ஆலோசனை நேரம்
நெல்லை. இ. ஆனந்தன்
வேதியரிடம் கேளுங்கள்பணத்தைப் பற்றியும், பேயைப் பற்றியும் சில தெளிவுகளைத் தருகிறது இக்கட்டுரை.
திரு. சேவியர், புதுக்கோட்டை :
நான் தனியார் கம்பெனியில் வேலை பார்ப்பவன். மாதம் ஏழாயிரம் சம்பளம். எனக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. எனக்கு மனைவியாக வரப்போறவங்களும் தனியாரில் வேலை செய்கிறாங்க. அவங்க மாதம் ஐந்தாயிரம் சம்பளம் வாங்குகிறார்கள். நாங்கள் வெறும் பன்னிரெண்டாயிரத்தை வைத்துக் கொண்டு வாழ முடியுமா? நானும், அவங்களும் மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது? தயவுசெய்து வழிகாட்டுங்கள்.
பதில் :
சேவியரய்யா, வருங்கால மனைவியை வாங்க, போங்க, அவங்க, இவங்க என்று நீங்கள் எழுதியதைப் படிக்கும் போது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பணம் குறைவு என்றாலும் குணம் நிறைய உள்ள தங்களை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.
திருமணத்திற்குப் பின் உங்களின் பட்ஜெட் இவ்வாறாக அமையும் :
1. அடிப்படைச் செலவுகள் : உணவு, உடை, வீடு ‡ இதற்கான செலவுகள்.
2. ஆடம்பரச் செலவுகள் : நுகர்வு வெறியில் அவசியமற்ற பொருட்களை வாங்குதல்.
3. அறிவுச் செலவு : படிக்க, அறிவை வளர்க்க, நூல்கள், பத்திரிக்கைகள், நாளிதழ்கள் வாங்குவது.
4. அழிவுச் செலவு : குடிப்பது, புகைப்பது, போதைப் பாக்குகள் பயன்படுத்துவது.
5. எதிர்பாராத செலவு : நோய், திடீர் விபத்து, வாகனங்கள் பழுது, உறவினர்களின் இறப்பு போன்றவைகள்.
6. சேமிப்பு : சேமிப்பு என்பது செலவாகத் தோன்றினாலும் அது வரவுதான். கடன் என்ற ஆளை மட்டும் வீட்டிற்குள் நுழைய விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
பணம் தேவைதான். பணத்தாசை, பணவெறிதான் ஆபத்து. இயேசு பணத்தை மதித்தார். மீன் வாயில் காசு எடுத்து வரி கட்டச் சொன்னார். பணக்காரர்களையும் நேசித்தார். சக்கேயு ஒரு சுங்கவரி ஆபீசர். காசு புழங்கிய மனிதர். அவர் வீட்டிற்குச் சென்று தங்கினார். ஆனால் இயேசு பணத்தாசை மிக்கவரையும், பணக்காரத்தனத்தையும் விரும்பவில்லை. களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி உண்பேன் என்றவரையும், காலடியில் கிடந்த லாசரை மதிக்காத செல்வரையும், பணத்தாசை மிக்க யூதாசையும் பார்த்து அவர் சொன்ன வார்த்தைகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. இயேசுவின் பார்வையில் ஏழைகளே பேறுபெற்றவர்கள்.
உங்களிடம் இருப்பதில் ஒரு சிறிய பங்கை இல்லாத ஏழைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இயேசு அதற்கு வட்டிபோட்டு உங்களுக்கு வாரி வழங்குவார்.
ஏழைகளுக்குச் செய்வது இயேசுவுக்குச் செய்வதாகும்.
கவலைப்படாதீர்கள். வானத்துப் பறவைகளையும், வயல்வெளி
மலர்களையும் பாருங்கள். இருப்பது போதுமென்று வாழுங்கள். ஏனெனில் பண ஆசைதான் அனைத்து தீமைகளுக்கும் ஆணி வேர் என்பது திருவிவிலியத்தின் படிப்பினை.
என் ஆலோசனையும் அதுவே !
திருமதி. குளோரியா, நாகர்கோவில் :
சார், பேய் இருக்கிறதா? பேயை நீங்கள் பார்த்ததுண்டா? அது பெண்களை அதிக அளவில் பிடிப்பது ஏன்? பேய் பிடிக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்? ஒரு வேளை பேய் பிடித்து விட்டால் அதை விரட்ட என்ன வழி இருக்கிறது? தயவுசெய்து வழிகாட்டுங்கள்.
பதில் :
குளோரியாக்கா, பேய் பற்றிய திரைப்படம், தொலைக்காட்சி, நாவல்கள், கதைகள் என்று பேய் சீசன் சக்கைபோடு போடும் நேரத்தில் இந்த கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். வரிசையாக தங்கள் கேள்விகளுக்கு பதில் கூற விளைகிறேன்.
1. கடவுள் இருக்கிறார். பேயும் இருக்கிறது.
2. பேயை நான் பார்த்ததில்லை. யாரும் பார்க்கவும் முடியாது. ஏனெனில் அதற்கு உருவம் கிடையாது. அது ஓர் ஆவி. (தீய ஆவி).
3. பெண்கள் 14 முதல் 28 வயது வரை திடீர் மாற்றங்களைத் தம் உடலிலும், உள்ளத்திலும் சந்திக்கின்றனர். கர்ப்பப்பையில் கட்டிகள், ஹார்மோன் சுரப்பு பிரச்சனைகள், ஒழுங்கில்லாத மாதவிலக்கு, கருச்சிதைவு, சிறுவயதில் ஏற்பட்ட உடல், உள்ளப் பாதிப்புகள் இவைகளால் அதிக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இவைகள் 98 சதவீதம் பேயினால் கிடையாது. அது நோய்தான் என்று
மருத்துவம் சாதிக்கின்றது. எனவே பேய் பிடித்த பெண்களுக்கு முதலில் மருத்துவம் பாருங்கள். சிலர் பில்லி, சூனியம், காத்து, கருப்பு, சுடுகாடு, இடுகாடு
என்று
அச்சுறுத்தி உங்கள் பணத்திற்கு வேட்டு வைத்துவிடுவார்கள். கவனமாக
இருங்கள்.
4. பேய் பிடிக்காமலிருக்க ஜெபம் செய்ய வேண்டும். தவம் (ஒறுத்தல், நோன்பு) செய்ய வேண்டும். இயேசு வனத்திற்கு சென்ற போதும், தூய அந்தோணியார் காட்டில் கடுந்தவம் புரிந்த போதும், பேயின் சோதனைகளுக்குத் தப்பவில்லை. பொருளாசை, உடல் ஆசை இவை தான் பேயின் நுழை வாயில்கள்.
எனவே கதவைச் சாத்துங்கள். திறக்கவே திறக்காதீர்கள்.
பேய்க்குத் தெரிந்த ஒரே பாட்டு ‘இப்போ என்ன அவசரம்? பிற்பாடு பார்க்கலாமா?’ என்பதாம். செபிக்க ஆரம்பித்தால் இப்போ என்ன அவசரம் பிறகு பார்க்கலாமே என்பான். திருப்பலிக்கு புறப்பட்டால் அதே பாட்டுதான். ஒப்புரவிற்கு
சென்றாலும் அதே பல்லவி தான்.
எனவே, குளோரியாக்கா, ஒன்றே செய்யுங்கள். நன்றே செய்யுங்கள். அதையும் இன்றே செய்யுங்கள். ஒத்திப் போடாதீர்கள். சோம்பியிராதீர்கள். நோய்க்கு இடம் கொடேல் ! பேய்க்கும் இடம் கொடேல். நன்றாக இருப்பீர்கள். நான்
சொன்னது புரிந்ததாக்கா?
No comments:
Post a Comment