திருப்பலி விளக்கம்
- அருள்பணி. எஸ். அருள்சாமி,
பெத்தானி இல்லம், கும்பகோணம்
12. வார்த்தை வழிபாடு (4)
மறையுரை
வார்த்தை வழிபாட்டில் மூன்று அல்லது இரண்டு வாசகங்கள் பறைசாற்றப்பட்டபின் மறையுரை வழங்கப்படுகிறது. மறையுரை எப்படி அமைந்திருக்க வேண்டும்? என்பது பற்றி இன்னும் சிலரிடையே சரியான புரிதல் கிடையாது. எனவே எனது விளக்கத்திற்குமுன் இதுபற்றிய ஒழுங்குமுறைகள் எவ்வாறு வகுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவுப்படுத்தும் முறையில் திருஅவையின் படிப்பினைகளைத் தருகிறோம்.
வாசகநூல் பொது முன்னுரை எண் 24
திருவழிபாட்டு ஆண்டின் போக்கில், இறைவார்த்தையின் அடிப்படையில் விசுவாச உண்மைகளுக்கும் கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்கும் விளக்கம் அளிக்கும் மறையுரை இறைவாக்கு வழிபாட்டின் ஒரு பகுதியாகும் (தி.வ.எண் 52; திருச்சடங்கு பேராயம், ணூஐமிer நுeஉற்துeஐஷ்உஷ், 26.09.1964, எண் 54 காண்க). சில வேளைகளில் அது கட்டாயம் என்று திருவழிபாடு பற்றிய கொள்ளை விளக்கம் ஆணையிட்டுள்ளது. திருப்பலியில் மறையுரை பெரும்பாலும் திருவழிபாட்டுத் தலைவரால் நிகழ்த்தப்பட வேண்டும். அதன் நோக்கம், அறிவிக்கப்பட்ட இறைவாக்கும் நற்கருணை வழிபாடும் “மீட்பின் வரலாற்றில் அல்லது கிறிஸ்துவின் மறைபொருளில் இடம்பெறும் இறைவனின் வியத்தகு செயல்களைப் பறைசாற்றுவதாகும்” (தி. வ. எண் 35)
மறையுரை வாசிக்கப்பட்ட விவிலிய வாக்கையோ அல்லது வேறு வழிபாட்டு பாடத்தையோ விளக்குவதாய் இருக்கும் ...
மக்கள் கூட்டத்தோடு கொண்டாடப்படும் எல்லாத் திருப்பலிகளிலும் மறையுரை இடம்பெற வேண்டும்.
உரோமை திருப்பலி நூல் பொது போதனை எண் 65
மறையுரை திருவழிபாட்டின் ஒரு பகுதியாகும். அது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் கிறிஸ்தவ வாழ்வுக்கு ஊட்டமளிக்க அது தேவை. திருவிவிலிய வாசகங்களிலிருந்தோ, திருப்பலியின் பொதுப் பகுதி அல்லது சிறப்புப் பகுதியிலிருந்தோ தெரிவு செய்யப்பட்ட ஒரு பாடத்தின் சில கூறுகளை விளக்குவதாக மறையுரை அமைய வேண்டும்; கொண்டாடப் பெறும் மறை உண்மையையும் கேட்போரின் தனிப்பட்ட தேவைகளையும் மறையுரையாளர் கருத்தில் கொள்ள வேண்டும்.
திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளரே வழக்கமாக மறையுரை நிகழ்த்துவார்; அவ்வப்போது சூழ்நிலைகளுக்கேற்பத் திருத்தொண்டரிடம் இப்பணியை ஒப்படைக்கலாம். ஆனால் பொது நிலையினரிடம் இதனை ஒருபோதும் ஒப்படைக்கக் கூடாது. சிறப்பான நிகழ்வுகளில் தக்க காரணத்திற்காக, கூட்டுத் திருப்பலி நிகழ்த்தாமல் திருப்பலியில் மட்டும் பங்கேற்கும் ஓர் ஆயர் அல்லது ஓர் அருள்பணியாளர் மறையுரை நிகழ்த்தலாம் (எண் 66 / 1)
ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் கடன் திருநாள்களில் மக்கள் பங்கேற்கும் எல்லாத் திருப்பலிகளிலும் மறையுரை நிகழ்த்துவது கட்டாயமாகும்; தகுந்த காரணம் இருந்தாலன்றி, இதை விட்டுவிடக்கூடாது. பிற நாள்களில் குறிப்பாகத் திருவருகைக்காலம், தவக்காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றின் வாரநாள்களிலும் மக்கள் கோவிலுக்குத் திரளாக வந்து கூடும் திருநாள்களிலும், நிகழ்ச்சிகளிலும் மறையுரை நிகழ்த்துவது பரிந்துரைக்கப்படுகிறது (எண் 66 / 2)
திருவழிபாட்டு கொள்கை விளக்கம் எண் 52
மறையுரையைத் திருவழிபாட்டின் ஒரு பகுதியாக மிகவும் போற்ற வேண்டும். இம்மறையுரை திரு வழிபாட்டு ஆண்டு முழுவதிலும் விவிலியத்திலிருந்து நம்பிக்கையின் மறைபொருளையும் கிறிஸ்தவ வாழ்க்கை நெறிகளையும் விளக்குகிறது. அன்றியும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடமைத் திருநாள்களிலும் மக்களோடு நிறைவேற்றப்படும் திருப்பலிகளில் கனமான காரணம் இல்லையயனில் மறையுரையை விட்டுவிடக்கூடாது.
நாம் மேலே மேற்கோளாக குறிப்பிட்ட மூன்று ஆவணங்களிலும் பளிச்சென வெளிப்படும் கருத்துகளாகப் பின்வருபவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. மறையுரை திருவழிபாட்டின் ஒரு பகுதியாகும்.
2. ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் திருப்பலியில் மறையுரை வழங்குவது கட்டாயமானதாகும்.
3. மற்றும் மக்கள் கூடிவரும் எல்லாத் திருப்பலிகளிலும் மறையுரை கொடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
4. அதைத் திருப்பலிக்குத் தலைமை ஏற்று நடத்துபவரே கொடுக்க வேண்டும்.
5. விசுவாச உண்மைகளுக்கும், கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்கும் விளக்கம் அளிக்கும் விதமாக அமைந்திருக்க வேண்டும்.
6. ஆனால் இது பறைசாற்றப்பட்ட இறைவார்த்தையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.
7. அதோடு திருப்பலி வழிபாட்டின் வேறு பாடத்தையும், எடுத்துக்காட்டாக பதிலுரைப்பாடல், மன்றாட்டுக்கள் போன்றவற்றையும் அடிப்படையாக வைத்து அமைக்கலாம்.
8. சிறப்புக் காலங்களில் வார நாட்களிலும் மறையுரை பரிந்துரைக்கப்படுகிறது.
9. மேலும் வழிபாட்டில் கொண்டாடப்படும் புனிதர்கள் எவ்வாறு அன்று பறைசாற்றப்பட்ட இறைவார்த்தையை வாழ்வியலாக்கி வாழ்ந்தார்கள் என்று எடுத்துரைக்கக் கூடியதாக அமைந்திருக்க வேண்டும்.
10. பறைசாற்றப்பட்ட வாசகங்களோடும், கொண்டாடப்படும் மறை நிகழ்வுகளோடும், புனிதரோடும் தொடர்பற்ற சில புண்ணியங்களை, எடுத்துக்காட்டாக மகிழ்ச்சி, நம்பிக்கை போன்றவற்றை சில கட்டுக் கதைகளை சொல்லி விளக்குவதாக மறையுரையை அமைக்கக்கூடாது.
11. திருப்பலிக்குக் குழுமி வந்திருக்கும் மக்களின் தேவைகளையும், காலத்தின் அறிகுறிகளையும் மனதில் கொண்டிருக்க வேண்டும் மறையுரை.
இவற்றையயல்லாம் மனதில் கொள்ளாமல் ஏதோ ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் மறையுரையை அவ்வப்போது கதையை மட்டும் மாற்றி சொல்லிக் கொண்டு காலம் ஓட்டினால் அது திருப்பலியில் பங்குபெற வந்திருப்பவர்களின் தேவைகளின் அடிப்படையிலும் இருக்காது, பறைசாற்றப்பட்ட வாசகங்கள் கொண்டிருக்கும் விசுவாச கோட்பாடுகள் அடிப்படையிலும் இருக்காது, கொண்டாடப்படும் மறைநிகழ்ச்சிகள், ஒன்று சொல்லப்படுகின்ற கட்டுக்கதையின் நகைச்சுவையை ரசிப்பதினால் இருக்கலாம். மற்றொன்று தொடர்பற்ற கட்டுக் கதையைக் கேட்டு அதோடு உடன்பாடு இல்லாதபோது நகைப்புக்காகவும் சிரிக்கலாம். இதை உய்த்து அறியாமல், மறையுரையாளர், ‘நான் சொல்வது பிடிக்கவில்லை என்றால் ஒரு காதால் கேட்டு மறு காதால் விட்டு விடுங்கள்’ என்று சொல்லும் மறையுரையாளர் மக்களுடைய தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ‘நான் ரெடிமேடாக வைத்திருக்கும் மறையுரையைத்தான் வழங்குவேன்; கேட்டால் கேளுங்கள், கேட்காவிட்டால் போங்கள்’ என்று சொல்வது பொறுப்பற்ற மனநிலையைத்தான் காட்டுகிறது.
எனவே மறையுரையாளர் நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள கருத்துகளை மனதில் கொண்டு ஒவ்வொரு நாள் வாசகப் பகுதியை வாசித்து தியானித்து பறைசாற்றப்பெறும் மறை நிகழ்வுகளையும், கோட்பாடுகளையும் மனதில் கொண்டு, மறையுரையைக் கேட்பவர்களின் தேவையையும் கருத்தில் கொண்டு மறையுரையைத் தயார் செய்து வழங்க வேண்டும்.
விசுவாச அறிக்கை
தொடக்கச் சடங்கை ‘வார்த்தை வழிபாட்டிற்குத் தயாரிப்பு’ என்பதை போல், விசுவாச அறிக்கை, மன்றாட்டுகளை ‘வார்த்தை வழிபாட்டின் முடிவு’ என்று சொல்லலாம்.
பறைசாற்றப்பட்டு, மறையுரையில் விளக்கப்பெற்ற இறைவார்த்தைக்கு மக்கள் தரும் பதிலே விசுவாச அறிக்கையாக அமைந்துள்ளது. இந்த விசுவாச அறிக்கைக்கு இருவாய்ப்பாடுகள் (க்ஷூலிrதுற்யிழிவி) உண்டு. ஒன்று திருத்தூதர்களின் விசுவாச அறிக்கை (புஸ்ரீலிவிமியிeவி உreed), மற்றொன்று நிசேயா விசுவாச அறிக்கை (ஹிஷ்உeழிஐ உreed). முந்தியது குறுகியது, தொன்மையானது; பிந்தியது மிக விரிவானது, இது நிசேயா பொதுசங்கத்தின் பெயரைக் கொண்டது. அதாவது இந்த விரிவான விசுவாச அறிக்கை அச்சங்கத்தில் உருவாக்கப்பட்டு, 4‡ஆம், 5‡ஆம் நூற்றாண்டுகளில் நடந்த மற்ற பொது சங்கங்களின் போதனைகளையும், திரிபு கொள்கைகளுக்கு எதிராகவும் மிகத் தெளிவான, நுட்பமான விசுவாச கோட்பாடுகளையும் கொண்டது. இரண்டிலும் இறைவன்மீதும், அவருடைய வார்த்தையான கிறிஸ்து மீதும், தூய ஆவியார் மீதும் மற்றும் இறைவெளிப்பாட்டினால் அறியப்படும் மறை உண்மைகள் மீதும் மக்கள் கொண்டுள்ள தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடுகின்றனர்.
இரண்டாவது வத்திக்கான் சங்கத்திற்குமுன் திருப்பலியில் நிசேயா விசுவாச அறிக்கையே மக்கள் அளிக்கும் பதிலுரைக்குப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்பொழுது இருவித விசுவாச அறிக்கைகளையும் பயன்படுத்தலாம். அந்தோ பரிதாபம்! எப்பொழுதுமே மிகக்குறுகிய திருத்தூதர்களின் விசுவாச அறிக்கையைப் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இது தவிர்க்கப்பட வேண்டும். விரிவான நிசேயா விசுவாச அறிக்கையையும் அவ்வப்போது பயன்படுத்துவது நல்லது.
இவற்றோடு ‘வானமும் பூமியும்’ என்று தொடங்கும் மற்றொரு விசுவாச அறிக்கை பெரும்பாலும் பாடப்படுவதைப் பார்க்கிறோம். ஆனால் எது எங்கிருந்து வந்தது? யார் இதற்கு அனுமதியளித்தது? என்று ஒன்றும் புரியவில்லை. இதுவே பெரும்பாலும் பாடப்படும் விசுவாச அறிக்கையாக அமைந்துவிட்டது! இது ஏற்புடையதா? என்று ஆயர் குழுமந்தான் பதில் அளிக்க வேண்டும்.
“மீட்பின் அருள் அடையாளம்” (Sacramentum Redemptionis) என்ற ஆவணத்தில் “திருப்பலியிலும் மற்ற திருவழிபாட்டு கொண்டாட்டங்களிலும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட திருவழிபாட்டு நூல்களில் இல்லாத விசுவாச அறிக்கையைப் பயன்படுத்தக்கூடாது” (எண் 69) என்று கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
விசுவாச அறிக்கை ஞாயிற்றுக் கிழமை திருப்பலிகளிலும், பெருவிழாக்கள் திருப்பலிகளிலும் சொல்லப்படும் அல்லது பாடப்படும். ஆனால் விசுவாச அறிக்கை பறைசாற்றப்பட்ட இறைவாசகங்களுக்கும், விளக்கப்பட்ட மறையுரைக்கும் பதிலாக வருவது என்றால், ஏன் எல்லா திருப்பலிகளிலும் விசுவாச அறிக்கை இடம் பெறக்கூடாது என்ற ஒரு கேள்வி எழுகிறது. திருவழிபாட்டு ஒழுங்குமுறையைத் தவிர, இத்தகு வேறு காரணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
பொது மன்றாட்டு
இது ‘நம்பிக்கையாளரின் மன்றாட்டு’ என்றும் அழைக்கப்படுகிறது. இது பற்றி பின்வருமாறு திருப்பலி நூலின் பொதுப் போதனையில் வாசிக்கிறோம்:
“பொது மன்றாட்டில் அல்லது நம்பிக்கையாளரின் மன்றாட்டில் மக்கள் நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்ட இறைவார்த்தைக்கு ஒருவகையில் பதில் அளிக்கிறார்கள். திருமுழுக்கில் தாங்கள் பெற்ற பொதுக் குருத்துவத் திருப்பணியை நிறைவேற்றி எல்லாருடைய மீட்புக்காவும் இறைவனுக்கு மன்றாட்டுகளை ஒப்புக் கொடுக்கின்றனர். மக்களோடு சேர்ந்து நிகழ்த்தும் திருப்பலிகளின் போது இத்தகைய மன்றாட்டு இடம் பெறுவது விரும்பத்தக்கது. இம்மன்றாட்டுகள் புனித திருஅவைக்காகவும், நம்மை ஆளும் அதிகாரிகளுக்காகவும், பற்பல தேவைகளில் உழல்வோருக்காகவும், மக்கள் எல்லாருக்காகவும், உலக முழுவதின் மீட்புக்காகவும் அமைந்திருக்க வேண்டும்” (எண் 69; வாசக நூல் பொது முன்னுரை எண் 30 ‡ 31 காண்க).
விசுவாச அறிக்கை வழியாக பறைசாற்றப்பட்ட இறைவார்த்தைக்கு பதில் அளித்ததோடு, இப்பொழுது மன்றாட்டுகள் வழியாகவும் பதில் அளிக்கிறார்கள். தங்களது பொதுக் குருத்துவப் பணியைச் செயலாக்கம் செய்யும் நேரங்களில் இதுவும் ஒன்று. மக்கள் கூடிவந்து நிகழ்த்தப்படும் திருப்பலிகளில் எல்லாம் இம்மன்றாட்டுகள் இடம் பெறுவது நல்லது.
இம்மன்றாட்டுகள் திருஅவையின் தேவைக்காகவும், நாட்டு அதிகாரிகளுக்காகவும், அனைத்துலக மீட்புக்காவும், எல்லா வகையான இன்னல்களில் உழல்வோருக்காகவும், கூடிவந்துள்ள நம்பிக்கையாளர்களுக்காகவும் அமைந்திருக்க வேண்டும்.
இந்த மன்றாட்டுகள் கூடிய வரைக்கும் சுருக்கமாகவும் தெளிவாகவும் அமைக்கப்பட வேண்டும். ஐந்து மன்றாட்டுகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. எண்ணிக்கையில் அதிகரிக்கும் போது, இது நின்று கொண்டிருக்கும் மக்களுக்கு சலிப்பை உண்டாக்கும்.
சில நேரங்களில் மன்றாட்டுகளுக்கு இசையமைத்து பாடுவதைப் பார்க்கிறோம். வரவேற்கத்தக்கது. ஆனால் சில வேளைளில் இசை ஓங்கியிருக்கும்போது வார்த்தைகள் மூழ்கி போய்விடுகின்றன. அதனால் மன்றாட்டுகளே மக்களுக்குப் புரியாமல் போய்விட வாய்ப்புண்டு. பாடும்போது இது நேரிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பொது மன்றாட்டுகள் இறைவார்த்தை வழிபாட்டை முடித்து வைக்கும் ஓர் அமைப்புக்கூறு. இதைக் காணிக்கைகளைக் கொண்டுவரும் போது சொல்லப்படுகின்ற விளக்கங்களோடு இணைத்து செபிப்பது பெரும் தவறு. இது தவிர்க்கப்பட வேண்டும். திருப்பலிக்குத் தலைமை தாங்குபவரே வாசக மேடையில் இருந்தோ அல்லது தமக்குரிய இருக்கையிலிருந்தோ முன்னுரை கூறி நம்பிக்கையாளர்களைச் செபிக்க அழைப்பார். இறுதியில் எடுத்துரைக்கப்பட்ட மன்றாட்டுகளை ஏற்றருளும்படி சுருக்கமான செபத்துடன் முடிப்பார்.
முடிவுரை
வார்த்தை வழிபாட்டின் எல்லா அமைப்புக் கூறுகளும் தொடக்கத்திலிருந்து இறுதிவரை சரியாக அமைக்கப்பட்டு செயலாக்கம் பெற்றால் வழிபாடு பொருளுள்ளதாகவும், பலன் உள்ளதாகவும் அமைந்திடும்.
No comments:
Post a Comment