திருவருகைக்காலம் 4ஆம் ஞாயிறு
20/12/2015
மிக் 5 : 2 - 5
எபி 10 : 5 - 10
லூக் 1 : 39 - 45
மரியன்னையின் பெருமை
அவர்களுக்குத் திருமணம் நிகழ்ந்தது. பல ஆண்டுகள் உருண்டோடின. குழந்தைச் செல்வம் அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. இறைவனிடம் வேண்டினர். ஒரு ஆண் குழந்தையைப் பெற்றனர். அவனைச் செல்வம் என்றே அழைத்தனர். காரணம் அவர்கள் வறுமைக் கோட்டின் வாரிசுகள். வாழ்வில் காணாத செல்வத்தை பெயரிலாவது காண விழைந்தனர். எனவே அவனைச் செல்லமாக அழைத்தனர். ஆனால் அவனின் வாழ்வு குறுகியது. மூளைக்காய்ச்சலில் முடிந்து போனது. பாவம் அந்தப் பெற்றோர்கள். ‘கடவுளே கொடுக்காமலேயே இருந்திருக்கலாமே! கொடுத்துப் பறித்துக் கொண்டாயே!’ எனப் பதறினர். கதறி அழுதனர். இறைவன் அவர்களின் குமுறலைக் கேட்டார். ஒரு நாள் காட்சிக் கொடுத்தார். ‘ஒன்று மட்டும் கேளுங்கள். உங்களுக்கு அருள்வேன்’ என்றார்.
அவர்கள் சோதனை வலையில் சிக்கினர். வாழ்வுக்கு வசதியைக் கேட்பதா? அல்லது இறந்த தம் மகனைக் கேட்பதா? இரண்டையும் பெற எண்ணினர். எனவே எங்களுக்கு செல்வம் வேண்டும் என்றனர். இறைவன் முதலில் தமிழ் மொழியைத்தான் படைத்தார் போலும். அவர்களின் தமிழ் இதயங்களைப் புரிந்துக் கொண்டார். அவர்கள் கேட்ட இரண்டையும் கொடுத்தார். பெற்ற வாய்ப்பை நன்கு பயன்படுத்தினர். புத்திசாலித் தம்பதிகள் அல்லவா அவர்கள்!
நற்செய்திக்கு வருவோம். இங்கே எலிசபெத்துக்கு (எலிசு) கிடைத்த வாய்ப்பைப் படிப்போம். “என் ஆண்டவருடையத் தாய் என்னிடம் வர நான் வாய்ப்புப் பெற்றது எப்படி (லூக் 1 : 43)” என மகிழ்ந்தாள். மணமானவள் மகவுப் பெற்றப்பின்னரேத் “தாய்” என்ற பட்டத்தைப் பெறுவாள். இங்கே எலிசு, மரியாவுக்கு மகன் பிறக்குமுன்னரே “இறைவனின் தாய்” என்றப் பட்டத்தை அளித்து மரியாவைப் பெருமைப்படுத்தினாள்.
இறைவன் மலடிக்கு ஒரு மகனைக் கொடுத்தார். மரியாவுக்குத் தன் மகனையேக் கொடுத்தார். கடும் பாறையை நீரோடையாக மாற்றினார். நீர்த்திரளை நெடுஞ்சுவராக்கினார். நத்தைச் சிரித்தது. முத்துப் பிறந்தது. மேலும் சிரித்தது. மரியா சிரித்தாள். இறைவனின் தாயானாள். இறைவன் மனிதராகப் பிறந்தது. மனுக்குலத்துக்கேப் பெருமை. மரியா வழியாகப் பிறந்தது மகளிர் குலத்துக்கேப் பெருமை. மரியாவை கடவுளின் தாயாகப் பார்ப்பது நமக்கெல்லாம் பெருமை.
அவர் எங்கிருந்துப் பிறப்பார்?
பெத்லகேமிலிருந்து என முதல் வாசகம் மொழிந்தது. 1. இறைவனின் திருவுளத்தை நிறைவேற்ற (2ஆம் வாசகம் எபி 10 : 7), 2. கடவுளின் மந்தையை மேய்க்க (மிக்கா 5 : 4), 3. அவணிக்கு அமைதியை அருள (மிக்கா 5 : 5). எலிசைப் போன்று உறவை வளர்ப்போம். உறவு உறுதியுற மக்களைச் சந்திப்போம். மக்கள் நலம்பெற கடவுளைச் சந்திப்போம். சிந்திப்போம், செயல்படுவோம்.
No comments:
Post a Comment