தற்கால இலக்கியத்தில் பெண்ணியப் படைப்பாளிகள்
(இலக்கியங்கள் சமதாயத்தின் உரைகற்கள், இடிபாறைகள், முன்னோட்டங்கள். இன்றைய தமிழ் இலக்கியங்களை கோடிட்டு காட்டுகிறார் சகோதரி அவர்கள்)
- அருட்சகோ. விமலி FIHM,
இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்
கி.பி. 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டு முதல் பெண்களின் சமூக விடுதலைக்கான இலக்கியங்கள் அதிகமாக படைக்கப்பட்டு வந்துள்ளன. பாரதியார், பாரதிதாசன், வாணிதாசன், சாரதா, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் முதலிய கவிஞர்களும், தற்காலத்தில் வானம்பாடி கவிஞர்கள் சிற்பி, புவியரசு, மேத்தா, சக்திக்கனல், அக்கினிபுத்திரன், அ.மார்க்ஸ் முதலிய கவிஞர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் வழியில் பல முற்போக்குக் கவிஞர்கள் தொடர்ந்து எழுதி வருகின்றனர். சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், குழந்தை மணம், கைம்மை, பலதார மணம், சொத்துரிமை மறுப்பு, பெண்கல்வி, பர்தாமுறை, தேவதாசிமுறை ஆகியவற்றைக் கருப்பொருளாக வைத்து நாவல்கள் பலவும் பிற்காலத்தில் படைக்கப்பெற்றன. லட்சுமி, வை.மு. கோதைநாயகி, அனுமத்தா, ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி முதலிய பெண் நாவலாசிரியர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழ் இலக்கியங்களில் பெண் சிந்தனையாளர்கள் பற்றிப் பேசுவோர் சங்ககால ஒளவையாரிலிருந்து சமீப கால அம்பை வரை உதாரணங்களாக கொள்வர். சமீப கால எழுத்தாளரிடையே அம்பை, ராஜம் கிருஷ்ணன், ஜோதிர்லதா, கிரிஜா, இரா.மீனாட்சி, அமரந்தா, அழகுநிலா, அரசுமணிமேகலை, அனுஷாரசி, ஆனந்தி, இந்திரா சுந்தர், கனிமொழி, சல்மா, செல்வநாயகி, மாலதி மைத்ரி, இளம்பிறை, இன்பரதி, திலகபாமா, கல்பனா, பாரதி கண்ணம்மா என இக்கால பெண் கவிஞர்களின் வரிசை நீண்டுகொண்டே செல்கின்றது. இவர்களின் அனுபவமும் நடப்பியல் உண்மையும் உரிமையோடு பெண்ணியமாக மிளிர்கின்றது. மேலும் பெண்களது சமூக கலாச்சார ஒடுக்குமுறை பற்றிய உணர்வினைத் தமது சிறு கதைகளிலும், நாவல்களிலும் வெளிப்படுத்தியுள்ளனர். இக்கால பெண் மொழிக்கான அடையாளப் பதிவாகவும் இவை உள்ளன.
இக்காலக் கட்டங்களில் தோன்றும் புதினங்கள் பலவும் நடப்பியல் கூறுகளையே முதன்மையாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. இன்றைய சமுதாயத்தின் வளர்ச்சியினையும் வீழ்ச்சியினையும் வெளிப்படுத்துவதாகவே அமைகின்றன. சமுதாயத்தோடு நெருங்கிய தொடர்புடையது இலக்கியம். இது மனித வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு பெற்றிருப்பதால் சமூக எல்லைக்குள் அடையக் கூடியதாய், அறிவுப்பூர்வமானதாய், வாழ்க்கையை அமைதியாக விளக்கும் படைப்பிலக்கியமாய் இலக்கியம் அமைகிறது.
பெண்ணின் சிந்தனையிலும், செயலிலும் புதுமை பிறக்க வேண்டும். பாரதி கூறியதுபோல நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாய் இந்தப் பூமிதனில் பெண்கள் வலம்வர வேண்டும் என்று பெண்ணுரிமை பேசும் புதிய சிந்தனையாளர்கள் இன்றைய காலத்தின் தேவையாகும். பெண்களின் சொந்த வாழ்க்கையின் இழப்பையும், சமூக வாழ்க்கையின் இழப்பையும் இணைத்துச் சொல்லும் இலக்கியங்கள் இன்று தேவையாக உள்ளன. 21ஆம் நூற்றாண்டில் ஊடகங்கள் பெரிய மாற்றத்திற்கு ஆளாகிவிட்டன. கைப்பேசி, தொலைக்காட்சி, இணையதளம், முகநூல் என மாற்றம் பெற்றுள்ள இக்காலத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. அனைவரும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து விடுகின்றனர். தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இடையேயுள்ள போட்டி காரணமாக பெண்ணடிமைத்தனமும், மூடப்பழக்கங்களும், வேண்டாத சடங்குகளும் தொடர்ந்து திணிக்கப்படுகின்றன.
விரிந்த பார்வை, அகன்ற படிப்பு, பிரச்சினைகளை அவற்றின் சகல பரிமாணங்களுடன் அணுகுதல் என்ற அனைத்து வாய்ப்புகளையும், அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கலை இலக்கியம் என அனைத்து தளங்களிலும் எழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் இன்றைய இலக்கியப் படைப்பாளிகளிடம் இருக்க வேண்டும். இலக்கியங்கள் இன்றைய மனிதர்களின் உணர்ச்சிகள், கற்பனைகளை வெளிக்கொணரும் வகையில் எழுத்துப் படைப்புகள் திகழ்தல் வேண்டும்.
ஓர் எழுத்தாளர் புறக்கணிக்கப்படலாம். ஆனால் அவரது எழுத்துகள் எப்போதும் புறக்கணிக்கப்படக் கூடாது. இதற்கு பாரதி மிகச்சிறப்பான முன்னுதாரணமாவார். கலைஞர்களும், எழுத்தாளர்களும் ஓரிடத்தில் நின்றுவிடாமல், அடுத்தடுத்த நகர்வுகளுக்கு ஊர்ந்துகொண்டே இருக்க வேண்டும். எழுத்தாளர் நிலத்தடி நீர் போன்றவர்கள் சமூகத்துக்குள் மறைந்துள்ள ஈரத்தை வெளிப்படுத்துவதே எழுத்தின் நோக்கமாக வேண்டும். பெண்மை நலம் காக்க, முற்போக்கு சிந்தனை கொண்டப் படைப்புகள் வெளிவர வேண்டும். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.
No comments:
Post a Comment