ஆலோசனை நேரம்
வேதியர் நல்லை. இ. ஆனந்தன்
திருமதி. பூங்கொடி. கரூர் :
திருமணமான ஓர் ஆண்டிலேயே கடவுள் எங்களுக்கு ஆண் குழந்தையைத் தந்தார். அவனுக்கு இரண்டு வயதாகிறது. இரவில் படுக்கையிலே சிறுநீர் கழிப்பதும் எப்போதும் விரல்களைச் சூப்புவதுமாக இருக்கிறான். பலர் அவனை டேய் சூப்பி என்று கூப்பிடும்போது அவமானமாக இருக்கின்றது. அவனை நான் எப்படித் திருத்துவது. வழிகாட்டுங்கள்.
பதில் : பூங்கொடியம்மா, தம்பதியருக்குக் கடவுள் தரும் மிகப்பெரிய பரிசு குழந்தைச் செல்வம் என்கிறது விவிலியம். எனவே கடவுளிடம் இருந்து ஆண் குழந்தையைப் பரிசாகப் பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். உங்கள் மகன் நூறு ஆண்டுகள் வாழ்வான். எனவே அவனுக்கு இன்னும் 98 ஆண்டுகள் இருக்கின்றன. எனவே அவன் திருந்த மிகவும் அவசரப்பட வேண்டாம்.
ஒரு குழந்தைக்கு பன்னிரெண்டு வயதாகும் வரை அது சிறுவர்தான் என்கிறது உளவியல். லூக்கா நற்செய்தியாளரும் பன்னிரெண்டு வயதில் காணாமற் போன இயேசுவை சிறுவன் இயேசு என்றே குறிப்பிடுகிறார். எனவே சிறு குழந்தைகளிடம் சில குணநலக் குறைபாடுகள் வரலாம். அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் சொல்ல விழைகிறேன்.
1. அடிக்கடி நோய்வாய்ப்படுதல் : அப்பா, அம்மா வேலைக்கு செல்லும்போது பாட்டியிடமோ. ஆயாவிடமோ. நர்சரியிலோ, வேலைக்காரரிடமோ அதை விட்டுச் செல்லும்போது குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படும். ஏனெனில் குழந்தைகள் தங்கள் மன அழுத்தங்களை வெளியே சொல்லமாட்டார்கள். அப்படிச் சொல்லவும் அவர்களுக்குத் தெரியாது.
உங்களின் நீண்ட கடிதத்தில் உங்கள் குடும்ப சூழ்நிலைப்பற்றி குறிப்பிடவில்லை. குடும்ப பிரச்சனைகள், கணவன், மனைவி உறவுகள் ஆகியவை குழந்தைகளின் குணநலன்களில் பாதிப்பை உண்டாக்கும்.
2. விரல் சூப்புதல் :
பிறந்த குழந்தைக்கு ஒன்பது மாதங்கள் வரை தாயிடம் பாலருந்தும் உரிமை உண்டு. தாய்க்கும் பால்தரும் கடமை உண்டு. இதில் தாய்ப்பால் மறுக்கும் போது அது மனதில் ஏக்கமும் வெறுமை உணர்வும், பாதுகாப்பற்ற மனநிலையும் உண்டாகும். ஏனெனில் ஒருவேளை அது புகைப்பிடிக்கும் ஆணாகவும், புறணி பேசும்; பெண்ணாகவும் மாற வாய்ப்புண்டு என்கிறது உளவியல். தடுக்கும் வழியுண்டு. குழந்தைகளை தொட்டு அரவணையுங்கள். தட்டிக் கொடுங்கள், இரவில் மடியில் போட்டு பாட்டுப் பாடி, பாராட்டி, பல கதைகள் கூறி, முத்தமிட்டு, முதுகைத் தடவிக் கொடுத்து இவை போன்ற அன்பு செயல்களில் அதிகம் ஈடுபாடு காட்டி உங்களை அவர்களுக்குப் புரிய வையுங்கள். விரல் சூப்புவது விரைவிலேயே நின்றுவிடும்.
3. நகம் கடித்தல் :
சில குழந்தைகள் தங்கள் நகத்தைக் கடிப்பார்கள். சிலர் பிற குழந்தைகளைக் கடித்து வைக்க ஆரம்பிப்பார்கள். மன அழுத்தத்தின் வெளிப்பாடு அது.
4. படுக்கையை நனைத்தல் :
குழந்தைகள் பிறந்து பதினெட்டு மாதங்கள் வரை படுக்கையிலே சிறுநீர் கழித்துவிடலாம். சிறுநீரகத் தசைகள் வலுப்பெற்றவுடன் இது நின்றுவிடும். சில வீடுகளில் இரண்டாவது குழந்தை பிறந்தவுடன், முதல் குழந்தை, தன் அரியணையிலிருந்து இறக்கி விடப்பட்டது போல் உணரும். எனவே, என்னைக் கவனி என்று சொல்லவும், குழந்தைகள் இவ்வாறு செய்யலாம். சில பெற்றோர்கள் யூரின் போன படுக்கையை முகரவைப்பதும், நாவால் நக்க வைப்பதும், நீயே அலசிப் போடு என்று அடிப்பதும், பலர் முன்னிலையில் இதை வெளிப்படுத்தி குழந்தையை மனநோகச் செய்வதுமாக அவமானப்படுத்துகின்றனர். இது வருந்தத்தக்க ஒன்று. செய்யச் கூடாதது. அன்போடும், பொறுமையோடும், கவனமாகக் கையாள வேண்டிய பிரச்சனை இது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சிறுவர்களும் படுக்கையிலே சிறுநீர் கழிப்பதுண்டு என்கிறது மருத்துவ உலகம்.
5. தூக்கத்தில் நடத்தல், தூங்கும் போது பேசுதல், தூக்கத்தில் பற்களைக் கடித்தல், தூக்கத்தில் சாப்பிடுவது போல அபிநயம் செய்தல் போன்ற குறைபாடுகள் சில குழந்தைகளுக்கு இரவிலே வெளிப்படலாம். இது ஒரு நோய் அல்ல! மாறிவிடும்.
6. ஆட்டிசம், பும்க்ஷிம், கவனச் சிதறல் என்று குறைபாடுகள் மேலும் பல இருக்கின்றன. பூங்கொடியம்மா, எல்லாவற்றையும் மருத்துவம் சரிசெய்து விடும். அதற்கென சிறப்பாகப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் அதிகம்பேர் உலகில் உண்டு. உங்கள் மகன் மிக நன்றாக வளர்வான். வாழ்வான். கடவுள் அவனை வாழவைப்பார். வாழ்த்துக்கள்!
திரு. செல்வக்குமார், மதுரை :
தலைமுறை இடைவெளி (ஜெனரேன் கேப்) என்று அடிக்கடி கேள்விப்படுகிறேன். ஊடகங்களில் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். அப்படி ஏற்படும் இடைவெளியை நான் எப்படிப் புரிந்து கொள்வது? வழிகாட்டுங்கள்.
பதில் :
நீண்ட பதிலைக் கொண்ட சின்னக் கேள்வி கேட்டிருக்கிறீர்கள் குமார் தம்பி. எதையும் தெளிவாக அறிந்து கொள்ளும் உங்களின் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்.
மத்தேயு நற்செய்தியில் முதலாம் அதிகாரத்திலே தலைமுறைகள் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். அபிரகாம் தொடங்கி இயேசு வரையிலும் 42 தலைமுறைகளைப் பற்றிய குறிப்புகளை நாம் அறிந்து கொள்ளலாம். லூக்கா நற்செய்தியில் வரும் மரியாவின் பாடலிலும், இதோ எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே என்று மரியா பாடுவதாகக் குறிப்பு உள்ளது.
தமிழர்கள் 30 ஆண்டுகளை ஒரு யுகம் என்று கணித்துள்ளனர். 1900 லிருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.
1900 முதல் 1930 வரை ‡ இன்டர் வார் ஜெனரேன் ‡ என்று அழைக்கிறார்கள். போராட்ட காலம் அது. வெள்ளையர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற நாம் ஒருமித்து போராட முனைந்தபோது ‡ உலகிலும் உலகப் போர்கள் நடைபெற்ற காலகட்டம் அது.
1930 முதல் 1960 வரை ‡ பேபி பூமரஸ் ஜெனரேன் ‡ மக்கள் தொகை அதிகம் பெருக்கமடைந்த கால கட்டம் அது. ஒவ்வொரு வீட்டிலும் எட்டு அல்லது பத்து குழந்தைகள் இருந்த நேரம் அது.
1960 முதல் 1990 வரை ‡ எக்ஸ் ஜெனரேன் என்கின்றனர். எக்ஸ் என்பது ஜெராக்ஸ் என்பதன் சுருக்கம். இக்கால கட்டத்தில் அப்பா போல மகனும், அம்மா போல மகளும், தலைவனைப் போல தொண்டர்களும், நடிகர்களைப் போல ரசிகர்களும், உடல் உடை அலங்காரம், நடையுடை பாவனைகளை பின்பற்றிய தலைமுறையாளர்கள் இவர்கள்.
1990 முதல் 2020 வரையிலும் ஒய் ஜெனரேன் தலைமுறை என்கின்றனர். ஆங்கிலத்தில் ஒய் என்றால் ஏன்? என்று பொருள். அறிவு வளர்ச்சியுற்ற தலைமுறை திரைப்படம் பார்க்க தியேட்டர் ஏன் போகணும், வீட்டிற்கே திரைப்படம் வர என்ன வழி என்று யோசித்த காலம். ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்கும் தலைமுறையில் நீங்கள் இருப்பதால்தான் கேள்வி கேட்கிறீர்கள். நானும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். 2020 முதல் 2050 வரை ‡ இசட் ஜெனரேன் வரும் என்று உலகம் கணித்திருக்கிறது. இசட் என்பது நேட் என்பதன் சுருக்கமாகும். இந்த காலத்தில் உலகமே இணைய தளம் வழியாக இயங்கும், அல்லது இயக்கப்படும் என்று கணித்திருந்தோம்.
ஆனால் 2010 லே வலைதளம் அசுர வேகம் எடுத்துவிட்டது. இன்டர்நெட் இன்றி மனிதன் இயங்க முடியாத நிலைக்கு ஆளாகி விட்டான். அதிலே நன்மைகள் எவ்வளவோ அவ்வளவு தீமைகளும் மலிய ஆரம்பித்து விட்டன. இணைய தளத்தில் சில பகுதிகளை முடக்க வேண்டிய காலகட்டத்தில் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே நாம் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது.
குமார் தம்பி, இதுதான் தலைமுறை இடைவெளி என்பது. இதுபற்றித் தெளிவாக மேலும் அறிந்து கொள்ள இணைய தளத்திற்குச் சென்று பார்க்கவும். வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment