அரசியல் களம்
என்ன செய்யப் போகிறோம்?
அண்மைக் காலமாக ஊடகங்களில் வரும் சில செய்திகள் நம்மை பதற வைக்கின்றன. திருவண்ணாமலை அருகே இளைஞர்கள் சிலர் ஒரு சிறுவனுக்கு மது ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்த நிகழ்வும், கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த மாணவி ஒருவர் குடித்து விட்டு சாலையில் விழுந்து கிடந்த நிகழ்வும், நாமக்கல் அருகே மாணவர்கள் குடித்து விட்டு வகுப்பறைக்குள் மயங்கிக் கிடந்த நிகழ்வும் பொது நிகழ்வாக வந்த சில நிகழ்வுகளே. இவை போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் தமிழகத்தின் மூலை முடுக்குளிலெல்லாம் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கள்ளச் சாராய சாவுகளை தடுப்பதற்காகத் தான் மதுக் கடைகளைத் திறப்பதாக அரசு கூறியது. மதுக் கடைகளையும் திறந்தது. அதனால் கள்ளச் சாராய சாவுகள் குறைந்தன என்பது உண்மைதான். அதே நேரம் அரசு மதுக் கடைகளால் ஏற்படுகின்ற உயிரிழப்புகளும் பாதிப்புகளும் அதிகரித்து விட்டன என்பதும் நாம் உணர வேண்டிய உண்மையாக உள்ளது.
“தமிழகத்தில் நடக்கும் 60 சதவிகித விபத்துகளுக்குக் குடிப்பழக்கம்தான் காரணம் என்பது தெரிய வ ந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 66 ஆயிரத்து 300 பேர் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாலும் ‡ குடித்து விட்டு வாகனம் ஓட்டி வந்தவர்களாலும் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு மட்டும் 15 ஆயிரத்து 565 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். 16 ஆயிரத்து 927 பேர் தற்கொலை செய்து கொண்டிடுள்ளனர். இந்த மரணங்களுக்கு மதுவே காரணம் என்று தெரிய வந்துள்ளது. இது தவிர குடியால் மூளை, கல்லீரல், நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கானோர் நடைப்பிணங்களாக மாறியிருக்கின்றனர். கோடிக் கணக்கான குடும்பங்களின் பொருளாதாரம் சூறையாடப்பட்டு இருக்கிறது. கணவனின் வருமானத்தை நம்பியிருந்த பெண்கள், குழ்தைகள் நடுத்தெருவுக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் இளம் வயதிலேயே விதவைகள் ஆகியுள்ளனர். இந்தியாவிலேயே அதிக விதவைகள் உள்ளமாநிலமாக தமிழ்நாடு மாறியிருப்பதாகவும் ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. தந்தையின் குடிப்பழக்கத்தால், குழந்தைகள் மட்டும் 5 இலட்சம் பேர் அனாதைகள் ஆகியுள்ளதாகவும், அந்தப் புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது”.(தீக்கதிர், 10.7.2015) இது அரசுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அரசு ஒவ்வோர் ஆண்டும் மதுபான விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கிறது. இந்தக் கொடுமையை மக்களுக்கு உணர்த்த ‡ அரசுகளின் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்த மனசாட்சியுள்ளோர் முன் வர வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்து 823 அரசு மதுக் கடைகளில் 1500 மதுக் கடைகள் பள்ளிகளுக்கு அருகில் அமைந்துள்ளன என்னும் செய்தி எவ்வளவு கொடுமையானது? 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது என்ற விதியை அரசு நடைமுறைப்படுத்தாதது சரியா? இப்போது அரசுக்கு 27 ஆயிரம் கோடி. மது விற்பனையின் மூலம் வருவதாகவும் இதனை 30 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும் வரும் செய்தியை சமூக அக்கறை உள்ளவர்கள் ஏற்க முடியுமா? 2015 ஆம் ஆண்டு புத்தாண்டை ஒட்டி நான்கே நாட்களில் 300 கோடி ரூபாய் வருமானம் மது விற்பனையால் அரசுக்குக் கிடைத்தது. என்பது எதை உணர்த்துகிறது? இந்தியாவிலேயே மிகப் பெரிய மதுபானச் சந்தையாக தமிழ்நாடு மாறிக் கொண்டிருப்பதும், தமிழ் மக்களில் பெரும்பாலோர் குடிகாரர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எளிதில் புறந்தள்ளிவிட கூடியவையா? மனசாட்சியுள்ளோர் சிந்தியுங்கள். மதுப்பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை நமது இல்லங்களில், தெருக்களில், ஆலயங்களில், பணியிடங்களில் என்று வாய்ப்பு கிடைக்கிற இடங்களில் எல்லாம் எடுத்துரைப்பதும் நமது கல்வி நிலையங்களில் மாணவர்கள் மத்தியல் இக்கருத்துகளை விதைப்பதும் இன்றைய அவசர தேவையாக இருக்கிறது. அன்னையின் வழிகாட்டுதலில் பயணிக்கும் அன்பு நெஞ்சங்களே! மதுவிடம் இருந்து மக்களைக் காக்க நம்மால் இயன்றதைச் செய்வோம். ஊர் கூடித்தானே தேர் இழுக்க வேண்டும். வாருங்கள் வடம் பிடிப்போம்.
‡ குறிஞ்சி.
No comments:
Post a Comment