வேதநாயகரின் இலக்கிய நெஞ்சம்
(நீதியரசர் வேதநாயகர், நீதியை வாழ்ந்துகாட்டிய செம்மல்)
- முத்தமிழ் மாமணி, பேராசிரியர் ச.சாமிமுத்து,
இந்த இலக்கியத் திங்களிலாவது நம் கிறித்தவ இலக்கியங்களில் நம் கவனத்தைத் திருப்புவோம். தமிழகத்தில் கிறித்தவ சமய வளர்ச்சிக்கு நம் தமிழ்க் கவிஞர்கள் பலர், அவர்கள் படைத்த தமிழ் இலக்கியங்களின் வாயிலாய் அருள்பணி புரிந்துள்ளார்கள். அவர்களுள் ஒருவராகிய மாயூரம் வேதநாயகரைப் (வேதநாயகம் பிள்ளை) பற்றி அன்னையின் அருட்சுடர் வாசகர்களோடு சில செய்திகளைப் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வேதநாயகர் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள குளத்தூரில் 1826ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் சவரிமுத்து, ஆரோக்கியமரியம்மாள் என்னும் பெற்றோர்க்கு மகனாகப் பிறந்தார். இளமையிலிருந்தே தமிழையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றுச் சிறந்த புலமை பெற்றார். இவர் மேலும் இலத்தீன், பிரஞ்சு, வடமொழி ஆகிய மொழிகளையும் கற்றுப் பன்மொழி அறிந்தவராகத் திகழ்ந்தார்.
இவர் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் தம் இருபத்தி இரண்டாம் வயதில் ஆவணப் பதிவுப் பொறுப்பாளர் (யூeஉலிrd லுeeஸ்ரீer) பணியில் சேர்ந்தார். அதிலிருந்து அவர்தம் அறிவுத் திறமையாலும், நன்னடத்தைப் பண்பாலும் இறையருள் பெற்று முறைமன்றத் தலைவராகவும் உயர்ந்தார். தரங்கம்பாடியிலும், சீர்காழியிலும், திருமயிலாடுதுறையிலும் (மாயூரம்) முறைமன்றத் தலைவராகப் (District Munisiff) பல்லாண்டு பணியாற்றினார்.
இவர் திரிசிராபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாருடன் நெருங்கிய நட்புக்கொண்டிருந்தார். தாம் இயற்றிய நீதி நூலை அவரைக்கொண்டு அரங்கேற்றினார். பெண்களின் பெருமையைக் கூறக் கருதி ‘பெண்மதி மாலை’ என்னும் அரிய நூலை வெளியிட்டார். ‘பிரதாப முதலியார் சரித்திரம்’, ‘சுகுண சுந்தரி சரித்திரம்’ ஆகிய இரண்டும் இவருடைய புதினங்கள் ஆகும். ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ முதன் முதலில் தமிழ்மொழியில் தோன்றிய தலைசிறந்த நாவலாகும். இந்தப் புதினந்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஏன் இருபதாம் நூற்றாண்டில்கூட புதின ஆசிரியர்களுக்கெல்லாம் வழிகாட்டும் நூலாக அமைந்தது. இவர் ‘தேவமாதா அந்தாதி’, ‘திருவருள் அந்தாதி’, ‘திருவருள் மாலை’, ‘பெரியநாயகி அம்மாள் பதிகம்’ போன்ற சிற்றிலக்கியங்களையும் படைத்துள்ளார். இவரது இசைத்தமிழ் ஈடுபாட்டை இவருடைய ‘சத்திய வேதக் கீர்த்தனை’, ‘சருவசமய சமரசக் கீர்த்தனை’ முதலிய நூல்களால் நாம் அறியலாம். இன்னும் பல தனிப்பாடல்களும் பாடியுள்ளார். தமிழ் உரைநடைக்கும், புதினத்திற்கும் இசைத்தமிழுக்கும் வேதநாயகர் ஆற்றியுள்ள தொண்டைக் கிறித்தவத் தமிழ்ப் பொதுநிலையினரும், துறவிகளும் போற்ற வேண்டிய பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள்
.
வேதநாயகர் இயேசுபெருமானின் இறையரசுப் பணியைத் தம் வாழ்வின் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார். அவர் படைத்த இலக்கியங்களில் மட்டுமல்ல, அவர் ஆற்றிய நீதியரசர் பணியிலும் சமுதாயத் தொண்டிலும் இறைமகன் இயேசுவையே வழியும், வாழ்வும், ஒளியுமாகக் கொண்டே செயலாற்றி இருக்கின்றார்.
வேதநாயகர் மாயூரத்தில் நீதிமன்றத் தலைவராகச் சேர்ந்து, தாம் தம் நீதிநூலில் அரசர் இயல்பு என்னும் அதிகாரத்தில் கூறியிருப்பதைப் போன்று, வழக்காளியும் (வழக்குத் தொடுப்பவர்), எதிர் வழக்காளியும் (எதிர் வழக்குத் தொடுப்பவர்), சான்று சொல்பவரும் (சாட்சி), கூறியவற்றையும் (விசாரணையில்) வழக்குப் பதிவுகளில் கண்டவற்றையும் ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்து முறை (நீதி ) வழங்கி வந்தார். எல்லோருக்கும் சரிநிகர் நீதி வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே என்று எல்லோரும் ஏத்திப்போற்றும் அளவிற்குத் தம் பணியில் இவர் உயர்ந்து நின்றார். இன்று நம் வாழ்வில் மிகப்பெரிய பிரச்சனையாக, பொது வாழ்வைப் பெரிதும் பாதித்துப் பாழ்படுத்தக் கூடியதாக இருக்கின்ற இலஞ்ச ஊழல் வேதநாயகரின் சொல்லிலோ, செயலிலோ எவ்வடிவத்திலும் இடம் பெறவில்லை. தம்மோடு பணிபுரிந்து வந்த பணியாளர்களிடத்திலும் இவ்வூழல் குடிபுகாதவாறு கண்டிப்பாய் இருந்து பார்த்துக் கொண்டார். கையூட்டுப் பெறுவதும் (இலஞ்சம்), கமின் வாங்குவதும் (இடைநிலை ஊதியம், கிம்பளம்) போன்ற தீய பழக்கத்தால் நாடும், வீடும் நலிவுறும் என்பதை நன்கறிந்த வேதநாயகர், அவர்தம் நற்றமிழ்ப் பாக்கள் வாயிலாய்ச் சமுதாயத்தை நெறிபடுத்தும் நன்னெஞ்சப் புலவராய் விளங்கினார்.
ஒருவர் இலஞ்சம் பெறுகின்றார் என்பதை அறிந்து மற்றொருவர் தம் மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு தாமும் இலஞ்சம் பெறலாம் என்று துணிகின்றார். தீய பழக்க வழக்கங்கள் தொற்றுநோய் போன்றவை. நோய் நம்மையும் பற்றாமல் இருக்க வேண்டுமென்றால் அந்நோய்க்கு ஆளானவரோடு இரக்கச் செயல்பாட்டிற்கு மாறான நோய் பற்றற்குக் காரணமான தொடர்புகளைத் தவிர்க்கவேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையையும் வெறுத்து ஒதுக்க வேண்டும். உயிரையே வாங்குவது ஒரு நஞ்சு என்றால், மற்றொரு நஞ்சு நம் வாழ்வையே பாழ்படுத்தும், அதுதான் இலஞ்சம் என்னும் நஞ்சு! இவ்வுண்மையை நன்குணர்ந்துதான் வேதநாயகர் தம் நெஞ்சை நோக்கி,
“ஆர்வேணுமோ அவர்வாங்கட்டும் நீ - இலஞ்ச
ஆசை வையாதே - நெஞ்சமே”
என்று பாடியுள்ளார். இலஞ்சத்திற்குக் காரணம் பொருளாசை (பணம், நகை, நிலம், வீடு, வாகனம் முதலியன). இந்த ஆசைக்கு இடம் கொடுப்பது ஒருவரது நெஞ்சம். நெஞ்சத்தை நாம் அடக்கி நன்னெறிக்கு உரிய இடமாக ஆக்கிவிட்டால் தீய எண்ணம், சொல், செயல் புறமுதுகு காட்டி ஓடிவிடும். அதனால்தான் போதுமென்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்று நம் மூத்தோர் மொழிந்தனர்.
இலஞ்சம் வாங்குவதால் என்ன விளையும் என்பதையும் இச்சீர்த்திருத்தச் செம்மல் ஒரு பாட்டில் சுட்டி, நச்சென்று ஒரு கொட்டு வைக்கின்றார்!
“எதுக்கு வாங்குகிறீர் இலஞ்சம் - உமக்கு
இதைவிட வேண்டுமோ பஞ்சம்”
என்று வினாத்தொடுத்து எள்ளி நகையாடுகின்றார். இலஞ்சத்தால் விளைவது பஞ்சம்! அது என்ன பஞ்சம்? அதுதான் ஒழுக்கம் இல்லா வாழ்வுப் பஞ்சம். வள்ளுவரும் இவ்வுண்மையை,
“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்”
என்னும் குறட்பாவினால், நெஞ்சம் கொண்ட ஆறறிவு படைத்த மனித விலங்குக்கு உரிய வாழ்வு நெறியாகக் கூறுகின்றார்.
இலஞ்ச ஊழல்களைப் பற்றி நெஞ்சு நெகிழப் பாடும் நம் பெருங்கவிஞர், சமுதாயத் திருடர்களைப் பற்றியும் மனம் புழுங்கிப் பாடுகின்றார். பகலில், பலர் முன்னிலையில், பற்பல தனியார் மற்றும் அரசத் துறைகளில் பணியாற்றுகின்றவர்கள் கவர் வாங்குகிறார்கள். கவரின் உள்ளே பத்திரமாகப் பதுங்கி இருப்பது இலஞ்சப் பேய்! இப்படிப்பட்ட இலஞ்சப் பேயைப் பத்திரமாகக் காகித உறைக்குள்ளே பதுக்கி வைத்து நெஞ்சுக்குள் ஏற்பவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், பதவியிலிருப்பவர்கள் என்பதுதானே இன்றைய உண்மை. கறுப்புப் பணமாம்! அடப்பாவிகளா பணம் எப்படி கறுப்பாச்சு? நீங்களெல்லாம் பகல் திருடர்களாக, பகல் கொள்ளைக்காரர்களாக, பகல் பக்திவேடதாரிகளாக மாறியதால்தானே! மக்கள் நலம்கருதி உரிய ஊதியம் பெற்றுப் பணிபுரிகின்றவர்கள் அடிக்கும் பகல் கொள்ளையால் சமுதாயமே பொருளாதாரப் பாதிப்புக்கு உள்ளாகின்றதே! தனக்கென்று எதுவுமே இல்லாத ஏழை மகனும் பாதிக்கப்படுகின்றானே!
நீதி, நேர்மை வாழ்க்கையால், இறைநெறி நெஞ்ச வாழ்க்கையால் நம்மை நீதி பிறழாத நீதிபதியாக வாழ வைக்க நினைத்த பிறரையும் அவ்வாறே வாழ வைக்க வாழ்ந்த நீதியரசர் வேதநாயகர்,
“...அநீதியே ஓட்டம் பிடிக்க
இலஞ்சம் வாங்கிகள் வெட்கத்தால் உயிர்மடிக்க
நானே பொதுநீதி தானே செலுத்திட
நல்வரம் அருள் கோனே”
என்று மூவொரு கடவுளிடம் முறையிட்டு வேண்டுகின்றார்!
இலஞ்சம் வாங்குபவர்களை ஆறறிவுக்கு உரிய மனிதர்களாக வேதநாயகர் மதிக்கவில்லை. எனவேதான், இலஞ்சம் வாங்கிகள் என்று அஃறிணையில் விலங்கு நிலையில் வைத்துப் பாடுகின்றார்!
No comments:
Post a Comment