புகுமுக அருளடையாளங்கள்...
4. திருமுழுக்கு அருளடையாளம்
- அருள்பணி. எஸ். அருள்சாமி
பெத்தானியா இல்லம், கும்பகோணம்
முன்னுரை:
புகுமுக அருளடையாளங்களின் முதல் படிநிலை திருமுழுக்கு ஆகும். இதன் அவசியத்தைப் பற்றிக் கூறவந்த யோவான் “ஒருவர் தண்ணீராலும், தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது” (3:5) என்கிறார். இதிலிருந்து விண்ணரசுக்கும், நிலைவாழ்வுக்கும் நுழைவாயிலாக இருக்கிறது திருமுழுக்கு என அறிகிறோம்.
நாம் பெற்றத் திருமுழுக்கை நம் நினைவுக்குக் கொண்டு வந்து அதைப் பாராட்ட பழகி கொள்வது கிறிஸ்தவ வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கிறது என்று ‘மூன்றாவது ஆயிரமாம் ஆண்டின் நுழைவாயில்’ ஆவணத்தில் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் குறிப்பிட்டுள்ளார். “நம்பிக்கையின் அருளடையாளம் எனப்படும் திருமுழுக்கில் உதயமாகும் கிறிஸ்தவ வாழ்வின் புதின்மையை அறிய முற்படுவது நம்பிக்கையாளர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இத்தகைய புரிதல் தங்களது அழைப்பின் பொறுப்புகளுக்கு ஏற்ப வாழ உதவியாக இருக்கும்” என்று ‘நம்பிக்கையாளர்களாகிய பொது நிலையினர்’(Christifideleshaics) என்ற திருத்தூது ஊக்கவுரையில் வாசிக்கிறோம்.
எனவே இத்தகைய மாண்புயர் திருமுழுக்குப் பற்றிய படிப்பினையையும், அதன் சிறப்பு பண்புகள் பற்றியும் அறிய முயற்சிப்போம்.
1. உயிர்த்த ஆண்டவரின் போதகம்
இயேசு பதினொரு சீடர்களைப் பார்த்து “விண்ணுலகிலும், மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன்,தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் கட்டளையிட்ட யாவையையும் அவர்களும் கடைபிடிக்கும் படிகற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார் (மத் 28:16-20) என்றும் இயேசு அவர்களை நோக்கி “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்”. நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்பு பெறுவர் (மாற் 16:15-16) என்றும் நற்செய்தி நூல்களில் வாசிக்கிறோம்.
திருமுழுக்குப் பற்றி விளக்கும் சடங்குமுறை நூலில் பின்வருமாறு வாசிக்கிறோம். “மாந்தர் தூய ஆவியின் அருளால் ஒளிர்விக்கப் பெற்று, கிறிஸ்துவின் நற்செய்தியை ஏற்கச் செய்யும் நம்பிக்கையின் அருளடையாளமே திருமுழுக்கு” (குழந்தைகளுக்கான திருமுழுக்கு சடங்குமுறை எண்3)..
மேலே நாம் குறிப்பிட்ட மூன்று பகுதிகளும் ஒருவர் விண்ணரசை நுழையவும், நிலைவாழ்வைப் பெறவும் தகுதியடைய வேண்டுமானால் பின்வரும் சில காரியங்கள் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
- நற்செய்தி போதிக்கப்பட வேண்டும்.
- தூய ஆவியாரின் அருளால் ஒருவர்
ஒளிர்விக்கப்பட வேண்டும்.
- நற்செய்தியை அவர் ஏற்க வேண்டும்.
- அதில் நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.
- திருமுழுக்குப் பெற வேண்டும்.
- இயேசுகிறிஸ்துவின் சீடராக வேண்டும்.
- இயேசு கட்டளையிட்டயாவற்றையும்
கடைப்பிடிக்க வேண்டும்.
- விளைவாக மீட்பு பெறுவர்.
இத்தனையும் நிகழும்போது ஒருவர் திருமுழுக்கு பெறுகிறார்.
2. திருமுழுக்கு அடிப்படை தேவைகள்
நற்செய்தி போதகமும், மனந்திரும்புதலும், விசுவாசமும் ஒருவர் திருமுழுக்குப் பெறுவதற்கு தேவையானவை என்பது தெளிவு.
நற்செய்தியைப் போதித்துதான் ஒருவரைச் சீடராக்க வேண்டும் என்பது உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விருப்பம். நற்செய்தி போதகம் என்பது வாய்மொழி போதகத்தை மட்டும் குறிப்பிடுவதில்லை. இன்றைய உலகின் சூழலில் எல்லா இடங்களிலும் இதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கலாம். சில இடங்களில் இதற்குத் தடையும் போடப்பட்டிருக்கலாம். “கிறிஸ்துவின் வாய்மொழியாலும் அவரோடு நடத்திய வாழ்வாலும் அவர்தம் செயல்களாலும் தாம் பெற்றவற்றையும் தூய ஆவியாரின் தூண்டுதலால் தாம் கற்றவற்றையும் திருத்தூதர்கள் தம் வாய்மொழிப் போதனை, வாழ்வின் எடுத்துக்காட்டுகள், ஏற்படுத்திய அமைப்புகள் ஆகியவற்றின் வாயிலாக வழிவழியாக வழங்கினார்” என்று (இ.வெ.எண் 7). இறைவெளிபாடு பற்றிய கோட்பாடு விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இதிலிருந்து வாய் மொழி போதகத்தைத் தவிர்த்து வாழ்வின் எடுத்துக்காட்டுக்களாலும் நற்செய்தியைப் போதிக்கலாம் என்று தெரிகிறது. “உண்மையான கிறிஸ்தவ வாழ்வின் சான்றுதான் திருஅவையின் நற்செய்தி போதகப் பணியின் முதல் வழியாகும்” (சிஹி.41) என்று திருத்தந்தை ஆறாம்பால் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நற்செய்தி போதகத்தைக் கேட்பதாலும், நற்சான்று வாழ்வையும், அறப்பணி செயல்களைப் பார்ப்பதாலும், அவற்றின் பயனை ஒருவர் அனுபவப்பதினாலும் அவர் இயேசுகிறிஸ்துவின் பக்கம் கவரப்படுகிறார். இதை செயலாற்றுபவர் தூய ஆவியார் ஆவர். பயனாக அவர் மனம் மாறுகிறார், இயேசுவைப் பற்றிக் கொள்ள ஒழுக்கத்துக்கடுத்த தகாத தம் நடத்தையை விட்டுவிடத் தூண்டப்படுகிறார். விரும்புவார், அவர் காட்டிய நெறியைக் கடைப்பிடிக்க முன்வருவார். இதுதான் அவரைப் பொறுத்தமட்டில் மனம் மாறுதல் ஆகும்.
இவற்றின் ஒட்டுமொத்த வெளிப்பாடே விசுவாசமாகும். “ஆகவே அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும் ” (உரோ 10:17) என்று பவுலடியார் கூறுகிறார். மேலும் ‘இயேசு ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள் (10:9) என்று அவரே கூறியுள்ளார்.
இவ்வாறு தங்கள் நம்பிக்கையை வெளிப் படுத்தியவர் திருமுழுக்குப் பெறுவர். எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று கடவுளை வணங்கி விட்டுத் திரும்பிச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது எசாயாவின் இறைவாக்கு நூலை வாசித்துக் கொண்டு சென்றார். பிலிப்பு என்ற திருத்தொண்டர் தூய ஆவியரால் தூண்டப்பட்டு அவரிடம் சென்று நீர் வாசிப்பதன் பொருள் உமக்குத் தெரிகிறதா? என்று கேட்கிறார். அவர் இல்லை என்றுச் சொல்ல, பிலிப்பு அப்பகுதிக்கு விளக்கம் அளிக்கிறார். அதைக்கேட்டு நம்பிக்கைக் கொண்ட அரச அலுலர் வழியில் தண்ணீர் இருப்பதைக் கண்டு திருமுழுக்குப் பெற்றார் (காண் தி.ப 8:9-40).
இவை அனைத்திலுமிருந்து தெளிவாவது என்னவென்றால் போதகம் மனந்திருப்புதலுக்கு வழிவகுக்கும் மனம்திரும்புவர் நம்பிக்கைக் கொள்ளச் செய்கிறது. நம்பிக்கை திருமுழுக்கு பெறுவதில் முடிவடைகிறது. ஆனால் இவை அனைத்தும் ஒரு நாளில் நிகழ்வதன்று இதற்கு நீண்டகாலம் தேவைப்படுகிறது.
இது தொடக்கக்கால திருஅவையில் ‘ஆயத்தக் காலம்’ (தயாரிப்புக்காலம் ‡ ளீழிமிeஉஜுற்துலிதுமிe) என அழைக்கப்பட்டது. இந்த தயாரிப்பு காலம் காலப்போக்கில் சீரழிந்துவிட்டது என்று முந்திய சிந்தனையயான்றில் குறிப்பிட்டோம். இதை புதுப்பிப்பது எவ்வாறு என்று இனிவரும் சிந்தனையில் விளக்கம் காணலாம்.
3. திருமுழுக்கின் பயன்கள்
திருமுழுக்குப் பெறுவதினால் பாவங்களுக்கு மன்னிப்பு பெறுகிறோம்; கிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருளில் பங்கு பெறுகிறோம்; இருளின் வல்லமையிலிருந்து விடுபட்டு, இறைவனின் சுவிகாரப் பிள்ளைகள் என்னும் நிலைக்கு உயர்த்தப்படுகிறோம்; நீரினாலும், தூய ஆவியினாலும் புதுப்படைப்பாக மாறுகிறோம். அதனால் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுகிறோம்; திருஅவையின் உறுப்பினராகின்றோம்; இறைவனின் உறவிடமாகக் கட்டி எழுப்பப்படுகிறோம்; மறுபிறப்படைந்த மற்றவர்களுடன் ஒற்றுமைப் பிணைப்பைப் பெறுகின்றோம்; புனித எண்ணெய்யால் திருநிலைப்படுத்தப்பட்டு இயேசு கிறிஸ்துவின் அரச, குருத்துவ, இறைவாக்குரைக்கும் பணிகளில் பங்கு பெறுகின்றோம். சுருங்கச் சொல்லின் நாம் பெறும் திருமுழுக்கு நம்மில் தீவிர மாற்றத்தைக் கொணர்கின்றது.
“நீங்கள் மனம் மாறுங்கள், உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசுகிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்” (திப 2:38) என்று புனித பேதுரு கூறுவதிலிருந்து திருமுழுக்கினால் மனந்திரும்புவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன எனத் தெரிகிறது. பாவங்கள் என்பது பிறப்பு வழி பாவங்களையும், செயல்வழி பாவங்களையும் குறிக்கும்.
திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அவருடைய சாவிலும் இணைந்திருக்கிறோம்... இறந்த கிறிஸ்துவை மாட்சிமைக்கு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் திருமுழுக்கினால் புதுவாழ்வு பெற்றுள்ளோம். கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நமது நம்பிக்கை என்று புனித பவுல் கூறுகிறார் (உரோ 6:3-10 காண்க).
திருமுழுக்குப் பெற்றவர்கள் ‘கிறிஸ்துவின் உறுப்புகள்’ (1 கொரி 6:15) ‘அவர் எழுப்பிய கட்டடம்’ (1 கொரி 3:9) என்றும், ‘ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார்’ (1 கொரி 6:17)என்றும், ‘தூய ஆவி தங்கும் கோவில்’ (1 கொரி 3:16; 6:19) என்றும் பவுல் குறிப்பிட்டிருப்பது திருமுழுக்கினால் நம்மில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை - அதாவது நாம் கிறிஸ்துவோடு ஒன்றித்திருப்பதால் அவரது மறைஉடல் ஆகிறோம். தூய ஆவியார் நம்மில் குடிக்கொண்டிருக்கிறார் - கோடிட்டுக் காட்டுகிறது.
இறைவன் நிறைவான நிலையில் இவ் வுலகைப் படைத்தார். ஆனால் மனிதனின் பாவம் படைப்பைப் பங்கப்படுத்தி விட்டது. இது பற்றி விவரிக்க விரும்பிய புனித பவுல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது. தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தியவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை” (உரோ 8:20). ஆனால் கிறிஸ்து இயேசுவில் புதிய படைப்பு ஏற்கனவே தோன்றியுள்ளது. இது முதன்முதலில் மனிதனில் நிகழ்ந்துள்ளது.அவன் பெற்ற திருமுழுக்கு வழியாக அவன் புதுப்படைப்பாக (காண் கலா 6:15; கொலோ 3:10) பிறந்துள்ளான்.
திருமுழுக்கு வழியாக ஒருவர் திருஅவையின் உறுப்பினர் ஆகின்றார். இதுபற்றி திருத்தூதர் பணியில் கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. “அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டார்கள்” (2:41). இங்கு “அவர்களோடு” என்பது திருஅவையைக் குறிக்கும்.
இதன் விளைவாக திருமுழுக்குப் பெற்றவர் மற்ற நம்பிக்கையாளர்களுடன் ஒன்றிக்கிறார்கள். இது பற்றி புனித பவுல் இவ்வாறு கூறுகிறார். “கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துக் கொண்டீர்கள். இனி உங்களிடம் யூதர் என்றும், கிரேக்கர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்” (கலா 3:26-28).
முடிவுரை :
ஒருவர் மனந்திரும்பி திருமுழுக்குப் பெறுவதினால் அவரில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், அவர் அடைந்துள்ள புதிய நிலையின் மாண்பினை எடுத்துரைத்தோம். இவற்றை வாழ்வியலாக மாற்றி வாழ்வது ஒவ்வொரு நம்பிக்கையாளரின் கடமையாகும்.
இதுவரை திருமுழுக்குப் பற்றிய பொதுப் படிப்பினைப் பற்றிய விளக்கம் கண்டோம்; திருமுழுக்குப் பெற அடிப்படையான தேவைகள் பற்றியும் பட்டியலிட்டோம். இனிவரும் சிந்தனைகளில் இவையனைத்தும் எவ்வாறு குழந்தைகளின் திருமுழுக்கிலும், முதியோருக்கான திருமுழுக்கிலும் சித்திப் பெறுகின்றது என்றும், அங்கு நாம் சந்திக்கும் சவால்கள் யாவை, அவற்றை எவ்வாறு மேற்கொள்வது எனக் காண்போம்.
(தொடரும்...)
No comments:
Post a Comment