ஆசிரியர் பேனா
இயேசுவின் குடில்களாவோம்!
இயேசுவின் பிறப்பு, அது பாவத்திற்கும், சாபத்திற்கும் மறுப்பானது. ஒவ்வொரு பிறப்பும் அற்புதமாகும். பல ஆண்டுகள் கழித்து பிள்ளை பெரும் பெண்களின் உள்ள மகிழ்ச்சிக்கு ஒப்புவமை சொல்லமுடியாது. தாய்மை மானிடத்தின் விளை நிலம். ஒவ்வொரு குழந்தையையும் அவ்வளவு கவனத்துடன் வளர்த்து உலகிற்கு தருகிறார். அவ்வளவு அவள் செய்யவில்லையயனில் அவளுக்கு உள்ளம் நிறைவதில்லை. பிள்ளை தரும் சங்கடங்கள் அவளுக்கு மகிழ்வின் விதைகள். ஒரு தாயை போலவே மக்களுக்கு புதிய வாழ்வை பெற்று தருவதில் இறைவன் மிக்க ஆர்வம் கொண்டார். எனவேதான் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். நம் மக்களிடத்தில் செய்வினை, மாந்தரீகம் ஆகியவற்றில் அவ்வளவு நம்பிக்கை. குடித்து குடித்து குடல் வெந்தவனின் துயரம், செய்வினையால் வந்தது என்றுகூட நம்புகிறார்கள். இந்த சாபமான அவநம்பிக்கையை மாற்ற, மாற்று மருந்து கொடுக்கிறது இயேசுவின் பிறப்பு. தம்மையே வெறுமையாக்கினார், அடிமையின் வடிவை ஏற்றார். மனிதருக்கு ஒப்பானார் (பிலி 2 : 7). இதுதான் இயேசுவின் பிறப்பு நமக்கு கொடுக்கும் மாற்று மருந்து. தியாகம், பணிவு ஆகியவைதான், சாபத்தின் மாற்று மருந்து. நம் தீய பழக்கமெல்லாம் தியாகம், பணிவு ஆகியவைகள் வழியாக அகலும். மறைக்கல்வி பணிக்குழுவிலிருந்து குடந்தை, மறைமாவட்ட கிறிஸ்துவ பள்ளிகளை வேதியர்களும், நானும் சந்தித்து வருகிறோம். அங்குதான் கிறிஸ்துவர் எவ்வளவு சிறுபான்மையினர் என்பதை உணரமுடிகிறது. 3000 பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் சுமார் 100 பிள்ளைகள்கூட கிறிஸ்துவ பிள்ளைகள் இல்லை. இயேசுவின் வார்த்தைகள் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. சிறுமந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம்; உங்கள் தந்தை உங்களை தங்கள் ஆட்சிக்கு உட்படுத்த திருவுளம் கொண்டுள்ளார் (லூக் 12 : 32). எளியவர்களில் தான் இறைவன் செயல்படுகிறார். எளியவர்கள் வலிமை பெற முடியும், இயேசுவின் எளிமையில் ஒன்றிணைந்தால் குடந்தை மறைமாவட்ட பல பங்குகளில் தங்கள் ஆலயங்களை சீர்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதை காணமுடிகிறது. மிகவும் பாராட்டுக்குரியது. கோவில் கட்டப்பட வேண்டும் என்ற ஆர்வம் சமுதாயம் கட்டப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் இருப்பதில்லை. கொண்டாட்டத்தில் காட்டும் ஆர்வம் பண்புகளைக் காட்டுவதில் கொஞ்சமும் இருப்பதில்லை. தற்பெருமை, பெயர், புகழ் ஆகிய அழுகிய பண்புகளிலிருந்து விடுபட வேண்டும். எளிமை, இரக்கம் பகிர்வில் வளர வேண்டும். இதுதான் கிறிஸ்து பிறப்பு காட்டும் அழைப்பு.
மத்தியில் அமைந்திருக்கும் பா.ஜ.க.அரசு, பல விதங்களில் தங்களின் அடிப்படைவாத இந்துத்துவ கொள்கைகளை திணிக்கப்பார்க்கிறது. சென்ற ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவன்று அரசு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்தது. தலித்து குழந்தைகள் ஹரியானாவில் எரிக்கப்பட்ட போது, ஏதோ தற்செயலாக நடந்த செயலாக வர்ணித்தார் பா.ஜ.க. அமைச்சர். மாட்டுக்கறி சாப்பிட்டவர்களை கொலை செய்திருக்கிறார்கள்.
சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் சற்று பயத்துடன் வாழ வேண்டிய சூழல் சூழ்ந்திருக்கிறது. தமிழ்நாட்டு ஆயர் பேரவையின் தலைமை ஆயர் பேரருள்திரு. பீட்டர் ரெமிஜியுஸ் ஆண்டகை பா.ஜ.க. அரசின் போக்கினைக் கண்டித்து அறிக்கை விட்டிருக்கிறார். இயேசு தீய உலகில் பிறந்து, தீமைகளை அழிக்கும் வழியை காண்பித்தார். குடியின் கெடுதலுக்கு கிறிஸ்தவர்களும் விதிவிலக்கல்ல, துணிவும், தியாக சிந்தனையும் கொண்டு வாழுவோம். இயேசுவின் விழுமியங்கள் உலகில் பிறக்க, நாம் இயேசுவின் குடில்களாவோம்.
No comments:
Post a Comment