ஆண்டின் மூன்றாம் ஞாயிறு
24/01/2016
நெகே 8 : 2 - 6
1 கொரி 12 : 12 - 30
லூக் 1 : 1 - 4, 4 : 14 - 21
இறைவார்த்தையின் வல்லமை
அவன்இந்த விளையாட்டில் பலமுறை தொடர்ச்சியாகத் தோல்வியைத் தழுவினான். அவனுடைய பெற்றோர்கள், “அந்த விளையாட்டை விட்டுட்டு வேற வேலையைப் பாருப்பா” என்று வற்புறுத்தினர். ஆனால் அவனுடைய நண்பன் அவனிடம், “என்னால் முடியும். வெற்றி எனதே என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொண்டேயிரு. வெற்றி அரசி உனக்கு சூட்டுவாள்” என்று உற்சாகப்படுத்தினாள். அவனும் அவ்வாறே சொல்லி வந்தான். ஆயிரமாயிரம் வெற்றி அரசிகள் அவனுக்கு முடிமட்டும் சூட்டவில்லை, மேலும் அவனை முத்தமிட வளைத்தும் போட்டனர். இதுதான் வார்த்தையின் வல்லமை. அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் அவன். அவனின் காயங்களைப் பார்த்து மருத்துவர்கள் உதட்டைப் பிதுக்கினர். அவனுடைய நண்பன். அவனிடம், நான் நலமடைவேன் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொண்டேயிரு. நலம் உன் வலம் வரும், என்ற குறுக்கு வழியைக் கோடுபோட்டுக் காட்டினான். அவனும் அவ்வாறே சொன்னான். இப்போது நலம் அவன் வலம் மட்டும் வரவில்லை. அவனுடைய உள்ளத்தில் ஒரு கோட்டையை கட்டியது. இதுதான் வார்த்தையின் வல்லமை. அவனுக்கு அந்த வியாபாரத்தில் படுதோல்வி. அவனுடைய உடைமைகளை எல்லாம் விற்றால்தான் தேறமுடியும் என்ற ஓரத்துக்குத் தள்ளப்பட்டான். அவனுடைய நண்பன் சொன்னான். நான் மீண்டெழுவேன் என மூச்சுக்கு முன்னூறு முறை சொல் என்று டிப்ஸ் இலவசமாகக் கொடுத்தான். அவனும் சொல்லி வந்தான். இப்போது லாபம் அவனுக்கு சுலபமாகத் தோன்றியது. இதுதான் வார்த்தையின் வல்லமை. அந்த நண்பன் யாருடைய சாயல் என உங்களால் சொல்ல முடியுமா? அந்த நண்பன்தான் நமக்காக உயிரைக் கொடுத்த ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் பிம்பம்.
மனிதர்களின் வார்த்தைகளுக்கே இவ்வளவு வல்லமை என்றால் கடவுளின் வார்த்தைகளுக்கு எவ்வளவு வல்லமை? சொல்லத்தான் முடியுமா? சொல்லத்தான் வேண்டுமா?
ஆதியிலே இறைவன் அனைத்தும் ஆகுக என்றார். அனைத்தும் ஆனது. அவரது வார்த்தை இஸ்ராயேல் மக்களின் வாழ்வோடும் பின்னிப் பிணைந்திருந்தது. புதிய ஏற்பாட்டிலும் ஆண்டவர் இயேசு ஆகுக என்றார். அனைத்தும் ஆனது. பேதுருவின் மாமிக்கு சுகம் வந்தது (மத் 8 : 14). இரைந்த கடலுக்கு அமைதி வந்தது (மத் 14 : 32) பர்த்திமேயுவுக்குப் பார்வை வந்தது (மாற்கு 10 : 52) மகதலா மரியாவுக்கு மன்னிப்பு வந்தது (லூக் 7 : 48). லாசருக்கு உயிர் வந்தது (யோவான் 11 : 42)
இஸ்ராயேல் மக்கள் கி.மு.587இல் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் தம் உயிரெனக் கருதிய கோவிலையும், விழாக்களையும், சட்டங்களையும், உடன்படிக்கைப் பேழையையும் இழந்தனர். அந்த வெற்றிடத்தை இறைவார்த்தையால் நிரப்பினர். சடங்குகளுக்கும், வழிபாட்டிற்கும் செலவழிக்கப்பட்ட நேரமும், முயற்சிகளும் இப்போது இறைவார்த்தையை படித்து விளக்கம் காண்பதற்குச் செலவிடப்பட்டன. இந்த இறைவார்த்தையை வாசிக்கவும், கேட்கவும் முளைத்தெழுந்தவைகள்தான் செபக்கூடங்கள்.
இவ்வகையிலேதான் முதல் வாசகத்தில் நெகேமியா இறைவாக்கினர் செபக்கூடத்தில் இறைவார்த்தையை வாசித்து அதற்கு விளக்கம் தந்தார். இந்த இறைவார்த்தையைத் தொகுத்து நற்செய்தி நூலாகத் தந்ததிலே லூக்கா ((முதல் வாசகம்) மகிழ்ச்சி அடைந்தார். இறைவார்த்தையின் மக்கள்; ஒன்றுபட்டிருக்க வேண்டும் என பவுலடியார் உடல்; உறுப்புகள் உவமை வழியாக உரைத்தார். பவுலடியார் காலத்திலே கிறிஸ்தவத்தில் பிரிவினைப் பேதங்கள் துளிர்விட்டன. அவைகளை முளையிலே கிள்ளி எறிய வேண்டும் என்பதுதான் உடல் உறுப்புகள் உவமையின் செய்தி. உடல் உறுப்புகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்கின்றனவோ இவ்வாறே கிறிஸ்து மறையுடலின் உறுப்புகளாகிய நாம் ஒற்றுமையாகவும், ஒன்றுபட்டும் இருக்க வேண்டும்.
நம்முடைய வாழ்விலும் நம்முடைய வார்த்தைகள் ஆக்கும் வல்லமையைக் கொண்டதாக உள்ளதா அல்லது அழிக்கும் சக்தியைக் கொண்டதாக இருக்கிறதா எனச் சிந்திப்போம். நம்முடைய வார்த்தைகள் உறவையும், ஒற்றுமையையும் உருவாக்குகிறதா அல்லது ஒழிக்கிறதா என யோசிப்போம். ஒருவனை மக்கு, பேக்கு என்று சொல்லி வந்தால் அவன் மக்காவும், பேக்காவும்தான் இருப்பான். அவனை நல்லவர், வல்லவர் (பேஷ் பேஷ், சபாஷ் சபாஷ்) என்று சொல்லிவந்தால் அவர் நல்லவராகவும், வல்லவராகவும் உருமாறுவார். அதனால்தான் வள்ளுவரும் சொன்னார்.
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று ”
என்று. நல்ல வார்த்தைகள் கோடியிருக்க நாம் ஏன் தீய வார்த்தைக் குப்பைகளைக் கிளரவேண்டும்? நல்ல வார்த்தைகளைப் பேசுவோம். ஆரோக்கியமா சமூகம் சமைப்போம்.
நம்முடைய வாழ்விலும் நம்முடைய வார்த்தைகள் ஆக்கும் வல்லமையைக் கொண்டதாக உள்ளதா அல்லது அழிக்கும் சக்தியைக் கொண்டதாக இருக்கிறதா எனச் சிந்திப்போம். நம்முடைய வார்த்தைகள் உறவையும், ஒற்றுமையையும் உருவாக்குகிறதா அல்லது ஒழிக்கிறதா என யோசிப்போம். ஒருவனை மக்கு, பேக்கு என்று சொல்லி வந்தால் அவன் மக்காவும், பேக்காவும்தான் இருப்பான். அவனை நல்லவர், வல்லவர் (பேஷ் பேஷ், சபாஷ் சபாஷ்) என்று சொல்லிவந்தால் அவர் நல்லவராகவும், வல்லவராகவும் உருமாறுவார். அதனால்தான் வள்ளுவரும் சொன்னார்.
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று ”
என்று. நல்ல வார்த்தைகள் கோடியிருக்க நாம் ஏன் தீய வார்த்தைக் குப்பைகளைக் கிளரவேண்டும்? நல்ல வார்த்தைகளைப் பேசுவோம். ஆரோக்கியமா சமூகம் சமைப்போம்.
No comments:
Post a Comment