திருப்பலி விளக்கம்
13. நற்கருணை வழிபாடு (I)
-அருள்பணி. எஸ். அருள்சாமி,
பெத்தானி இல்லம், கும்பகோணம்
இயேசு கிறிஸ்து தமது கல்வாரி சிலுவைப்பலியை முன்கூட்டியே தமது இறுதி இரவு உணவின்போது கொண்டாடினார். இன்று அதே சிலுவைப்பலியைத் திருஅவை பீடத்தில் கொண்டாடுகிறது. இதற்கு அடிப்படையாக இருப்பது “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்று சொன்ன அவரது வார்த்தைகளாகும்.
இயேசு சொன்ன வார்த்தைகளும் அவர் செய்த செயல்களும் இன்று நற்கருணை வழிபாட்டை அமைக்க திருஅவைக்கு உதவுகின்றன. இந்த நற்கருணை வழிபாடு “நன்றி வழிபாடு” என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் நற்கருணையைக் குறிக்கும் ‘யூக்கரிஸ்தியா’ (Eucharistia) என்ற கிரேக்கச் சொல் ‘நன்றி கூறுதல்’ என்று பொருளுடைய ‘யூக்கரிஸ்தெயின்’ (eucharistrein) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து வருகிறது.
இந்த நற்கருணை வழிபாடு (1) காணிக்கைப் பொருள்களைத் தயாரித்தல், (2) நற்கருணை மன்றாட்டு, (3) நற்கருணையைப் பிட்டு உட்கொள்ளுதல் ஆகிய ஆக்கக்கூறுகளால் ஆனது. இவை ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கத்தை இங்கு காண்போம்.
அ.காணிக்கைகளைத் தயார் செய்தல்
முற்கால நடைமுறை
திருஅவையின் தொடக்க காலத்திலிருந்தே மக்கள் அனைவரும் தத்தம் காணிக்கைகளை மகிழ்வோடு பாடிக்கொண்டு பவனியாக பீடத்திற்குக் கொண்டு வந்தார்கள். இக்காணிக்கைகள் முதலில் அப்பமும், இரசமுமாயிருந்தன. நாளடைவில் பீடத்திற்குத் தேவையான பொருள்கள் அனைத்தும், அதாவது எண்ணெய், மெழுகுவர்த்தி, மலர்கள், மற்றும் ஏழை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க பழம், காய்கறிகள் கொணரப்பட்டன. இவற்றிலிருந்து அந்நாள் திருப்பலிக்குத் தேவையான அப்பமும், இரசமும் மட்டும் ஒதுக்கி பீடத்தின்மீது வைக்கப்பட்டன. ஒதுக்கி வைக்கப்பட்டதால் விeஆreஆழிமிற்து இவை ‘செக்கெரேத்தும்’ (Secretum) என்று அழைக்கப்பட்டன. இவற்றின்மீது சொல்லப்பட்ட செபத்தை ‘சீக்ரெட்’(Secret), அதாவது ஒதுக்கி வைக்கப்பட்டவை மீது செபம் என்று அழைக்கப்பட்டது. இதை அறியாதவர் அதை அமைதி செபம், அதாவது அருள்பணியாளர் காணிக்கைகள் மீது அமைந்த குரலில் சொல்லும் செபம் என்றார்கள். இவ்வாறு அமைந்த குரலில் சொல்வது கட்டளையாகவும் இருந்தது.
தொடக்கக்காலத்தில், அதாவது கி.பி.2-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு உருவெடுத்தக் காணிக்கைப் பவனி 8-ஆம் நூற்றாண்டு வரை சிறப்பான முறையில் திருப்பலியில் நடைப்பெற்றது. அதன்பிறகு தன் முக்கியத்துவத்தைப் படிப்படியாக இழந்து, கடைசியில் முற்றிலும் கைவிடப்பட்டது.
இரண்டாவது வத்திக்கான் சங்கம் கொணர்ந்த மறுமலர்ச்சி
கைவிடப்பட்ட காணிக்கைப் பவனியைப் புதுப்பித்து. அருள்பணி யாளருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காணிக்கைகளை ஒப்புக் கொடுத்தல் என்று அழைக்கப்பட்ட பகுதி, மாற்றப்பட்டு “காணிக்கைகளைத் தயார் செய்தல்” என்று அழைக்கப்பட்டது. இதில் பலியை நிறைவேற்றும் அருள்பணியாள ருடையவும், காணிக்கைகளைப் பவனியாகக் கொணரும் நம்பிக்கையாளர்களுடையவும்
ஈடுபாடு அடங்கியுள்ளது. அருள்பணியாளரின்
திருநிலைப் பாட்டில் அப்பத்தட்டையும், திருப்பலி கிண்ணத்தையும் ஆயர் அவர் கைகளில் கொடுத்து “மக்கள் கொண்டுவரும் காணிக்கைகளை ஏற்று நீர் திருப்பலி ஒப்புக்கொடுப்பீராக” என்று சொல்வது இரு சாராருடைய ஈடுபாட்டை தெளிவாக்குகின்றது.
காணிக்கையின் இறையியல்
திருப்பலி என்பது இயேசுகிறிஸ்து கல்வாரியில் செலுத்திய பலியை அடையாளங்கள் வழியாக பலிபீடத்தில் நிகழ்த்துவதாகும். இயேசுகிறிஸ்து கல்வாரி மலையில் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்தையாம் இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தார். அதேபோல் திருப்பலியில் அருள்பணியாளரும், நம்பிக்கை யாளர்களும் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுக்கவேண்டும். இயேசுகிறிஸ்து கல்வாரியில் தம் உயிரை மாய்த்து, இரத்தத்தைச் சிந்தி பலியை ஒப்புக்கொடுத்தார். அதேபோல் இன்று செய்ய திருஅவை அப்பத்தையும், இரசத்தையும் அடையாளங்களாகப் பயன்படுத்தி தன்னைப் பலியாக்குகிறது. இதற்கான வழியை இயேசு கிறிஸ்துவே தமது இறுதி இரவு உணவில் அப்பத்தையும், இரசத்தையும் பயன்படுத்தியதின் வழியாக வகுத்துக் கொடுத்தார்.
கோதுமை மணிகளிலிருந்து அப்பம் தயார் செய்ய இடம்பெறும் செயல்பாடுகளும், அதேபோல் திராட்சை பழங்களிலிருந்து இரசம் தயாராக இடம்பெறும் செயல்பாடுகளும் பலியை ஒப்புக்கொடுக்கும் அருள்பணியாளர், நம்பிக்கை யாளர்களுடைய வாழ்வில் செயலாக்கம் பெறவேண்டும். இந்த உருவ மாற்றத்தில் பாஸ்கா அடங்கியுள்ளது. அதாவது கோதுமை மணிகள் உடைக்கப்பட்டு, அரைக்கப்பட்டு, பிசையப்பட்டு அப்பம் உருவாவதுபோல் பீடத்தில் பலியை ஒப்புக்கொடுப்பவர்கள் உடைக்கப்பட வேண்டும், நொறுக்கப்பட வேண்டும். அதேபோல் திராட்சை பழங்கள் பிழியப்பட்டு, சாராக்கப்பட்டு இரசமாவது போல பலியை ஒப்புக்கொடுப்பவர்கள் கசக்கப்பட வேண்டும். இந்த உண்மையை உணர்த்தும் விதமாகத்தான் “கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்” (உரோ 12 : 1) என்கிறார் புனித பவுல். அதாவது, நம்முடைய நொறுங்குண்ட உள்ளத்தை நாம் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.
திருப்பலியை நிகழ்த்தும் அருள்பணியாளர் அப்பத்தையும், இரசத்தையும் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் போது சொல்லும் மன்றாட்டு இதைத் தெளிவாக்குகிறது.
“ஆண்டவரே. அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப் பெறுவீராக.
ஏனெனில், உமது வள்ளன்மையிலிருந்து
நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்;
நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்”.
இதே போன்று இரச கிண்ணத்தை அருள்பணியாளர் எடுத்து சொல்கிறார்.
“ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா,
நீர் வாழ்த்தப் பெறுவீராக.
ஏனெனில், உமது வள்ளன்மையிலிருந்து
நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம்.
திராட்சை செடியும் மனித உழைப்புத் தந்த
இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.
இது எங்களுக்கு ஆன்ம பானமாக மாறும்”.
காணிக்கைப் பவனியும், காணிக்கை பாடலும்
அப்பத்தையும், இரசத்தையும் ஒப்புக்கொடுப்பது வெறும் சடங்காக மட்டும் இராமல், மேலே நாம் குறிப்பிட்ட இறையியல் சிந்தனைகள் பொருள் உள்ளதாக மாற வேண்டுமானால் காணிக்கை பவனி மக்கள் பெருவாரியாகக் கூடிவரும் திருப்பலிகளில் எல்லாம் இடம்பெற வேண்டும். நம்பிக்கை யாளர்கள் கொண்டுவரும் காணிக்கைகளாகிய அப்பமும், இரசமும், இன்னும் மற்ற பொருள்களும் அவர்களுடைய வாழ்க்கைப் பலிகளின் வெளிப்பாடும், அடையாளங்களாகவும் இருக்கும்போது இறைமக்களுடைய பொது குருத்துவம் செயலாக்கம் பெறுகிறது.
“முற்காலத்தில் நடந்ததுபோல், இன்று நம்பிக்கையாளர் தங்கள் உடைமைகளிலிருந்து திருவழிபாட்டிற்காக அப்ப, இரசத்தைக் கொண்டு வருவதில்லை என்றாலும் காணிக்கைப் பொருள்களைக் கொண்டுவரும் சடங்கு இன்றும் ஆன்மீக ஆற்றலும், பொருளும் கொண்டுள்ளது” (றூணூயூனி, 73).
இக்காணிக்கைகள் பவனியின் போது, தகுதியான பாடல் பாடப்பெறுவதால் பவனி மாண்புறுகிறது; பவனியின் பொருள் வெளிக்கொணரப்படுகிறது. இந்தக் காணிக்கைப் பாடல் காணிக்கைகளை ஒப்புக்கொடுக்கும் போது சொல்லப்படும் மன்றாட்டையும், மேலே நாம் விளக்கிய இறையியல் சிந்தனையைப் பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும். அர்த்தமற்ற பாடல்களைப் பாடக்கூடாது.
எடுத்துக்காட்டாக :
“சின்ன குழந்தை இயேசுவுக்கு
என்ன கொடுப்பது - நாம்
என்ன கொடுப்பது”
என்று பாடுவது முறையற்றது. ஏனெனில் பலியில் காணிக்கைகள் கடவுளுக்கு மட்டுமே ஒப்புக்கொடுக்கப்படுகிறது என்பது மேலே நாம் குறிப்பிட்ட “ஆண்டவரே. அனைத்துலகின் இறைவா ....” என்ற செபத்திலிருந்து தெளிவாகிறது.
காணிக்கைகளைப் பவனியாகக் கொண்டு வரவில்லை என்றாலும், காணிக்கையை ஒப்புக்கொடுக்கும் சடங்கின் போது காணிக்கைப் பாடல் எப்பொழுதும் இடம்பெறும்.
உண்டியல் எடுத்தல்
காணிக்கை நேரத்தில் உண்டியல் எடுத்து பீடத்தருகில் வைக்கும் பழக்கம் தொடக்கத்தி லிருந்தே இடம்பெறும் ஒரு நிகழ்வு. இதைப் பொருள் உள்ள முறையில் அமைப்பது நல்லது. திருப்பலியில் மக்கள் மன்றாட்டுகளைச் சொல்லும் போது உண்டியல் எடுப்பதைத் தொடங்கி முடித்து காணிக்கைப் பவனியின்போது கொண்டு வந்து காணிக்கைகளை ஏற்கும் அருள்பணியாளரிடமோ, திருத்தொண்டரிடமோ கொடுப்பது நல்லது. திருஅவையின் தேவைக்காக காசு தண்டுவதற்கு விவிலியத்தில் ஆதாரங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக புனித பவுல் பின்வருமாறு கூறுகிறார் : “இறைமக்களுக்கு வழங்கும் நன்கொடையைக் குறித்துப் பார்ப்போம் .... நீங்கள் ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். நான் வரும்போது அறிமுகக் கடிதங்களைக் கொடுத்து உங்கள் கொடையை எருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்” (1கொரி 16 : 1 - 4; காண் உரோ 15 : 28; 2 கொரி 8 : 1 - 24).
காணிக்கைப் பவனியின்போது கொண்டு வரப்பட்ட பணத்தையும் மற்றக் கொடைகளையும் .... பலி பீடத்திற்குப் புறம்பே தகுந்த இடத்தில் வைக்க வேண்டும் (GIRM,73). பலி பீடத்திற்கு முன் திருப்பலி முடியும் வரை வைத்திருக்கக்கூடாது.
(தொடரும்)
No comments:
Post a Comment