இரட்சணிய யாத்திரிகம்
- திரு.குமார் ஆசிரியர், எம்.ஏ., எம்.பில்., பி.எட்.,
விரகாலூர்
இலக்கியக் கொள்கை
இறைவன் என் இதயத்தை திறந்தார், அவரைத் துதிக்கதான் எனது வாயைத் திறந்தேன் என எழுதி வைத்தவர் கிறித்தவக் கம்பர் எச்.ஏ.கிருட்டிணன். இவருடைய நூல்கள் பெரும்பாலும் இரட்சணியம் என்ற சொல்லைக் கொண்டன. அவை இரட்சிப்பினைப் பற்றி கூறுவன. இதிலிருந்து இவரது தலையாய இலக்கியக் கொள்கை இரட்சிப்பினை, பேரின்பப் பெரு வாழ்வு நெறியினை எடுத்தக் கூறுவது என எண்ணலாம். மனமாற்றத்தால் மதம் மாறிய இவர் தாம் அறிந்த பேரின்பப் பெருவாழ்வு நெறியினை, இரட்சிப்பினை உலகம் அறியவேண்டும் என்ற வேட்கையுடையவராய்ச் செயல்பட்டார் எனலாம்.
சிற்றின்பம் பற்றி பாடாத நிலை :
இலக்கியத்தின் பயன்களாக இன்பமாய் இருத்தல், அறிவுறுத்தல் என்ற இரண்டினைப் பொதுவாகச் சொல்வதுண்டு, கிறித்தவ கம்பருக்கு இன்பம் என்ற நோக்கத்தில் சிறிதும் நாட்டமில்லை. சிற்றின்ப வாயிலாகப் பேரின்ப நிலையறிதல் என்பதும் உடன்பாடில்லை. வெற்று நேரப் பொழுது போக்கு என்பதாக இலக்கியப் பயன் அமைதல் கூடாது என்பவைகளில் அழுத்தமான நம்பிக்கையுடையவர். தமது இலக்கியக் கொள்கைகளாக, தமது இரட்சணிய யாத்திரிகச் சிறப்புப் பாயிரத்தில், நூலின் மையக் கருத்தைச் சுட்டும் முகத்தான்.
“வெற்று நேரப்போக காய்ப்புகல் வினோதமுமன்று
புற்ற ராவிடம் பொதிந்த செப் பெனக்கவி புனைந்து
சிற்றின் பத்திறம் திருத்தியு காதையு மன்று
மற்றி தாத்தம ரட்சணை வழங்குமோர் மருந்தாம்”
எனத் தெளிவுப்படுத்தியுள்ளார். ஆதலின் சிற்றின்பம் பாடுதல் இவர் கொள்கையன்று என்பதும், சிற்றின்பம் பாடுதல் பாம்பின் விடத்தைச் செம்பில் அடைத்து வைக்கும் தன்மையை ஒத்தது என்பதில் நம்பிக்கை உடையவர். ஆன்மாக்களை மீட்பதற்கு நூல்கள் இயற்றலே தமது இலக்கியக் கொள்கையாகக் கொண்டவர் என்பதும் உறுதிப்படுகின்றது.
மனத்தை உருக்கும் இயல்பு :
பக்தி இலக்கியப் பாங்கிற்கேற்ப உள்ளத்தை உருக்கும் இயல்பு இவரது படைப்புகளில் பெரிதும் காணப்படுகிறது. கிறிஸ்து தம்மை ஆட்கொண்ட நிலையைக் கற்போர் மனமுருக கீழ்க்காணும் பாடலில் கூறுகிறார்.
“பிறவியிற் பிடிவாத கொடியவை ணவனாய்ப்
பிறந்துமுப் பதுவவற்சாம்
பிரபஞ்ச மயல்கொண்டு மூடாந்தகாரப்
பிழல்பிலடை பட்டுழன்று
மறவினைக் காளாகி நெறிநிலாத் தூர்த்த மன
வாஞ்சைக் கொடுத்து
மருளுற்று வறிதுநாட் செலவிட்ட நீசனெனை
மலரடிக்காட் படுத்திக்
குறைவிலாப் பேரரு ளனித்தின்று காறுங்
குறிக் கொண்டு கடத்தியயனிறு
கொச்சைமதி யேற்கின்னு நன்றியறி யாக் கெட்ட
குணதோச மொழிய விலையே
இறைவலப் புறமிருந்தடியருக் காப்பரிந்
தென்று மன் நாடுமுகிலே
ஏகநா யகசருவ லோகநா யககிறிஸ்
தியேசு நாயக சுவாமியே”
என வரும் பாடல்கள் நிறைய உள்ளன.
தாய்த் தமிழின் இலக்கிய மரபு போற்றல் :
கிறித்துவக் கம்பரின் இலக்கியக் கொள்கையாகத் தமிழ் இலக்கிய மரபுப் போற்றுதல் சொல்லுதற்குரிய ஒன்று. எந்தவொரு படைப்பாளனும் தனக்கே முற்றிலும் சொந்தமான இலக்கிய அமைப்பினை உடையவனாய் விளங்குவதில்லை. தனக்கு முன் தோன்றிய இலக்கியங்களின் அமைப்பினை, மரபினை ஏற்றே நூல்கள் படைக்கப்படுகிறது. கிறித்துவக் கம்பரும் தமது படைப்புகளைத் தமிழ் இலக்கிய மரபுகளையேற்றுப் போற்றியே படைத்துள்ளார். இரட்சணிய யாத்திரிகம் என்னும் இவரது தனிப்பெரும் படைப்பு தமிழ்க்காப்பிய மரபுகளைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இவர் இரட்சணிய யாத்திரிகக் கதையினை ஜான் பனியனிடத்திலும், காப்பிய வடிவ அமைப்பின் பெரும் பகுதியைக் கம்பனிடத்தில் அறிந்து கொண்டார் எனலாம். தமிழ் நூல்களில் நல்ல பயிற்சியுடைய இவரது உள்ளம் தாம் படித்த நூல்களில் உள்ள இலக்கியச் சுவையை தாம் படைத்த நூல்களில் இடம் பெறச் செய்ய மறக்கவில்லை. எனவே இரட்சணிய யாத்திரிகத்தில் தமிழ்க்காப்பிய மரபுகளும், தேவார திருவாசக, திவ்வியப் பிரபந்தகங்களின் இனிமையும், உருக்கமும், கருத்தும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றது. இரட்சணிய யாத்திரிகத்தின் இடையிடையே இவரால் எழுதப் பெற்ற தேவாரப் பதிகங்கள் இடம் பெற்றுள்ளன.
உருவகத்தைப் போற்றல் :
உருவகத்தைப் பயன்படுத்தி மெய்ப்பொருளை விளக்குவது என்பதும் கிறித்தவ கம்பரின் இலக்கியக் கொள்கையாக கூறுதற்குரியது. பக்தியுணர்வை வெளிபடுத்த உருவகப் பாடல்கள் பெரிதும் துணை செய்வன. உருவகமானது கருத்தினை ஆற்றல்படச் சொல்லும் வலிமையுடையது. இதனை நன்குணர்ந்த கிறித்தவக் கம்பர் உருவகத்தைத் தமது பாடல்களில் பயன்படுத்தியுள்ளார். இரட்சணிய யாத்திரிகத்தின் மூல நூலான மோட்சப் பிரயாணம் முற்றுருவக நூலகப் பாடியுள்ளார். தமிழில் காணப்படும் ஒரே முற்றுருவகக் காப்பியம் என்னும் சிறப்பிற்குரியது என்பர். இரட்சணிய யாத்திரிகக் கதையில் வரும் பாத்திரங்களும் இடங்களும் நிகழ்ச்சிகளும் உருவகங்களே. இவ்வாறு காப்பியமே முற்றுருவகக் காப்பியமாக அமைந்திருப்பதோடு, பாடல்களிலும் உருவக அணி பெரிதும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இரட்சணிய யாத்திரிகப் பாடலொன்று மூவொரு கடவுளில் ஒருவரான பரிசுத்த ஆவி, உள்ளமாகிய வயலை உழுது, மெய்பக்தி என்னும் விதை விதைத்து, நாட்டம் வைத்து, அருள் பாய்ச்சி, நலிவு என்னும் களையகற்றி, முளைத்த பயிரை வாடாமற் காத்து, நற்கதி விளைவித்து அடியார்களை வாழச் செய்யும் என்று உருவக நிலையில் கூறியுள்ளது. உழுதல், விதைத்தல், நீர் பாய்ச்சுதல், களையகற்றல், காத்தல், விளைவித்தல் என்னும் உழுவுத் தொழிலை முறைமை சிறிதும் மாறாத குறிப்பிடப்பட்டுள்ள செயல் கருதற்குரியது. இவ்வுருவக நிலையை,
“கோட்டமற்று உளம்திருத்தி குலவுமெய்ப் பக்தி வித்தி
நாட்டம் வைத்து அருள் நீர்பாய்ச்சி நலிவெலாம் அகற்றியாதும்
வாட்டம் இன்றாக ஒம்பி வரகதி விளைவித்து அன்பர்
ஈட்டம் ஆர்த்து உய்த்துப்பிக்கும் இதய நாயகனே போற்றி”
என்ற பாடல் வழி உணர முடிகின்றது.
உரைநடை செய்யுள் நூலாதல் :
தமிழகத்தில் உரைநடை வளரத் தொடங்கிய காலத்தில் வாழ்ந்த கிறித்தவக் கம்பர், மோட்சப் பிராயணம் என்னும் உரைநடை நூலை மூல நூலாகக் கொண்டு, இரட்சணிய யாத்திரிகத்தைச் செய்யுள் நூலாகப் படைத்தமை இவரது இலக்கியக் கொள்கையை சுட்டுவதாகவுள்ளது. கவிஞருக்குப் பக்தி, உணர்ச்சி, ஒழுக்கம் பற்றிய நூல்கள் செய்யுள் வடிவில் அமையுமானால், உரைநடை நூல்களிலும் சிறந்து விளங்கும் என்ற கருத்து உண்டு. எனவே உரைநடை வடிவிலுள்ள கிறித்துவத் திருமறை, செய்யுள் வடிவில் ஆகவேண்டுமென்ற முயற்சியும் இரவது படைப்புகளில் வெளிப்படுத்துவதாக உள்ளன.
இதன் மூலம் கிறித்துவக் கம்பர் காப்பியக் கொள்கையறிந்தவராகவும், தோத்திர நூல் கொள்கையைப் போற்றுபவராகவும், சாத்திர நூல் கொள்கையை உணர்ந்தவராகவும் அறிய முடிகின்றது. (தொடரும்).
No comments:
Post a Comment