திருக்காட்சிப் பெருவிழா
03/01/2016
எசா 60 : 1 - 6
எபே 3 : 2 -3, 5 - 6
மத் 2 : 1 - 12
எல்லாரும் இறைவனுக்கு ஏற்புடையவரே
அது ஒரு அழகானப் பள்ளி. பசுமை நிறைந்த மைதானம். அகலமான அறைகளைக் கொண்ட கட்டிடங்கள். ஓய்வறியா ஆசிரியர்கள். எண்ண இயலா மாணவ, மாணவியர்கள். அப்பள்ளியில் பயின்ற மாணவன் ஒருவன் இது எங்கள் பள்ளி, காரணம் என் தந்தைதான் இந்தப் பள்ளியின் முதல்வர் என்று பெருமைப்பட்டுக் கொண்டான். இன்னொரு மாணவி இது எங்கள் பள்ளி. காரணம் எங்கள் செங்கல் காலவாயிலிருந்துதான் செங்கற்கள் கொண்டுவரப்பட்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டன என்று அழுத்தமாகச் சொன்னாள். மற்றுமொரு மாணவர், இந்தப் பள்ளி எங்களுடையது. ஏனெனில் எங்கள் ஊரிலிருந்துதான் இந்தப் பள்ளியில் நிறைய பேர் படிக்கிறோம் என்று தீர்க்கமாகச் சொன்னான். இவ்வாறு ஒவ்வொருவரும் ஒரு சில காரணங்களுக்காக அந்தப் பள்ளி அவருடையது என்று வாதாடினர். இவற்றை எல்லாம் கேட்டறிந்த முதல்வர் இது அரசுப் பள்ளி. அனைவருக்கும் சொந்தம். அனைவரும் சம உரிமையுடன் வந்து படித்து பயன்பெற்றுச் செல்லலாம் என்று சொல்லி அவர்களின் வாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.
உலகில் இருக்கும் மறைகளில் பல பேதங்கள் இன்றும் இருப்பதை நாம் வருத்தத்தோடு கவனித்துக் கொண்டு இருக்கிறோம். சில கோவில்களுக்கு, பிற மறைகளை, இனங்களைச் சார்ந்தவர்கள் இன்றும் அனுமதிக்கப்படுவதில்லை. கடவுள் பெயரால் மனிதர்களை ஒன்றுபடுத்துவதைவிட்டு கொன்று குவிக்கப்படுகிறார்கள். நாகரீகம், கல்வி வளர்ந்த இந்த 21 ஆம் நூற்றாண்டுகளுக்குமுன் யூத சமூகத்தில் கடவுள் பற்றியச் சிந்தனைகளைச் சொல்லத்தான் வேண்டுமோ? யூதர்களும் கடவுளைத் தங்கள் குறுகிய கூடாரத்திலே முடக்கி வைக்க முற்பட்டனர்.
யாவே இறைவன் பிறருக்குச் சொந்தமில்லை என்ற கருத்தியலைத் தழுவியிருந்தனர். யாவே பெயரைச் சொல்லி பிற சமூகங்களுடன் தங்கள் உறவைத் துண்டித்துக் கொண்டனர்.
இந்தப் பிண்ணனியில் தான் திருக்காட்சி விழாப் பொருள் பொதிந்ததாக இருக்கிறது. இறைமகன் இயேசு, தான் எல்லோருக்கும் சொந்தம். அனைவரும் தன்னிடம் வரலாம். தன்னைத் தொழ வருபவர் அனைவரும் சாதி, இன, மத, மொழி, நாடு, பண்பாடு போன்ற எல்லைகளைக் கடந்து சகோதரர், சகோதரிகளாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் பெற்ற மக்களாகவே வாழ்வர் என்று இறைவன் இயேசு, தன்னையும், தன் கொள்கைகளையும் உலக மக்களுக்கு மூன்று ஞானிகள் வழியாக வெளிப்படுத்தின நாள்தான் திருக்காட்சித் திருநாளாகும்.
முன்பு கிறிஸ்தவரும் அயலவருக்கு மீட்பு இல்லை என்ற எண்ணம் கொண்டிருந்தது. இன்று அனைவரும் மீட்புக்குரியவர் என்று ஏற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சியே. இன்று நம் பங்குத்தளங்களிலும், கல்லறைகளிலும் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளிலும் நடப்பது என்ன? ஒரு பங்குத்தளத்தில் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் பெரும்பான்மையாக இருந்தால் அந்தப்பங்கு அவர்களுக்குத்தான் சொந்தம் என்று நினைப்பதில்லையா?
இன்றைய நற்செய்தியில் மூன்று ஞானிகள் விண்மீன் வழிநடத்துதலால் பாலன் இயேசுவை உலக மீட்பராகக் கண்டு, தெண்டனிட்டு வணங்கினர். இம்மூவரும் யூதரல்லாத பிற இன மக்களின் பிரதிநிதிகள் அல்லவா? பிறந்த பாலன் இயேசு, இறைவன், மனிதன், அரசன் என்று அகிலத்துக்கு அறிவிக்கும் வகையில் பொன், மீரை, தூபம் என்ற காணிக்கைகளைச் செலுத்தினர்.
இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், பாலன் இயேசு புறவினத்தாருக்கும் மீட்பர் எனத் தெளிவுப்படுத்தினார். மூன்று ஞானிகள், அவர்களின் காணிக்கைகளைப் பற்றியும், எசாயா இறைவாக்கினர் முதல் வாசகத்தில் முன்னுரைத்தது வியப்பாக இருக்கிறதன்றோ. எத்திக்கிலுமிருந்து இறைவன் மக்களை எழுப்பவார் என்ற சிந்தனையில் நாமும் நமக்குள் வேறுபாடுகளைக் களைந்து ஒரே இறைவனின் மக்களாக வாழ்வோமா?
No comments:
Post a Comment