்று ஓர் அர்த்தம். ‘பணத்துக்குத் தட்டுப்பாடு’ என்று ஓர் அர்த்தம்.
அரசன் பார்த்தான். ‘பணத்தட்டு உனக்கே இருக்கட்டும்’ என்றான்.
கண்ணதாசனுக்கு மூன்று மனைவிகள். முதல் இரண்டு முறையான திருமணம். மூன்றாவது திருமணம் காதல் திருமணம். அவர் தமது முதலிரவு பற்றிக் கூறினார். அவர் பேசிக் கொண்டே இருந்தாராம். அவர் மனைவி ஒன்றும் பேசவில்லையாம். அவர் பேசுவதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே இருந்தாராம். கண்ணதாசன் நினைத்தாராம், தமக்கு நல்ல மனைவி அமைந்திருக்கிறார் என்று. காலையில்தான் தெரிந்ததாம், அவர் டமாரச் செவிடென்று.
(இன்னும் சொல்வேன்)
No comments:
Post a Comment