Pages - Menu

Friday, 11 December 2015

கலாம் எதிர்கால தலைமுறைக்கு கால(த(கள))மாய் நிற்கிறார்

கலாம் எதிர்கால தலைமுறைக்கு கால(த(கள))மாய் நிற்கிறார்
சகோ. விமலி, இதயா கல்லூரி, குடந்தை.

இலையுதிர் காலம் என்பது மரணமல்ல
இன்னொரு துளிர்ப்புக்கான தொடக்கம்
அஸ்த்தமனம் என்பது மறைவு அல்ல
இன்னொரு உதயத்திற்கான பதுக்கம் !
காலையில்மலரும் பூ
மாலையில் உதிர்ந்தால் தான்
மறுநாள் காலையில்
மற்றொரு பிறப்புக்கு வழி பிறக்கும் !
‘இறப்பதில் தான் விண்ணக வாழ்வு என்பதல்ல ; இவ்வுலகில் பின்னர், வரவிருக்கும் மக்களுக்குத் துன்பமில்லா நிறை வாழ்வுக்காக’
“மனிதர்களை உண்மையாக அன்பு செய்த
யாரும் முழுவதும் இறந்துவிட முடியாது”
இவ்வாறு மக்களின் மனதில் இடம் பிடித்து மாமனிதராகத் திகழ்ந்தவர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
“அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்”
அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவி என்பதோடு , அது பகைவராலும் அழிக்க முடியாத கோட்டை, என்பது போன்று கலாம் அவர்களின் வாழ்க்கை சரித்திரம், இன்றைய இந்தியாவின் இளைஞருக்கு,
இலட்சியத்தையும், விடாமுயற்சியும், கடுமையாக உழைக்க வேண்டுமென்ற உன்னத நெறியையும் விட்டுச் சென்றுள்ளார்கள். அவரின் உந்து சக்தியான, உயிரோட்டமான வாழ்வின் வழிகள் சிலவற்றை இவண் நோக்குவோம்.
1. வெற்றிக்கான விளக்கவுரை வலுவாக இருந்தால், தோல்வி எப்போதுமே நம்மை ஆட்கொள்ளாது.
2. அற்புதங்களை அகஸ் மாத்தாகச் செய்யமுடியாது, அடுத்தடுத்துச் செயல்பட்டுக் கொண்டே இருந்தால்தான் சாதிக்க முடியும்.
3. வாழ்க்கையில் இடர்ப்பாடுகள் அவசியம் ஏனென்றால், வெற்றி என்ற மகிழ்ச்சியை அனுபவிக்க அவை உதவியாக இருக்கும்.
4. முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்காதீர்கள் ; இரண்டாவது முயற்சியில் தோல்வியடைந்தால் , முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் விளைந்த வெற்றி என்று விமர்சிப்பார்கள்.
5. உறக்கத்தில் வருவது அல்ல கனவு, உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு.
6. கனவு, கனவு, கனவு அவசியம். கனவுகள் எண்ணங்களாகும், எண்ணங்கள் செய்கைகளாக வடிவெடுக்கும்.
7. வித்தியாசமாகச்சிந்திக்க, புதியதைக் கண்டுபிடிக்க, இதுவரை பயணப்படாத பாதையில் பயணப்பட, இதுவரை  சாதித்திராத சாதனைகளைச் செய்துமுடிக்க துணச்சலைப் பெறுங்கள்.
8. மழைக்காலத்தில் எல்லாப் பறவைகளும் கூட்டைத் தேடி அடைகின்றன. கழுகுகளோ மேகங்களுக்கும் மேலே பறந்து, மழையையே தவிர்த்து விடுகின்றன. பிரச்சினைகள் பொதுவானவை. நம்முடைய அணுகுமுறைகள் தான் வித்தியாசத்தைக் காட்டுகின்றன.
9. உங்கள் குறிக்கோளில் வெற்றிபெற வேண்டும் என்றால், உங்கள் இலக்கில் இம்மியும் பிசகாமல் குறிவைத்து அதே சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.
10. வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான், வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
11. நீண்ட நாள் முழுவதும், கணத்திற்குக் கணம் நேர்மையாய், துணிவாய், உண்மையா உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்.
12.“தோல்வியை தோற்கடி” “தோல்வி மனப்பான்மையை தோல்வியமையச் செய்ய வேண்டும்”.
13. ‘வலிக்கு வலிக் கொடு’ வாழ்வில் வலிமைப் பெறுவாய்.
14. “முடியும் என்று நம்பும் ஐம்பத்து நான்கு கோடி இளைஞர்களால் இந்தியாவின் நதிகளை, அனுபவத்தின் துணை கொண்டு இணைக்க முடியும். நதிகளை இணைக்க முதலில் நம்பிக்கைதான் தேவை”.
இவ்வாறு, பிறப்பு முதல் இறப்பு வரை சம்பவமாக தோன்றி, சாதனையாக வாழ்ந்து, சரித்திரமாய் வெற்றி கண்டவரதான் கலாம்.
வெற்றி என்பது முற்றுப்புள்ளி, தோல்வி என்பது இடைப்புள்ளி. இவ்விடைப்புள்ளி இல்லாது முற்றுப்புள்ளியை அடைய முடியாது என்பதை வாழ்ந்து காட்டியவர். இன்றைய சமூகத்தில் மாற்றமும், வளர்ச்சியும் வரும் என்றால், அது இளைஞர்களால் மட்டுமே சாத்தியம் என்பதை உறுதியாக நம்பினார். நமது சமூகத்தின் செயல்திட்டங்களில் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடமில்லை. அவர்களை முதிரா வயதினராகவே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். மாறிவரும் சமூகத்தின் பிரதிநிதிகளாகவும், சமூகத்தின் முகத்தை வடிவமைக்கத் தகுதியானவர்களாக இருக்கின்றனர் இளைஞர்கள்.
“குழந்தைகள் நமக்குத் தெரியாமல் நம்மிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்பவர்கள். நாம் அறியாமலேயே நமக்கு நிறையக் கற்றுக் கொடுப்பவர்கள். நாம் ரொம்பவே “மதிப்போடும் ஜாக்கிரதையோடும்” அணுக வேண்டியவர்கள்” என்பார். கலாமுக்குள் எப்போதும் ஓர் ஆசிரியர் இருந்தார். ஒரு மாணவரும் இருந்தார்.
கலாமுக்கு பிடித்த கவிதை வரிகள், அவை எப்போதும் அவரை வழிநடத்தியதாக கூறியுள்ளார்.
“உனது எல்லா நாட்களிலும்
தயாராக இரு
எவரையும் சம உணர்வுடன் எதிர்கொள்
நீ பட்டறைக் கல்லானால்
அடிதாங்கு
நீ சுத்தியலானால்
அடி !”
எனவே வித்தியாசமாகச் சிந்திப்பவர்களுக்கும், விசித்திரமாகச் செயல்படுபவர்களுக்கும் வரலாறு பல சாதனைகளைச் செய்துள்ளது. உழைப்பதற்கும், உயர்ந்து சாதிப்பதற்கும் வயது ஒரு தடையல்ல. வாழ்க்கையை
அர்த்தமுடன் வாழ்வதற்கும், ஆனந்தமாக இருப்பதற்கும் வசதி வாய்ப்புகள் ஒரு தடையல்ல என்பதை வாழ்ந்து காட்டியவர் கலாம்.
இவ்வகைகளில் எல்லாம் உயர்ந்து நிற்பவராக இருக்கும் அப்துல்கலாம் அவர்களின் இறுதி பகிர்வானது சிறப்புக்குரியது. இன்றைய சமூகத்தின் உயிர் சக்தியைப் பற்றிய நினைவுகளாக இருந்துள்ளது. அதாவது மனிதர்களால் ஆன சக்திகள் பல இந்தப் புவியை வாழ்வதற்குத் தகுதியற்றதாக மாற்றி வருகின்றன. வன்முறையும், சுற்றுச்சூழல் மாசும், சற்றும் பொறுப்பற்ற மனித நடவடிக்கைகளும் தொடர்ந்தால், இன்னும் 30 ஆண்டு காலத்தில் நாம் இந்தப் புமியை விட்டுச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதைத் தடுக்க நாம்தான் ஆக்கபூர்வமாகச் செயல்களைச் செய்ய வேண்டும். “வாழ்வதற்கு உகந்த பூமி”யை மீண்டும் உருவாக்குவோம். சவால்களைச் சந்திப்பதன் மூலம் புதிய வழிமுறைகளைக் கண்டறிகின்றோம். உலகில் இன்று நாம் அனுபவிக்கும் பல்வேறு சுகமான வசதிகள், சவால்களைச் சந்தித்து வெற்றி கண்டவர்களால் மட்டுமே பெறப்பட்டது. அதனால் தான் அவர்கள் இறந்தும் வாழ்கிறார்கள்.
“எரிகின்ற விளக்காயிரு. அப்போதுதான்
மற்ற விளக்குகளை ஏற்றி வைக்கலாம்”
ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது எல்லா வரலாற்றிலும் புகழ் வாய்ந்த மிகப்பெரிய மனிதர்கள் துணிச்சலால் உருவாக்கப்பட்டவர்கள். அந்தத் துணிச்சலோ துரதிருஷ்டம் என்னும் தொட்டிலில்தான் பிறக்கிறது. தொட்டிலிலிருந்து சுடுகாடு வரை வாழ்க்கை ஒரு போராட்டமாகத்தான் இருக்கிறது. தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர்கள் மாத்திரமே வெற்றியின் பாதையில் நிற்கிறார்கள். இவ்வாறு கலாம் வாழ்வில் எளிமை, ஏழ்மை, வறுமை என்ற போராட்டத்தை வென்றவர். திறமை, ஆர்வம், விடாமுயற்சி, கடின உழைப்பு. இவ்வகையான அற்புத, அணு ஆயுதத்தை கொண்டு, முதிர்ந்த சிந்தைப் போக்குடணும், தெளிந்த ஆய்வு நோக்குடனும், நடுநிலை வாய்ந்த அணுகுமுறையைக் கொண்டு, அறிவியல் அறிஞராகவும், கல்வி அறிவுக் கரூவூலமாக இன்றைய இளைய சமூகத்திற்கு தளமாகவும், களமாகவும் காலமாய் நிற்கின்றார்.

No comments:

Post a Comment

Ads Inside Post