Pages - Menu

Monday, 7 December 2015

“விளிம்பு நிலை மனிதம்”

“விளிம்பு நிலை மனிதம்”

எஸ். ஜோசப், திருச்சி.

1. சட்டங்களும், சம்பிரதாயங்களும் :
சட்டங்களும், சம்பிரதாயங்களும் இச்சமூகத்தை கண்காணிக்கின்றன. ஆனால் தனிப்பட்ட இதயத்தின் நெளிவு வளைவுகளை அவைகள் கண் எடுத்தும் பார்ப்பதில்லை. காரணம் சமூக நீதியை பொருத்த அளவில் ஒருவன் எத்தகைய கண்ணோட்டத்துடன் இருக்கிறான் என்பதற்கு உரசிப் பார்க்க சரியான உரை கல்லை இச்சமூகம் பெறவில்லை என்பது தான் உண்மை.

2. சமூகப் பார்வையும், திரு அவையின் பார்வையும் :
ஆணையும், பெண்ணையும் பிரித்து இருவகை பாலினமாக வகைப்படுத்திய நமது சமூகம் பின் தங்கியவர்கள், தலித்துகள், பெண்கள் மற்றும் குற்றப்பரம்பரையினர் போன்றவர்களை கூட அடையாளம் கண்டு ஒரு நிகழ்கால  பார்வையில் சிறிதளவேனும் சிந்தித்து மறுபரிசீலனை செய்யவும் முன் வந்துள்ளது. இச்சமூகப் பார்வையினை நமது “திருஅவையும்” மேற்கொண்டு வருவது அத்தகையவர்களை மனிதர்களாக ஏற்றுக் கொண்டு ஆதரவு அளிப்பது மறுக்க முடியாத உண்மை. ஆம். வருணாசிரமம் தாக்குதலுக்கு ஆளாகும் இச்சமூகத்தினை மனிதர்களாக ஏற்றுக் கொண்டு நமது திருஅவையும் இயங்குவது சற்று ஆறுதலான, ஏற்புடைய செயல்தான். ஆனால் மூள்றாவது பாலினமாக அரவாணிகளை நாம் கண்ணெடுத்தும் பார்ப்பது இல்லை. கடந்த 6 ஆண்டுகளாக நான் சென்னைக்கு மேற்கொள்ளும் ரயில் பயணத்தில் விழுப்புரம் சந்திப்பில் கிடைத்த 10 நிமிட இடைவெளியில் பல அரவாணிகளைப் பார்த்து அவர்களது நிலையினை அறிந்துள்ளேன். அதில் கிடைத்த தகவல்கள் எனக்கொரு தாக்கத்தை கொடுத்தது. இவர்களைப் பற்றி நான் சேகரித்த விபரங்களை, படித்தறிந்த உண்மைகளின் வெளிப்பாடுகளே, இந்த கட்டுரை.

3. அகதிகளான  சமூகத் தீவுகள் :
நம்மிடையே தங்கள் வாழ்க்கையினையே ஒரு போராட்டமாகக் கொண்டு உயிர் இருந்தும் செத்து மடியும் ஒரு சமூகத்தை அடையாளம் காணவேண்டியது நமது கடமையாகும். ஆம், “விளிம்பு நிலையில்” போராடி வாழும் அந்த மனித கூட்டம் ஆண் என்று இல்லாமலும் பெண் என்று இல்லாமலும் நம்மிடையே உலாவரும் அரவாணி சகோதர்களே (சகோதரிகளே). ஆணையும், பெண்ணையும் வகைப்படுத்தி புரிந்துள்ள இச்சமூகம் அரவாணிகளை துளி அளவும் புரிந்துக் கொள்ளவில்லை. இத்தகு தவறான பார்வையையும் புரிதல்களையும் மட்டுமே இச்சமூகம் கொண்டுள்ளது. எனவே சமூகப் பார்வையில் இவர்கள் தனித் தீவுகளாகவே உள்ளனர்.

4. குடும்ப உறவில் அன்னியம் :
குடும்பத்தில் ஆணாக பிறந்தவர்கள் சிறுவயது முதலே ஆணுமின்றி பெண்ணுமின்றி பால் நிலை திரிந்தவர்களாக இருப்பவர்களே அரவாணிகளாகின்றனர். உடலில் ஆணாகவும், உணர்வில் பெண்ணாகவும் தங்களை ஆட்படுத்தியவர்கள் தான் இந்த அரவாணிகள். அவர்களது உடலியலும், உளவியலும் வாழ்வியலைப் பாதிக்கும் அம்சங்களுடன் வாழ்கிறபோது ஒரு நிலையில் தங்கள் குடும்பத்தில் தன்னை பெற்றவர்கள், உடன் பிறந்தவர்களால் ஒதுக்கி அடித்து துரத்தப்பட்ட பல அகதிகள் இன்று அரவாணிகளாக ஆக்கப்பட்டவர்களே என்பது வருந்ததக்கது ஆகும். குடும்ப உறவுகள் இவர்களை வேண்டாத சாதியாக வெறுத்து ஒதுக்குவது கொடுமையிலும் கொடுமை.

5. சமூக உறவில் அன்னியம் :
சமூகத்தில் அவமானப் பிறவிகளாகவும் கீழ்மைப்படுத்தப்பட்ட விளிம்புநிலை பிறவிகளாகவும் இந்த அரவாணிகள் மதிக்கப்படுகிறார்கள். அவர்களை குற்றப்படுத்தி காயப்படுத்தும் வக்கிர பார்வையினை இச்சமூகம் கொண்டுள்ளது. இவர்களை ஒன்பது என்றும் அலிப்பசங்க என்றும் கூறி இதயத்தை கீறிப்பார்க்க இச்சமூகம் தவறவில்லை. ஊடகங்களில் வக்கிரப் பார்வை உடையவர்களாகவும், காமடியன்களாகவும், மாமா வேலை பார்க்கும் பாலியல் முகவர்களாகவும் காட்டி காயப்படுத்தும் கொடூரத்தை யார் கேள்வி கேட்பது? ஒரு கணம் சிந்திப்போம்.

6. கை கொடுக்கும் கையும், மெய்யும் :
இப்படி தீவுகளான இந்த நாடோடி சமூகம் தங்களை இருகை நீட்டி அழைக்கும் அரவாணி ஜமாத்துகளில் சங்கமம் ஆகிறார்கள். ஆம், சமூக்தாலும், குடும்பத்தாலும் ஒதுக்கப்பட்ட இந்த அரவாணிகளை இத்தகைய ஜமாத்துக்கள் தான் அடைக்கலம் தந்து ஆதரிக்கின்றன. தங்களை பெண்மையுடன் அடையாளப்படுத்த மும்பை போன்ற நகரங்களில் அறுவை சிகிச்சை செய்து கவர்ச்சியான மார்பகங்களைப் பெற்று எங்கும் திருநங்கைகளாக நீக்கமற உலாவி வருகின்றனர். உழைத்து வாழ விரும்பாத பல அரவாணிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பால்வினை, எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்களைப் பரப்புகிறார்கள். சிலர் திருட்டு, கொள்ளை போன்ற பாதகச் செயல்களைச் செய்யும் சமூக விரோதிகளாகவும் கைகளை தட்டி பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களாகவும் வாழ்கிறார்கள். (இரு கைகளை குவித்து இவர்கள் தட்டும் ஓசை மற்ற அரவாணிகளுக்கு ஓர் அடையாளமாக நமது மாநிலத்தில் உள்ள வழக்கமாக உள்ளது) ஆண்டிற்கொரு முறை நடக்கும் கூவகத்திருவிழா இவர்களது ஜமாத்துக்கு கிடைக்கும் அங்கீகாரமாகவே நினைக்கிறார்கள்.

7. புரையோடிய புனர் வாழ்வுத் திட்டங்கள் :
அரவாணிளுக்கு என்று தனிப்பட்ட தொண்டு நிறுவனங்கள் சில இயங்கினாலும் ஒரு புரிதலுடன் சரியான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இவர்கள் சமூகக் கேடு நேரா வண்ணம் முன் எச்சரிக்கையாகப் பாலியல் நோய் வராமல் தடுக்கும் உறைகளை வழங்கும் பணிக்கு மட்டும் இவர்களைப் பயன்படுத்தும் பரிதாப நிலையே உள்ளது. இவர்களுக்கான புனர்வாழ்வு திட்டங்கள் சரிவர நிறைவேற்றப்படவில்லை. சமூகம் மட்டுமே அரவாணிகள் என கூறினாலும் சட்ட ரீதியாக மூன்றாம் பாலினமாகக் கருதி அரசின் அங்கீகாரம் தொடக்க நிலையிலேயே உள்ளது.

8. மாற வேண்டிய நமது பார்வை :
உயிருடன் ஊசலாடும் இந்த விளிம்பு நிலை மனிதர்களுக்கு ஒரு புனர்வாழ்வு தேவை. இவர்களை நாம் மனிதர்களாக, பார்க்க வேண்டும். இவர்களும் மனிதர்களே. இவர்களும் நம் குடும்ப சகோதரர்களே, இவர்களும் நமது பிள்ளைகளே. இவர்களுக்கும் ஓர் இதயம் உண்டு. அன்பை எதிர்நோக்கும் உணர்வு உண்டு என்ற ரீதியில் நமது பார்வை மாற வேண்டும். அவர்களையும் மனிதர்களாக மதிப்போம். தற்போது அரசு மேற்கொண்டுள்ள சில தொடக்க திட்டங்கள் அரவாணிகளின் நம்பிக்கைக்கு வகை புரிந்தாலும் அவர்களது புனர்வாழ்வுக்கு நமது சமூக ஆதரவும் அன்பான அரவணைப்பும் மட்டுமே வலுசேர்க்க முடியும். இவர்களுக்காக அண்மையில் தனிநபர் தீர்மானமாக திருச்சி சிவா எம்.பி. அவர்கள் மாநிலங்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றியது. உள்ளபடியே ஒரு விடியலுக்கான பாராட்ட வேண்டிய முயற்சி. காங்க் ராட்ஸ் சிவா.

9. அருட் பணியாளரும், பொது நிலையினரும் புரிதல்களில் மாற்றம் தேவை :
மீட்பர் இயேசு ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமை வாழ்வும், சிறைப்பட்டோருக்கு விடுதலையும், நற்செய்தியும் வழங்க விடுத்த அறைகூவல் இந்த அரவாணிகளுக்கும் பொருந்தும். நமது அருள்பணியாளர்கள், நற்செய்தியாளர்கள் தொண்டு நிறுவனங்களை நிர்வாகம் செய்யும் நமது திருஅவையினர் அனைவரும் இந்த அரவாணிகளை மனிதர்களாகப் புரிந்து செயல்பட வேண்டும். அரவாணிகளின் நல வாழ்வுக்கு தனிசட்டம் இயற்றவும் தனிகல்விக் கொள்கைகளை இயற்றி அவர்களைப் பற்றி ஒரு பகுப்பாய்வு செய்து வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மாற்று மனநிலைக்கு அவர்களைக் கொணரவும் ஒரு மறுபரிசீலனை தேவையாக உள்ளது. இதற்கு நமது திருஅவையின் பங்கு முழுமையாகவும், ஒருதூண்டுதலாகவும் அமைய வேண்டும். நற்செய்தியில் திருத்தூதர் பணி 8 : 26 ‡ 40ல் எத்தியோப்பிய அரசி கந்தகியின் நிதியமைச்சர் ஒரு அலி. அவருக்கு இறைவனால் ஏவப்பட்ட பிலிப்பு இறைவார்த்தைகளை எடுத்துரைத்து திருமுழுக்கு கொடுத்து மனம் திரும்புதலுக்குஏற்புடையவர் ஆக்குகிறார். இச்செயல் அரவாணிகளும் மனம் திரும்புதலுக்கு ஏற்புடையவர்கள் என்பதை நமது திருஅவையும் உணர வேண்டும் என்பதே எனது தாழ்மையான கருத்து. அதே போல் எசாயா 56 : 3 ‡ 5ல் ஆண்டவரின் சித்தப்படி நடக்கும் அண்ணகர்களுக்கு இறைவன் தன் இல்லத்தில் ஒரு நினைவுச் சினனத்தை எழுப்புவதாகவும் புதல்வர் புதல்வியரை விடச் சிறந்தோர் பெயரை வழங்குவதாகவும் வாக்களிப்பதை வாசிக்கிறோம். இவர்களை இறைவனுடைய ஏற்புடைய மக்களாக மாற்றுவது யாருடைய பொறுப்பு? விளிம்பு நிலையிலுள்ள அவர்களது புனர்வாழ்வுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? நமது நற்செய்தியின் ஊடுருவல் அவர்கள் மத்தியில் இருக்க வேண்டாமா?

10. நமது  சிந்தனைக்கு :
பணம், பாசம், உறவு, மேன்மை என்ற கனவுகளுடன் போராடி தோற்றுப் போய் ஒரு பிடி மண்ணோடும் அல்லது சாம்பலோடும் கலந்து போவது மட்டும் மனித வாழ்க்கை அல்ல. நமது மனசாட்சி என்ற உரைக்கல்லை கொண்டு நம் வாழ்வை உரசிப்பார்த்து ஒரு சுய அலசல் செய்ய வேண்டியது நமது கடமை. இந்த விளிம்பு நிலையில் உள்ள அரவாணிகளும் மனிதர்களே. இவர்களையும் நாம் மனிதர்களாக மதிப்போம். இப்படித்தான் ஒரு சுயமரியாதை கிறிஸ்தவனின் சமூகப்பார்வை சமூக நீதியுடன் அமைய வேண்டும் என்பதை மனத்தாழ்மையுடன் கேடடுக்கொள்கிறேன்.


No comments:

Post a Comment

Ads Inside Post