Pages - Menu

Friday, 11 December 2015

குடும்பநல கோர்ட், - வழக்கறிஞர் பு. அருள்தாஸ்

குடும்பநல கோர்ட்
-  வழக்கறிஞர் பு. அருள்தாஸ்

குடும்பங்கள்தான் சமுதாயத்தின் ஆணி வேர்கள். ஆனால் புதுகலாச்சார உலகில் குடும்பங்கள் சிதைய ஆரம்பித்திருக்கின்றன. குடும்பத்தில் கணவன்  -மனைவி எவ்வாறு இணைந்து நிற்கமுடியும் என்று சட்டப்பின்னணியில் விளக்குகிறார்.  விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்பது போன்ற பத்து அறிவுரைகள் சென்னை குடும்பநல கோர்ட் வளாகத்தில் அறிவிப்பாக எழுதி வைக்கப்பட்டு உள்ளன.

உளவியல் ரீதியாக கவுன்சிலிங் :
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் குடும்பநல கோர்ட்டுகள் செயல்படுகின்றன. வார நாட்கள் மட்டுமில்லாமல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை கால குடும்பநல கோர்ட்டுகளும் நடக்கின்றன. விடுமுறை கால குடும்பநல கோர்ட்டுகளுக்கு வழக்கு தொடர்ந்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த கோர்ட்டுகளில் விவாகரத்து கேட்டு வரும் தம்பதிகளுக்கு முதலில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தேவைப்பட்டால் பல தடவைகூட கவுன்சிலிங் நடத்துகிறார்கள். முடிந்தவரை தம்பதிகளை சேர்த்து வைக்கவே முயற்சி செய்கின்றனர். விவாகரத்து பெற்றே தீருவது என்று இருவரில் ஒருவர் பிடிவாதமாக இருந்தாலோ இல்லது இருவரும் பிடிவாதமாக இருந்தாலோ வழக்கு நடத்தி விவாகரத்து வழங்கப்படுகிறது.

இல்லற வாழ்க்கை இனித்திட ....
இந்தக் கால இளம் தலைமுறையினருக்கு விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்கள் இல்லாத காரணத்தால்தான் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போவதாகக் கூறப்படுகிறது.
விவாகரத்து கேட்டு வரும் ஜோடிகளை சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் குடும்பநல 
கோர்ட்டுகள் இப்போது புதிய முயற்சியாக இல்லற வாழ்க்கை இனித்திட ... என்ற தலைப்பில் பத்து அறிவுரைகளை தமிழில் அறிவிப்பாக எழுதி வைத்துள்ளன.
இந்த அறிவிப்பு, முதன்மை குடும்பநல கோர்ட்டு வளாகத்திலும், முதலாவது மற்றும் இரண்டாவது குடும்பநல கோர்ட்டு வளாகத்திலும் அனைவரது கண்ணில்படும்படி வைக்கப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு :

இருவரும் கோபப்படாதீர்கள் :
ஒரே சமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள். வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சனைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக்கொடுப்பவர்கள் எப்பொழுதுமே கெட்டுப் போவதில்லை.
விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.
கடந்த கால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.
உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும் உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.

மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள் :
விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப்போடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஓர் அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப்  பாருங்கள். செய்த தவறை உணரும் போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள்.
இல்லற வாழ்க்கை இனித்திட,  மூன்று தாரக மந்திரங்கள்
சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்.
அனுசரித்துப் போகுதல்
மற்றவர்களை மதித்து நடத்தல்
இந்த அறிவுரைகளில் முத்தாய்ப்பாக 10-வது அறிவுரையில் மட்டும் ஆங்கில எழுத்துக்கள் பயன்படுத்தப்படடு உள்ளன. இந்த அறிவுரைகளை, விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடன் வரும் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் ஆர்வத்துடன் படித்து செல்கிறார்கள். இந்த அறிவுரைகள் சில தம்பதிகள் வாழ்க்கையிலாவது மாற்றத்தை ஏற்படுத்தினால், அதுவே இந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும்.


No comments:

Post a Comment

Ads Inside Post