மார்ச் மாத புனிதர்கள்
-அருட்சகோ.G. பவுலின்மேரி FSAG, கும்பகோணம்
மார்ச்-4 புனித கசிமீர் (1458 - 1484)
இவர் போலந்து நாட்டு மன்னரின் மகன். 1458இல் பிறந்தார். கற்பு நெறியிலும், ஏழை எளியவருக்கு இரங்கி அன்பு செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். திருமறையைப் பரப்புவதிலும் ஆர்வம் காட்டினார். நற்கருணை மீது பக்தியும், கன்னிமரியாள் மீது பற்றுதலும் கொண்டு வாழ்ந்தார். 1484இல் மார்ச் 4ஆம் நாள் குரோடுவானா என்ற இடத்தில் காசநோயால் நலிவுற்று இறந்தார். 1521இல் இவருக்கப் புனிதப் பட்டம் வழங்கப்பட்டு இவரின் விழா உரோமைப் பட்டியலில் 1621ஆம் ஆண்டு இடம்பெற்றது.
மார்ச்-7 புனித பெர்பெத்துவா- புனித பெலிசித்தாள் : மறைசாVட்சியர்
பெர்ப்பெத்துவா உயர்குலத்தைச் சேர்ந்த பெண். பெலிசித்தாள் அவளுடைய பணிப்பெண். இருவரும் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர்களாகி, பலவித கொடுமைகளுக்கு உள்ளானார்கள். பெலிசித்தாளுக்கு 8 மாதக் குழந்தை வயிற்றில் இருந்தது. கர்ப்பிணி பெண்களை கொல்லக்கூடாது என்ற சட்டமும் இருந்தது. கிறிஸ்தவர்கள் அவளுக்காக மன்றாடவும் குழந்தை சீக்கிரம் பிறந்துவிட்டது. இருவரும் கி.பி.203இல் தலைவெட்டி கொல்லப்பட்டனர். இவர்களின் இறப்பு பற்றிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.
மார்ச்-8 புனித இறையோவான்துறவி (1495 - 1550)
இவர் கி.பி.495இல் போர்த்துக்கல் நாட்டில் பிறந்தார். படைவீரராக பணிபுரிந்தபின், நோயாளிகளின் ஊழியத்திற்காக தம்மை முழுவதும் அர்ப்பணித்தார். தம்மோடு தன் நண்பர்களை சேர்த்துக்கொண்டு ,இறையோவான் ‘மருத்துவமனை சகோதரர்கள்’ என்ற ஒரு துறவறச் சபையையும், ஸ்பெயினில் ஒரு மருத்துமனையும் நிறுவினார். புனிதர், சிறப்பாக ஏழை எளியவர், நோயுற்றோருக்கான பிறரன்புப் பணியில் சிறந்து விளங்கினார். 1550இல் மார்ச் 8இல் கிரனாடா நகரிலேயே இவர் காலமானார்.
மார்ச்-14 புனித யுப்ராசியா (380 - 420)
இவள் தன் பெற்றோருக்கு ஒரே மகள். தாய், தன் மகளுடன் எகிப்து நாட்டுக்குச் சென்று கன்னியர் மடத்தினருகில் வாழ்ந்தார். ஏழு வயது ஆனதும் கன்னியர் மடத்தில் சேர ஆசைப்பட்டதால் தாயோ பெரும் தியாக சிந்தனையுடன் மகளை மடத்தின் தலைவியிடம் ஒப்படைத்தாள். தாய் தன் மகளிடம் ‘நீ அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதை மறந்துவிட்டு, தாழ்ச்சியுடன் கடவுளுக்கு சேவை செய்து வா’ என்றாள். தாயிடம், பேரரசர், ஒரு அரச குடும்ப வாலிபருக்கு அவளை மணமுடித்துத் தருவதாக வாக்களித்திருந்தார். யுப்ராசியா தன் கைப்பட அரசருக்கு கடிதம் எழுதி மணமுடிக்க நான் விரும்பவில்லை. என் உடைமைகள் எல்லாம் ஏழைகள், அகதிகள், கோயில்களுக்கும், அடிமைகளுக்கும் கொடுத்துவிடுங்கள் என்று எழுதியிருந்தாள். பேரரசர் சாகுமுன் அவள் விருப்பங்களை நிறைவேற்றினார்.
மார்ச் 17 புனித பேட்ரிக் ஆயர் (385 - 461)
இவர் இங்கிலாந்தில் கி.பி.385இல் பிறந்தார். சிறுவயதில் அடிமையாகி அயர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அடிமை வேலையாளாக ஆடுகளை மேய்த்து வந்தார். பிறகு சற்று வசதி அடைந்தபின் மறைப்பணியாளரானார். பின்னர் அயர்லாந்துக்கு ஆயராகி அத்தீவின் மக்களிடையே மிகுந்த ஆர்வத்துடன் நற்செய்தியைப் போதித்தார். பலரை திருமறைக்கு மனந்திருப்பினார். அயர்லாந்து திருச்சபையை ஒழுங்குபடுத்தினார். டவுன்பாட்ரிக் என்ற நகரில் 461இல் இறந்தார். அயர்லாந்து நாட்டிற்கு இவர்தான் பாதுகாவலர்.
மார்ச்-19 புனித யோசேப்பு
தூய கன்னிமரியாவின் கணவர், இயேசுவின் வளர்ப்பு தந்தை இவர். தாவீது அரசரின் குலத்தைச் சேர்ந்தவர். இவர் நீதிமான் (தூய உள்ளம்) உள்ளவர். கற்பை நேசித்தவர். தாழ்ச்சி, பொறுமை, ஏழ்மை, துணிவு ஆகிய பண்புகளுடன் வாழ்வு நடத்தினார். திருக்குடும்பத்தின் தலைவர். இவர் நல்மரணத்தின் பாதுகாவலர். ‘நம்பிக்கையுடன் மக்கள் இவரது உதவியைத் தேடினால் அதனை அடையாமல் போனதில்லை’ என புனித அவிலாதெரசம்மாள் கூறுகிறாள். இத்திருவிழா மார்ச் 19இல் சிறப்பிக்க வேண்டுமென்று 1479இல் உரோமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எப்போதும் இவ்விழா தவக்காலத்தில் வருவதால் நாளினை மாற்றி வைத்து திருவிழா கொண்டாட ஆயர் குழுக்களுக்கு அதிகாரம் உண்டு.
மார்ச்-24 புனித தோமினிக் சாவியோ (1842 - 1857)
இவரின் பெற்றோர் கல்வி அறிவையும், ஆன்மீக அறிவையும் ஊட்டி வளர்த்தார்கள். இவரின் பங்குத்தந்தை இவரை கடவுள்பக்தியிலும், அன்னைமரியாள் மீது அன்பிலும் வளர ஊக்குவித்தார். இவர் காலை 5 மணி முதல் எந்த நேரத்திலும், எந்த சூழலிலும் கோவிலில் இருந்து ஜெபிப்பார். மக்களுக்கு உதவி செய்வார். ‘கடவுளுக்கு சேவை செய்வது நமக்கு மகிழ்ச்சி தரும் என்றும், கடவுளை மக்கள் நேசிக்கச் செய்வது, வல்லமையுள்ள நற்செய்தி பணியாகும்’ என்ற கருத்துக்களை, புனிதர் ஜான்போஸ்கோவிடமிருந்து கற்றுக்கொண்டார். “தோமினிக்கை போன்று திருமுழுக்கில் பெற்றுக்கொண்ட தூய்மையை சாகும்வரை காப்பாற்ற வீரத்துடன் போர்புரிந்தால் அவன் உண்மையாகவே புனிதன்” என்று திருத்தந்தை 10ஆம் பத்திநாதர் கூறினார்.
மார்ச்-31 புனித பெஞ்சமின் (-424)
பாரசீக நாட்டில் அப்தாஸ் என்னும் ஆயர் அக்கினி தேவதையின் ஆலயத்தை தீயிட்டு எரித்து விட்டார். இதைக் கண்ட அரசன், “மீண்டும் அவ்வாலயத்தை கட்டிக் கொடுக்க வேண்டும். இல்லையயனில் கிறிஸ்தவ கோயில்கள் அனைத்தையும் அழிப்பேன்” என்றான். ஆயர் மறுத்ததால் கிறிஸ்தவர்களின் கோவில்கள் அழிக்கப்பட்டு, ஆயர் கொல்லப்பட்டார். கொடிய கலாபனை தொடங்கியது. துன்புற்றவர்களில் ஒருவர் பெஞ்சமின் என்னும் திருத்தொண்டர். இவரையும் சிறையில் அடைத்தார்கள். ‘கிறிஸ்தவ சமயத்தைப் பற்றி பேசக்கூடாது’ என்று நிபந்தனையுடன் விடுதலை பெற்றார். ஆனால் கிறிஸ்துவைப் பற்றி பேசவது என் கடமை. நான் மெளனமாக இருக்க முடியாது என்று கூறினார். இதனால் இவரைப் பிடித்து வதைத்துக் கொன்றார்கள்.
No comments:
Post a Comment