சிரிப்போ ! சிரிப்பு !!
இலக்கியத்தில் நகைச்சுவை
பகலின்பாற் பட்டன்று இருள்”
சிரிப்பவர்களுக்கே உலகம் ஒளிமயமாகத் திகழ்கிறது. அவ்வாறு அல்லாதவர்களுக்கு பகலும் இருள் மயமாகத்தான் தோன்றும் என்கிறார் திருவள்ளுவர்.
காளமேகப் புலவரின் நகைச்சுவை :
இவர் கும்பகோணத்தில் பிறந்தவர். இவர் ஒருமுறை விருந்துண்ணுவதற்கு ஒரு திருமண வீட்டிற்குச் சென்றிருந்தார். பந்தியில் அமர்ந்தார். இப்புலவருக்கு எதிரே முன்குடுமி வைத்த சோழியப் பிராமணர் ஒருவர் பாயாசம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அந்நேரம் பார்த்து அச்சோழியருடைய முன்குடுமியானது அவிழ்ந்து அவர் உண்ணுகிற இலையில் விழுந்தது. அவரோ அதைக் கவனிக்காமல் பாயாசத்தோடு சேர்த்துப் பிசைந்தார். பின்னர் பிழையை உணர்ந்து அந்த குடுமியை கையில் எடுத்து படார் என்று தலையின் பின்பக்கம் தள்ளினார். அக்குடுமியிலிருந்த பாயாசம் அவருக்கு முன்னால் சாப்பிட்டவர்களின் முகத்திலெல்லாம் தெரித்தது.
நம் புலவர் காளமேகத்தின் மீதும் பட்டது. அவரது கோபத்தில் கொப்பளித்து வந்தது கவிதை.
சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா ! சோற்றுப்
பொருக்குலர்ந்த வாயா, புலையா திருக்குடந்தைக்
கோட்டானே நாயே பேயே குரங்கே உனையயாருத்தி
போட்டாளே வேலையற்றுப் போய்.
இராமச்சந்திர கவிராயரின் நகைச்சுவை :
இராமச்சந்திரர் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு மிகுந்தவர், இவரும் வள்ளல்களையும், புரவலர்களையும் பாடி பரிசுப் பெற்று வறுமையைப் போக்கி வாழ்ந்தவர்.
செல்வம் மிகுந்த ஒரு வடிகட்டின கஞ்சனைப் புகழ்ந்து இல்லாததெல்லாம் அவரிடம் இருப்பதாக இவர் பாடுகிறார். ஆனால் அவனோ பொருள் ஏதும் தராது கதவடைத்து புலவரை வெளியேற்றியபோது வெடித்தது இப்பாடல்.
“கல்லாத ஒருவனைநான் கற்றாய் என்றேன்
காடெறியும் மறவனை நாடாள்வாய் என்றேன்
பொல்லாத ஒருவனைநான் நல்லான் என்றேன்
போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்
மல்லாரும் புயமென்றேன் சூம்பற்றோனை
வழங்காத கையனை ‡ நான் வள்ளல் என்றேன்
இல்லாது சொன்னேனுக்(கு) இல்லை என்றான்
யானும் என் குற்றத்தால் ஏகின்றேன்.”
இவரே வறுமையின் கோரப் பிடியில் பாடுவார்.
“கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித்தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான் ரட்சித்தானா?”
வைகை ஆற்றில் இரட்டைப் புலவர்கள் :
இரட்டைப் புலவர்கள் இருவரும் மதுரை வைகை ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்பொழுது அவர்கள் கட்டியிருந்த பழைய அழுக்குத் துணியை இருவரில் ஒருவர் கல்லில் அடித்துத் துவைக்க அத்துணி வைகை ஆற்றில் நழுவிச் சென்றது. உடனே பார்வை உள்ள புலவர் துணி வைகையில் செல்கிறது எனக் கத்தினார். மற்றவரோ தயங்காது பாடினார்.
அப்பிலே தோய்த்தெடுத்து அடுத்தடுத்து நாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ எனக் கேட்டார். துணியைக் கல்லில் தப்பு தப்பு என்று துவைத்தால் தப்பாதோ (விலகி ஓடாதோ) என்று கேட்க மற்றவர் தொடர்ந்தார்.
இக்கலிங்கம் போனாலென்ன? ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை.
இத்துணி (கலிங்கம்) போனால் என்ன மதுரைச் சொக்கலிங்கம் துணையிருப்பார்.
செய்யும் தொழிலே தெய்வம் :
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கையில் எத்தனையோ கொடிய சம்பவங்கள். இவர் முதல் குடிமகனாக பதவியேற்றுச் சொற்பொழிவு நிகழ்த்தியபோது, இவரது எதிர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் இவரை அவமதிக்கும் எண்ணத்தில் மிஸ்டர் லிங்கன், இதோ நான் காலில் அணிந்திருக்கும் காலணிகள் உங்கள் தந்தையார் தைத்துக் கொடுத்தவை தெரியுமா? என்று ஏளனமாகக் கேட்டார்.
அவர் சொன்னதைக் கேட்ட பலரும் சிரித்தார்கள். உடனே முதல் குடிமகன் லிங்கன் சிரித்துக் கொண்டே ஐயா இந்த நல்ல நேரத்தில் என் தந்தையை நினைவுகூர்ந்தீர்கள். அதற்கு நன்றி. அவர் மட்டுமல்ல, நானும் செருப்புத் தைக்கும் தொழிலில் வல்லவன். 25 வருடங்களுக்கு மேலாக என் தந்தை தைத்த காலணி பழுதாகாமல் உழைத்தது என்றால் அவரது தொழில் வலிமை புரிந்திருக்கும். உங்கள் காலணியில் ஏதேனும் குறையிருந்தால் என்னிடம் தாருங்கள். உடனே சரிசெய்து தருகிறேன். என்றார். எதிர்கட்சி நண்பர் வெட்கித் தலைகுனிந்தார்.
முறியடிப்போம் மூடப்பழக்கத்தை :
உடன்கட்டை ஏறுதல் என்ற சதி என்றும் மூடப்பழக்கத்தை வேரோடு சாய்த்தவர் இராஜாராம் மோகன்ராய். அவர் தம் நண்பரோடு கல்கத்தா நகரத்தின் வீதியில் சென்று கொண்டிருந்த போது கரடி வித்தை காட்டிக் கொண்டிருந்தான் ஒருவன். கூட்டம் வழிந்தது.
அதோ பாருங்கள் பொது மக்களே ... இந்த கரடியின் உடம்பிலிருந்து இதோ இந்த முடியைப் பிடுங்குகிறேன். இது ராசியான கரடி முடி. இதைக் கையில் கட்டினாலோ அல்லது மோதிரமாக செய்து போட்டாலோ செல்வம் செழிக்கும். நீங்கள் குபேரன் ஆவீர்கள். ஒரு முடி வாங்குங்கள். உலகப் பணக்காரர் ஆகலாம். என்று கரடி விட பலரும் போட்டியிட இராஜாராமின் நண்பரும், நானும் ஒரு முடி வாங்கிக் கொண்டு வருகிறேன். என்று கண்களில் ஆசைப் பொங்கக் கேட்டார்.
இராஜாராம் சிரித்துக் கொண்டே ஒரு கரடி முடிக்கு பல இலட்சம் அந்தக் கரடி வித்தைக்காரன்வசம் எத்தனை ஆயிரம் முடிகள். ஆனால் அவனோ தெருமுனையில் பிச்சைக்காரனைப் போல் கூவிக் கொண்டிருக்கிறான். யோசி என்றார்.
வாக்குத் தவறாதே :
உலகில் மிகப் பெரிய பணக்காரரான ராக்பெல்லரின் மகன் அவரிடத்தில் தனக்கு ஏதாவது அறிவுரை சொல்லுமாறு கேட்டார்.
ராக்பெல்லர் சொன்னார், இரண்டு கொள்கைகளை மட்டும் உன் வாழ்க்கையில் எப்போதும் கடைபிடி. வெற்றி பெறுவாய். என்றார்.
1. கொடுத்த வாக்குறுதியை உன் உயிரே போனாலும் நிறைவேற்றத் தயங்காதே.
2. அப்படிப்பட்ட வாக்குறுதியை ஒருபோதும் யாருக்கும் கொடுக்காதே.
இந்த எலிக்கு வந்த மவுசு !
ஆசிரியர் : கம்ப்யூட்டர் மவுசுக்கும், வீட்டில் இருக்கும் மவுசுக்கும் என்ன வித்தியாசம்?
மாணவர் : வீட்டு மவுசுக்கு வால் பினானடி இருக்கும். கம்ப்யூட்டர் மவுசுக்கு வால் முன்னாடி இருக்கும் சார்.
ஓட்டுக்கு ஒரு மாமியார் :
ஒரு வகுப்பறையில் ஆசிரியர் உலகின் முதல் பெண்மணி யார்?
ஏவாள் .... சார்.
அவளோட சிறப்பும், பெருமையும் எது?
கடவுளால் படைக்கப்பட்டது சிறப்பு சார். அடுத்து அவளுக்கு மாமியாரே கிடையாது சார்.
No comments:
Post a Comment