Pages - Menu

Friday, 10 February 2017

பணிவு என்னும் இனிய பாதை 9. கீழ்ப்படிவோம்!

பணிவு என்னும் இனிய பாதை

9. கீழ்ப்படிவோம்!

 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியாள மையம்

பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் பெரிய பண்ணை வைத்திருந்தார். அவருக்கு ஒரே மகன். அவனை விவசாயக் கல்லூரியில் படிக்க வைத்தார். மகனும் படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான்.

பணக்காரர் மகனுக்கு ஒரு சோதனை வைக்க விரும்பினார். எனவே தன் மகனிடத்தில், நம் பண்ணையில் கிழக்கே இருக்கும் பத்து ஏக்கரில் சோளம் விதை என்றார். அவன் விவசாயக் கல்லூரியில் பயின்றதை நினைவிற் கொண்டு மண்ணை நன்கு சோதனை செய்துவிட்டு அங்கு சோளம் நன்கு விளையும் என்று உணர்ந்து சோளம் விதைத்தான். சில நாட்கள் கழித்து அந்த பணக்காரர் மகனிடத்தில் மேற்கே இருக்கும் பத்து ஏக்கரில் கரும்பு நடு என்றார். மகன் மீண்டும் மண் பரிசோதனை செய்தபிறகு அந்த மண் கரும்பிற்கு ஏற்றது என்று அறிந்து கரும்பு நட்டான். மீண்டும் அந்த பணக்காரர் தன் மகனை அழைத்து வடக்கே உள்ள பத்து ஏக்கரில் எள் பயிரிட சொன்னார். மகனும் சளைக்காமல்  மண் பரிசோதனை செய்து அந்த நிலம் எள்ளிற்கு ஏற்றது என்று தெரிந்து எள் பயிரிட்டான். பணக்காரர் மீண்டும் மகனை அழைத்து தெற்கில் உள்ள பத்து ஏக்கரில் கடலை பயிரிட சொன்னார். மகன் மண்ணை பரிசோதித்தான். மண் கடலைக்கு ஏற்றதல்ல என்று அறிந்தான். உளுந்து பயிரிட்டால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என் அறிந்து உளுந்து பயிரிட்டான்.

சரி, உங்களுக்கு ஒரு கேள்வி. அந்த மகனின் கீழ்ப்படிதலுக்கு எவ்வளவு மார்க் கொடுப்பீர்கள்? 75 மார்க். இல்லை, பூஜ்யம் தான் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவன் தன் தந்தையின் சொற்களில் பூஜ்யம் சதவீதம்தான் நம்பிக்கை வைத்திருந்தான். அந்த மகனின் அறிவார்ந்த நடவடிக்கைகளை நாம் பாராட்ட வேண்டும். ஆனால் இன்னும் ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் அந்த மகனுக்கு தந்தையிடம்  உள்ள நம்பிக்கை குறைவாக இருந்ததால்தான் அவரிடம் கீழ்ப்படிவதற்குமுன் சோதனையில் ஈடுபட்டான்.

இந்த உலகில் வாழ்வது ஓர் அழகான கலை. அந்த கலையில் ஒன்றுதான் மற்றவர்களின் சொற்களுக்கு செவிமடுப்பது. மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பது. மற்றவர்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவது. பழைய காலத்தில் குருமட பயிற்சியின் போது ஒரு சோதனை வைப்பார்களாம். ஒரு செடியை தலைகீழாக நடவேண்டும் என்று சொல்வார்களாம். தலைகீழாக நட்டால் குருமடத்தில் நீடிக்கலாம். அல்லது குருமடத்தை விட்டு அனுப்பி விடுவார்களாம். (இது எவ்வளவு  உண்மை என்று தெரியவில்லை).

அது சரிங்க, நாம் ஏன் மற்றவர்களின் சொற்களுக்கு கீழ்ப்படிய மறுக்கிறோம்? அதற்கு முதல் காரணம், மற்றவர்களை நமக்கு மேலாகக் கருதுவதில்லை. மற்றவர்களுக்கு என்னத் தெரியும்? என்ற எண்ணம் நம்மில் மேலோங்கி இருப்பதால்தான். நான் பத்தாவது படிக்கும் போது, ஒருமுறை பேருந்தில் பயணம் செய்தேன். பஸ் ஒரு நிறுத்தத்தில் நின்றது. எல்லோரும் இறங்கிய பின்பு பஸ் கிளம்பியது. அந்த சமயத்தில் நான் வெளியே எச்சில் துப்பினேன். அப்போது எனக்கு பின்னே அமர்ந்திருந்த ஒரு பெரியவர் தம்பி, பஸ் ஓடும்போது எச்சில் துப்புவதை தவிர்க்கலாமே! என்று மிகவும் தன்மையாக சொன்னார். ஆனால் நானோ பஸ் நின்றபோதுதானே துப்பினேன் என்று என்னையே நியாயப்படுத்தினேன். அதைப் போல சில சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளன. நான் நியாயப்படுத்திய நிகழ்வுகளை நினைத்து பின்பு வருந்தியுள்ளேன். அதைப் போலவே இப்போது நான் இருக்கின்ற பொறுப்பில் எனக்குக் கீழே இருப்பவர்களிடம் சில தவறுகளை சுட்டிக்காட்டும் போது அவர்கள் செய்யும் பெரிய தவறு (எனக்குக் கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தும் தவறுதான்) அவர்கள் தங்களை நியாயப்படுத்துவதுதான். மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களை அவர்கள் கோணங்களிலிருந்து பார்க்கத் தவறும்போது, நம்மையே நாம் நியாயப்படுத்த விரும்புகிறோம். யார் என்ன சொன்னாலும் அதிலே சிறிதளவாவது உண்மை இருக்கும் என்று நம்புவோம். அதனால் அதனை கடைபிடிக்க முயற்சி செய்வோம்.

இரண்டாவதாக மற்றவர்களின் சொற்களுக்கு  நாம் கீழ்ப்படிய மறுக்கும் மற்றொரு காரணம் நாம் தவறு செய்யவே மாட்டோம் என்ற ஆழ்ந்த நம்பிக்கைதான். சார், கொஞ்சம் நில்லுங்க, நீங்கள் மட்டும்தான் நீங்கள் நினைப்பதெல்லாம் சரி, நீங்கள் செய்வதெல்லாம் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். (மற்றவர்கள் நீங்கள் செய்யும் தவறுகளை பலரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொறுத்துக் கொண்டு இருக்கிறார்கள்). இந்திய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் சில நேரங்களில் என்னை ஆச்சரியப்படுத்தும். அபத்தம் என்று 90% பேர் நினைப்பதை அழுத்தமாக சொல்வார்கள். நாம் தவறு செய்ய இயலாதவர்கள் என்று நினைத்தால் நம்மைவிட அறியாமையில் உள்ளவர்கள் யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதைப் போல நம் முடிவுகள், தீர்ப்புகள் எப்பொழுதும் சரியாக இருக்கும் என்று நினைத்தீர்கள் என்றால், உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். எனவே பிறர் சொல்லும் சொ;ற்களில் உள்ள உண்மையை, நியாயத்தை உணர்ந்து கொள்ள முன்சார்பு எண்ணங்களை தவிர்த்து கொஞ்சம் இறங்கி வாருங்கள். பிறகு பிறரின் சொற்களை, கொள்கைகளை, கட்டளைகளை ஏற்றுக் கொள்வது அவ்வளவு கடினமாக இருக்காது.

மூன்றாவதாக, நீங்கள் கீழ்ப்படிதலை காட்ட வேண்டிய ஒரு முக்கியமான நபர் இருக்கிறார். அவர்தான் நம்மை படைத்த, நம்மை பராமரிக்கிற, நம்மை பார்க்கிற தேவன். அவர் நம் மனச்Vட்சியின் வழியாக, இறைவார்த்தையின் வழியாக, சில நிகழ்வுகளின் வழியாக நமக்கு வழிகாட்டுகிறார். கடினமான இதயத்தை கைவிட்டு, தன்னல வாழ்வை தள்ளி வைத்துவிட்டு, சில அர்ப்பணங்களையும், தியாகங்களையும் மேற்கொண்டு இறைவனின் தூண்டுதல்களுக்கு செவிமடுப்போம். கீழ்ப்படிவோம். அப்பொழுது நம் வாழ்வு மேன்மை பெறும். இனிமை பெறும். (தொடரும்).

No comments:

Post a Comment

Ads Inside Post