Pages - Menu

Saturday, 25 February 2017

பெண்மையைப் போற்றுவோம்

பெண்மையைப் போற்றுவோம்

உலகில் உயர்ந்த உயிரினமாகிய மனிதர், உலகில் உதிப்பது தாய்மையினால்தான். மனித பிறப்பிலும், அவர்களின் வளர்ப்பிலும் உண்டாகும் பாரங்கள், துன்பங்களையயல்லாம் வரவேற்று மகிழ்வது தாய்மை. உலகை உண்டாக்கினார் இறைவன், என்று தொடக்க நூலில் படிக்கிறோம். படைப்புகளின் உச்சமாகிய மனிதரை இன்றும் நிதர்சனமாக உருவாக்கி தருபவர்கள் பெண்கள்.

மார்ச் மாதம் 8ஆம் நாள் மகளிர் நாள் என்று சிறப்பிக்கப்படுகிறது. மனிதர் பெண்களின் அருமையையும், பெருமையையும்  உணர்ந்து அவர்களின் மாண்புடன் இணைந்து வாழ அழைக்கிறது  இந்நாள்.

பெண்கள் அழகின் நிழல், உணர்வுகளின் உள்ளுணர்வு, உறுதியின் இருப்பிடம், இளகிய மனதின் ஓடை, தாய்மையின் தெய்வ நிலையில் நிற்கும் பெண்களிடைமே காதல் என்ற தேனருவி தோன்றி கவர்ச்சியில் மனிதரை மயங்க வைக்கிறது. எனவேதான் திரைபட பாடல்கள், காதல் மோகத்தையே மையமாக வைத்து வடிக்கப்படுகின்றன. பெண்களின் மயங்கும் அழகை ஒரு கவிஞர் இப்படி வர்ணிக்கிறார்.
‘நீயா பேசியது, என் அன்பே,
தீயா வீசியது’
‘ஊருக்குள் வெளிச்சமெல்லாம்
உன் கண்களை திறப்பதனால்
பூவுக்குள் பனித்துளிகள்
உன் முகத்தினை கழுவுவதினால்’

இந்த  உடல் அழகு, மாறிவிடும். இளமை மறைந்தவுடன் அழகும் மாறி மறைந்துவிடும். ஆனால் பெண்மையில் மறைந்திருக்கும் மாண்புகள் தொடர்ந்து நிற்கும். 

கிரிஸ் என்பவர் கூறுவார், ‘பெண்களுக்கு தேவையானவை மூன்று : உணவு, நீர், பாராட்டு’ என்பார். ஆஸ்கார் வில்த என்பவர் கூறுகிறார், ‘பெண்கள் அன்பு செய்யப்பட வேண்டும். அவர்களை புரிந்துக் கொள்ள முயற்சிப்பது  தேவையில்லாதது’ என்கிறார்.
 
ஆண் - பெண் உறவு இனிது. ஆண், பெண் ஆகியோரின் தனித்தன்மைகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். உணர்வலைகளின் கொதிகலன்கள் பெண்கள். ஆண்களின் அறிவு கூட்டலில், பெண்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ள தவறி விடுகின்றனர். மறைந்த இங்கிலாந்து பிரதமர், இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட மார்கிரேட் தாட்சர் கூறுவார், அரசியலில் ஒரு கருத்து சொல்லப்பட வேண்டுமென்றால், ஓர் ஆணிடம்  சொல்லுங்கள். ஏதாவது செய்யப்பட வேண்டுமென்றால் ஒரு பெண்ணிடம் சொல் என்கிறார்.

இந்நாள்களில் பெண்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடைபெறுகின்றன. கற்பழிப்பு, கொலை, பெண் சிசு கொலை, வரதட்சணை, குடும்பத்தில் கொடுமைகள் ஆகியவை பெண்மையை தாழ்வுபடுத்துகின்றன. தாய்மையின் உயர்வை கொண்டாடி போற்ற இத்திங்கள் நம்மை அழைக்கிறது. 

ஒரு கவிதையில் இவ்வாறு சொல்லப் பட்டிருக்கிறது. ‘அம்மா... அன்று நம் தொப்புள் கொடியை அறுத்தது நம் உறவை பிரிக்க அல்ல. அது நம் பாசத்தின் தொடக்கத்திற்கு வெட்டப்பட்ட ரிப்பன்’.  நம்மிடையே  உலவிவரும் தெய்வ நிழலான தாய்மையை, பெண்மையை போற்றி வளர்வோம்.

இம்மாதத்தில் நொடிக்கு நொடி அரசியல் நிகழ்ச்சிகள் வெடியாக வெடித்தன. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதவி துறந்தது, தான் மிரட்டப்பட்டதாக துணிவுடன் வெளியிட்டு, திருமதி.  சசிகலாவிற்கு எதிராக போர்கொடி உயர்த்தியது, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆடம்பர விடுதிகளில் அடைக்க வைக்கப்பட்டிருந்தது, திருமதி. சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில், இருபது வருடங்களாக இழுக்கடிக்கப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்து, அவர்கள் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது.

சட்டசபையில் பெரிய அமலிகளுக்கிடை யில் திரு.எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனவை எல்லாம், தமிழ்நாடு அரசியலில் இன்னும் நாகரிக முதிர்ச்சி பெறவில்லை என்றுதான் சொல்கின்றன. தெய்வமாக போற்றபெற்ற முன்னாள் முதல்அமைச்சர் செல்வி. ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததில் முதல் குற்றவாளி என்று நூறு கோடி ரூபாய் தண்டனையும், அவர்களுடைய சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டும் உள்ளன. மக்களின் பணத்தை அரசியல் தலைவர்கள் சூரையாடி வருகிறார்கள் என்பது அப்பட்டமாகியிருக்கிறது. ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களிடம் வெடித்த புரட்சியை போல் தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் அவலங்களை அகற்றவும் மற்றொரு எழுச்சி தோன்ற வேண்டும்.

No comments:

Post a Comment

Ads Inside Post