இரட்சணிய யாத்திரிகம்
- எம். சி. குமார், எம்.ஏ., எம்.பில்., பி.எட்., விரகாலூர்.
சாயர் மின் கலாசாலைத் தலைவர் அவர்கள் வித்துவான் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளையிடம் காட்டிய அன்பு இவருடைய நெஞ்சைத்தைத் தொட்டது. வித்துவானுக்குக் கிறிஸ்துவ மார்க்கத்தைப் பற்றி பல செய்திகளைச் சொல்லி வைத்தார். அவர் விருப்பத்தோடும், அன்போடும் போதிக்கிற அருமையான வார்த்தைகள் தொடக்கத்தில் வித்துவானுக்கு வெறுப்பாகவும், கசப்பாகவும் இருந்தாலும் நாளடைவில் அவர் காட்டிய நற்குண செய்கைகள் மனத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது வயதுவரை வைணவ நெறியில் பிடிவாதமுடைய கொடிய வைணவராக இருந்தார்.
கிறிஸ்துவ புனித நூலான விவிலியத்தை பெற்று அதை வாசிக்க ஆரம்பித்தார். விவிலியம் கிறிஸ்தவர்களின் முக்கியமான நூல் என்பதை அறியாமல், பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தில் முதல் இருபது அதிகாரங்களை வாசித்து, உலக படைப்பு, பாவ வருகை, கடுமையான நீர்ப்பெருக்கு முதலியவைகளை கற்று அறிந்தார். அக்கால கட்டத்தில் வித்துவானுக்கு கிறிஸ்தவர்களிடம் பழக்க வழக்கங்கள் அதிகமானது. வேத அறிவையும் மிகுதியாக அறிந்தார் வைணவ மதத்தில் இருந்த ஆழ்ந்த வைராக்கியம், கோட்பாடுகள், விரதங்கள் ஆகியவை குறையத் தொடங்கின.
பின்பு இவருடைய மனமானது ஒரு நிலையில் நில்லாமல் வாடிச் சோர்வடைந்தது. அக்காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உயர்குலத்தோர், கல்வி, அறிவு ஒழுக்கங்களில் சிறந்தோருமாகிய அநேக இந்துக்கள் தன் மதத்தைத் துறந்து கிறித்துவ சமயத்தில் தன்னை இணைத்துக் கொண்டனர். இதே சமயத்தில் சிருட்டிணப் பிள்ளையின் உடன் பிறந்தவரான முத்தையாப்பிள்ளையும் கிறித்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு 1857ஆம் ஆண்டு ஞானதீட்சை (திருமுழுக்கு) பெற்றார். தம்பி கிறித்தவனானதைக் கேள்விப்பட்ட கிருட்டிணப்பிள்ளை மனத்தில் குழப்பமடைந்து கிறித்துவ மதத்தை ஆழ்ந்து நினைக்கலாயினார்.
இதன்பின் கிருட்டிணப்பிள்ளையிடத்தில் பலர், கிறித்ததுவைப் பற்றி நினைக்கவும், கிறித்துவ அறிவை ஊட்டவும் முயற்சி செய்தனர். அக்காலத்தில் முதிர்ந்த அறிவும், தீர்க்க புத்தியும் உடைய ஸ்ரீமான் தனகோடிராஜி என்பவர் கிறித்துவ மறைக்கு மாறினார். நற்குண நல்லொழுக்கங்களில் சிறந்து மிகப் பெரிய பதவியில் இருந்தவர். இவருடைய வார்த்தைகளும் அனுபவ சாட்சியும் வித்துவானுடைய மனத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. இதே காலத்தில் பாளையங்கோட்டையிலிருந்த மறைப்பரப்பு குழுவினர் சிலர் இவர் வியத்தில் அதிக முயற்சியயடுத்து வந்தனர். வித்துவான் இந்நாட்களில்,
“இருதலைக் கொள்ளி யுற்ற எறும்பென ஒரு மார்க்கம்
ஒருதலை யானுங் காணா துணங்கி”
கலங்கி, யாது செய்வதெனத் தெரியாது காற்றில் அடிப்பட்ட சருகு போலச் சூழல்வராயினார். இவ்வாறு வித்துவானுடைய மனம் ஒரு வழி நில்லாமல் உழன்று கொண்டிருக்கையில் ஒருநாள் ஸ்ரீமான் தனகோடிராஜி வித்துவானுடைய ஆன்மீக நிலையை அவருக்கு எடுத்துக்காட்டி, இளமை பக்தி, ஆத்தும விசாரம் தீர்தல், இருதயக் காவல், மோட்சப் பிரயாணம் என்னும் நாலு புத்தகங்களை கொடுத்து படித்து கிரகிக்கும்படி அவருக்குப் புத்தி கூறி அனுப்பினார். அவற்றை வித்துவான் படித்தபொழுது அவற்றின்கண் அடங்கிய ஆன்மீகக் கருத்துக்களை காந்தம் ஊசியைக் கவருவது போல அவருடைய நெஞ்சத்தைக் கவர்ந்தன. மோட்சப் பிரயாணம் என்ற அந்த நூல் அவருடைய இருதயத்தைத் தொட்டு உணர்த்தியது. பின்பு தம் நண்பராகிய தனக்கோடி ராஜியின் ஆலோசனையின்படி வித்துவான் நாலு சுவிசேசங்களையும் ஒழுங்காய் வாசிக்கவும் தம் இருதயக் கண்கள் திறக்கும்படி மன்றாடவும் தொடங்கினார். ஒரு நாளிரவு கிருட்டிணப்பிள்ளையும், சீமான் தனக்கோடி ராஜி ஆகிய இருவரும் நீண்ட நேரம் கிறித்தவ மறையைப் பற்றி பேசலாயினர். வெகு நாளாகத் தமக்கு விளங்காத விசயங்களை வித்துவான் கேட்டறிந்தார். தம் ஐயங்கள் நீங்கியதும், பயம் அகன்றது.
அந்த நிமிடமே இயேசு கிறிஸ்துவை வித்துவான் தமது இருதயத்தில் ஏற்று கொண்டார். இந்நள்ளிரவைப் பற்றி வித்துவான் கூறியது,
“அன்றே கிறிஸ்து நாதரை அறிந்தேன். அன்றே அவர்; திருநாமத்தை முன்னிட்டு செபம் செய்ய துணிந்தேன். அன்றே வெகு நாட்களாக மதுரமாக இருந்த பாவகாரியங்கள் யாவும் கசப்பாக மாறின. அன்றே ஸ்ரீகிறிஸ்துவை வழிபட தீர்மானித்தேன். அன்றைக்கே ஞாபகர்த்தமாக ஒரு செய்யுள் எழுதி வைத்தேன். அன்றே, தெய்வம் என் இதயத்தையும் அவரைத் துதிக்க என் வாயையும் திறந்தார்”.
என வித்துவான் கூறியிருக்கின்றார். அந்த நள்ளிரவில் வித்துவான் எழுதி வைத்த செய்யுளாவது,
“கருணையங் கடலே அந்த காரமாம் வினையைப் போக்கும்
அருணனே அடியேற்காக ஆருயிர் விடுத்த தேவே
பொருணயந் தெரியாத தீய புல்லிய ளெ னையாட் கொள்ளத்
தருணமென் னிதய நிற்கே சமர்ப்பணந் தரும மூர்த்தி”
கருணை சமுத்திரமே பாவமாகிய இருளைநீக்கும் ஞான சூரியனே! அடியேனுக்காக அருமையான ஜீவனையும் விட்ட தெய்வமே! உண்மைப் பொருளையும் அதன் நலத்தையும் அறியாத தீமை நிறைந்த ஈனனாகிய என்னை ஆட்கொண்டருளுவதற்கு இதுவே ஏற்ற தருணம். தருமமூர்த்தியே! என் இதயத்தை உமக்கே தேவார்ப்பணமாகக் கொடுக்கிறேன்.
கிருட்டிணப்பிள்ளையின் இருதயமானது நம் பெருமானுடைய திருவடிகளுக்கு ஆட்பட்டுவிட்டது. ஆயினும் இவ்விசயத்தில் உலகறியுமாறு வெளியிடுவதற்கு அவருக்கு மனம் ஒத்து வரவில்லை. மனநிலையை தனக்குள்ளே அடக்கிச் சில நாள்கள் செலவிட்டார். ஆயினும் வைணவ மதச் சடங்குகளில் ஊக்கம் குறைந்து வருவதை இவருடைய வீட்டார் கவனித்தனர். இதனால் இவர் இரவில் இரகசியமாகவே ஜெபித்து வந்தார். இதைக் கண்ட இவர் மனைவிக்கும் இவரைப் பற்றிய சந்தேகம் அதிகரித்தது. ஒருநாள் தம் மனைவியை அழைத்து கிறித்துவ மார்க்கத்தைப் பற்றி பேசத் தொடங்கினார். இதைக் கேட்டவுடன் அவர் மனைவி கலங்கித் திகைத்துத் தேம்பி அழுது, அந்நிமிடமே உயிர் துறப்பதாக கூறினார். அக்காலத்தில் வித்துவானுக்கு ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று பெண் குழந்தைகள் இருந்தார்கள். இவரது தாயாரும் இவருடனே இருந்தார். தாம் மட்டும் கிறிஸ்தவரானால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகுமென்று இவர் சஞ்சலப்பட்டார். கிறிஸ்தவனாகாமல் இருக்கவும் இவருக்கு மனமில்லை. குடும்பத்தார் எல்லாரையும் தள்ளிவிட்டுத் தாம் மட்டும் தனியே கிறித்தவராகவும் துணிவில்லை. (தொடரும்)
No comments:
Post a Comment