Pages - Menu

Saturday, 4 February 2017

நான் எழுத்தாளன் ஆனேன், 15. கவியரசு கண்ணதாசன் அறிமுகம்

நான் எழுத்தாளன் ஆனேன்

- லெயோ ஜோசப், திருச்சி

15. கவியரசு கண்ணதாசன் அறிமுகம்

29 காஸட்டுகள் போட்டோம். சென்னை அடையாறில், மான்போர்ட் சகோதரர்கள், வாய்ப் பேசா இளைஞர்களுக்காக ஓர் அச்சகம் நடத்துகிறார்கள். அங்குதான் பாடல் புத்தகம் அச்சானது. அயனாவரத்தில் உள்ள அக்காள் வீட்டிலிருந்து சாப்பாடு கட்டிக் கொண்டு, தினசரி காலை பேருந்தில் அடையாறு போவேன். பிழைதிருத்தம் செய்வேன். மாலையில் வீடு திரும்புவேன்.

ஆறு மாதங்கள் ஓடியது. அழகிய ‘இறைப்பணி பாடல்கள்’ என்ற புத்தகம் உருவானது. பாடல், பிழைதிருத்தம் எல்லாம் நான்தான். சகோதரர் ஜெபமாலை, ஒரு புத்தகத்தை ஃபாதர் ஜார்ஜிடம் கொண்டு போய் காண்பித்தார். ‘ஒரு பிழைகூட இல்லாமல் பார்த்திருக்கிறார்’ என்று கூறினார்.

கண்ணதாசன் குற்றாலத்தில் ‘இயேசு காவியம்’ எழுதத் தொடங்கியிருந்தார். அப்போது என்னை அழைத்துச் செல்லவில்லை. ஃபாதர் ஸ்தனிஸ்லாசும், ஃபாதர் ஜார்ஜ்‡ம் விவிலியத்தைப் படித்துச் சொல்ல, கண்ணதாசன் கூற, கண்ணப்பன் எழுதுவார். இப்படியாக இயேசு காவியம் 9 நாளில் உருவானது.

கண்ணதாசன் கவிதை சொல்லும்போது மடமடவென்று சொல்லுவார். வார்த்தைகள் சரளமாக வந்து விழும். சமயத்தில் தவறாக இருக்கும். அவர் சொல்லும் சரளம் கெட்டு விடுமே என்பதால், தவறாக இருந்தாலும் விட்டு விடுவார்கள். ஊருக்குத் திரும்பியதும் 8 குருக்கள் (எல்லோரும் இறையிலில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்) அமர்ந்து குறைகளைக் கண்டுபிடிப்பார்கள்.

நான் குமாஸ்தா. குருக்கள் கூறும் குறைகளைக் குறித்துக் கொண்டு, மீண்டும் நகலெடுத்து, செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரிக்குச் சென்று, புரொபசர் சாமிமுத்து  ஐயாவைப் பார்த்து, நகலெடுத்தவைக்கு அசை பிரித்து வாங்கி வந்து நகலெடுத்து, மீண்டும் படிக்கத் தயாராக வைக்க வேண்டும். இதற்காக எனக்கு ஒரு தனி அறை, ஒரு டைப்பிஸ்ட்.

இது வரை டிஸ்யூ பேப்பர் வைத்து நகலெடுத்து, ஜெம் கிளிப் குத்தி வைத்து விடுவார்கள். அதைத்தான் படித்துப் பார்க்க வேண்டும்.

நான் ஒரு காரியம் செய்தேன். சார்ட் அட்டை வாங்கி வந்து, 10 தனித் தனி புத்தகமாகத் தயாரித்தேன். அதைப் பார்த்ததும் குருக்கள், ‘இது யார் செய்தது?’ என்று கேட்டார்கள். ஃபாதர் ஜார்ஜ் என்னைக் காண்பித்தார். ‘வெரிகுட்’ என்றார்கள்.

நான் பாமரத்தனமாக விவிலியத்திலிருந்து சில சந்தேகங்களை எழுப்பினேன். ‘அட, இவர் நல்ல சந்தேகங்களை கேட்கிறாரே! நீங்க ஏன் தனியாக அங்க உட்காந்திருக்கீங்க? நாற்காலிய தூக்கிக்கிட்டு இங்க வாங்க’, என்று என்னையும் குழுவோடு சேர்த்துக் கொண்டார்கள். (இயேசு காவியத்தைப் பார்த்தீர்களானால், ஃபாதர்.ஸ்தனிஸ்லாஸ் எழுதிய முன்னுரையில், அறிஞர் வரிசையில் என் பெயர் இருக்கும்).

பிழை திருத்தினோம். கண்ணதாசனை அழைத்து, ஆனந்த் ஹோட்டலில் ரூம் போட்டு திருத்தும் பணியை மேற்கொண்டோம். கண்ணதாசன் கூடியவரையில் தத்துவங்களைக் கையாள்வார். யூத சட்டப்படி கசையடி என்றால் 40 அடிதான் அடிக்க வேண்டும். மேற்கொண்டு  ஓர் அடி அடித்தால், அடித்தவனுக்குக் கசையடி விழும். இதனால் 39  அடியுடன் நிறுத்திக் கொள்வார்கள். ஆனால், இயேசுவைப் பொருத்தவரை, அடித்துக் கொல்ல வேண்டும் என்ற நோக்கில் கணக்கின்றி அடித்தார்கள்.

இதைச் சொன்னோம். 8 வரிகளை மாற்ற வேண்டுமே என்று சற்றுத் தயங்கினார். பிறகு சொல்லத் தொடங்கினார்.

நாற்பதில் ஒன்றுகு றைத்துத்தான் - அடி
நல்குவ ராம்அந்த நாளிலே - வெற்று
ஆர்ப்பரிக் கும்அந்தக் கூட்டமோ - எண்ணி
ஆயிரம் நூறென ஆடிட்றாம் - முற்றும்
தோற்பவர் இப்படி ஆடுதல் - இந்தக்
தொல்புவி யில்உள்ள வேதமே - அதை
ஏற்றது நாயகன் மேனியே - இரத்தம்
இன்னொரு யூதர்கள் கேணியே
!
உடம்பு சிலிர்த்துப் போயிற்று. கவியரசு கண்ணதாசன் பற்றி நிறைய செய்திகள் உண்டு. 
(இன்னும் சொல்வேன்)

No comments:

Post a Comment

Ads Inside Post