செக்குமாடு
- கேத்தரீன் ஆரோக்கியசாமி, திருச்சி.
மழை இன்னும் நின்றபாடில்லை. ஜன்னல் ஓரத்தில் வடியும் நீரை கையில் பிடித்து விளையாடும் சுகம் அலாதி. மழைநீரில் விளையாடுவதை பார்த்தால் அம்மா சத்தம் போட்டு காதைத் திருகி இழுத்துக் கொண்டு போய் ரூமில் அடைத்து படிக்கச் சொல்லும்போது மனசை வருத்தும் வருத்தம் சொல்லிமாளாது. என் எண்ணச் சிதறல்கள் ஐம்பது வருடத்துக்கு முன்னோக்கிச் சென்றது. அம்மா வீட்டில் உள்ள இதே ஜன்னல் வழியாக பார்த்தால் பின்னால் ஒரு செக்கும் அதை இழுக்கும் செக்குமாடும் “ஹேய், ஹேய்” என்று சொல்லிக் கொண்டு செக்கை ஓட்டும் செட்டியாரும் என் கண்முன்னே தெரிவார்கள்.
செட்டியார் செக்கை மெதுவாக டொடக்,டொடக் என்று ஓட்டும்போது அந்த மாடு அக்கம் பக்கம் பார்க்காமல் சுத்தி சுத்தி வரும். மதியத்துக்குப் பிறகு செட்டியார் தூங்கிக் கொண்டே ஓட்டினாலும் மாடு எந்த சலனமும் இல்லாமல் தன் வேலை சுத்தி வருவது மட்டுமே என்பது போல, எந்த உணர்வும் இல்லாமல் செக்காட்டுவது மட்டும்தான் தன்னோட வேலை என்பதுபோல் சுற்றும்போது, இந்த மாடு என்ன எந்த உந்துதலும், எதிர்ப்பும் இல்லாமல் சுமையைத் தாங்கிக் கொண்டு சுற்றுவது அனிச்சை செயலாகத்தான் எனக்கு தோன்றும்.
இன்று என்னுடைய நிலையும் செக்குமாட்டைப் போலத்தானே இருக்கிறது. வயது முதிர்ந்துவிட்டால் நமக்கு என்று எந்த எதிர்ப்பார்ப்பும், மரியாதையும் தேவை இல்லையா? காலையில் என் மகனுக்கும், எனக்கும் நடந்த உரையாடல்தான் என்னை இப்படி சிந்திக்க வைக்கிறது. என்னை என் அம்மா வீட்டுக்கு அழைத்து வந்திருப்பதும் அந்த விமான வார்த்தைகள்தானே? எவ்வளவு வயதானாலும் தாயின் அன்புக்கும், ஆதரவுக்கும் ஈடு இணை வேறில்லை.
கிறிஸ்மஸ் வரப்போகிறது, ஆன்ம காரியங்களோடு, உலக காரியங்களிலும் நடைமுறை வழக்கங்களிலும் நாம் நமது கவனத்தை செலுத்த வேண்டியதும் நமது கடமை என்ற உணர்வுடன்தான் எனது பையனிடம் பேசினேன். “வரும் கிறிஸ்மஸ்க்கு உன் தங்கச்சி லீனாவுக்கும், அவளது குழந்தைகளுக்கும் துணி எடுத்திடு. கிறிஸ்மஸ் லீவுக்கு பிள்ளைகளோட நம்ம வீட்டுக்க வரச்சொல்லிடுப்பா”.
“அம்மா! எனக்கு எல்லாம் தெரியும். ஒவ்வொரு வருமும் நாம தானே வாங்கிக் குடுக்கிறோம். இந்த வரும் அவுங்களே வாங்கிக்கிடட்டும். கிறிஸ்மசை அவுங்க வீட்டிலேயே கொண்டாடட்டும். இங்க வந்துதான் கொண்டாடனும்மா?” எரிச்சலுடன் என்னைப் பார்க்க,
“ஏண்டா! ஒரே தங்கச்சி, அஞ்சாறு பேரா இருக்காங்க. வருத்துக்கு ஒருநாள் வர கிறிஸ்மஸ்க்கு புதுத்துணி வாங்கிக் குடுக்கக் கூடாதா? அஞ்சாறு நாள் வந்து தாய் வீட்ல பிள்ளைகளோட தங்கிட்டுப் போகக் கூடாதா? இதுல நீ என்ன குறைஞ்சிப்போற? என் வீடு. இந்த உரிமைகூட அவளுக்கு இல்லியா? நான் இருக்கும்போதே இந்த நிலைமைன்னா நான் போனதுக்கு அப்புறம் அவளோட நிலைமை என்ன ஆகுமோ தெரியலையே?” என் மனக் குமுறலைக் கொட்ட,
“அம்மா! இப்ப என் நிலைமை சரியில்லை. தொடர்ந்து மழை பெஞ்சதாலே வியாபாரம் ரொம்ப டல்லா இருக்கு”.
“அதனால சாப்பிடாமா இருக்கோமா?”
“சாப்பாடு தேவையானதும்மா, பண்டிகையை கொண்டாடுறது ரொம்ப அவசியம் இல்ல”.
“இப்படி சொன்னா எப்படி?”
“சரிம்மா! உங்க பென்ன் பணத்தை சேர்த்து வெச்சிருக்கீங்க இல்ல, அதுல லீனாவுக்கு வேண்டியதை செய்யுங்க. நான் வேணாம்னு சொல்லல”.
“என்னடா சொன்ன? என் பென்ன் பணத்தில் செய்ய நீ சொல்லனுமா? எனக்குத் தெரியும். எம் பொண்ணுக்க என்ன செய்யிறதுன்னு”.
“உங்க பொண்ணுக்கு என்ன செய்யணும்ன்னு தெரியுமில்ல. என்னை தொல்லை பண்ணாதீங்க”.
“இது தொல்லையா இருக்கா? எம் பொண்ணுக்கு இதுவரைக்கும் என்ன பெரிசா செஞ்சிட்ட? கல்யாணம் பண்ணி வெச்சியா? சீர் செஞ்சியா? பிள்ளைபேறு பாத்தியா? எல்லாம் நானும் உங்க அப்பாவும்தான் செஞ்சோம். உனக்கு எந்த பொறுப்பும் வைக்கல.
சொல்லும்போதே மூச்சிரைக்கிது. பாழாப்போன இந்த ஆஸ்மா மழைக்காலம் வந்தா பாடா படுத்துது. பேசக்கூட முடியல”.
“அம்மா! உங்களுக்கு வயசாயிடுச்சி. ஆஸ்மா வேற இந்த பனிக்காலத்தில ஜாஸ்தி ஆயிடும். பேசாம ரெஸ்ட் எடுங்க. உங்க வேலையை பாருங்க. சாப்பிட்டோமா, மாத்திரை மருந்தை எடுத்துக்கிட்டோமா, தூங்கினோமா, கோவிலுக்கு போனோமா, கடைசி காலத்தில நல்ல சுகத்தை குடுன்னு கடவுள்கிட்ட வேண்டினோமான்னு இல்லாமா, எல்லாம் உங்களாலத்தான் நடக்கிறமாதிரி உடம்பை வறுத்திக்கிட்டீங்கன்ன, உங்களுக்கும் தொல்லை, எங்களுக்கும் தொல்லை.
உங்களுக்கு நான் தொல்லை தாண்டா!”
“எல்லாம் வந்தவ செய்யிற வினை. யாரை குத்தம் சொல்றது. எனக்கு சோறு போடுறதையே பெரிசா நினைச்சி பேசுறீயா? அந்த தொல்லை இல்லாம நான் போறேன் எங்க வீட்டுக்கு. என் அண்ணன் இன்னும் எனக்கு வேண்டியதை செய்வாரு.”
பெரிய வீராப்புடன் பேசிவிட்டு தாய் வீட்டுக்கு வந்த என்னை பெரிதாக வரவேற்கவில்லை எனது அண்ணியார். அம்மா அவர்கள் இறுதிநாளை எண்ணிக் கொண்டிருக்கும் ஜீவன். இருந்தாலும் என்னைப் பார்த்தவுடன் அவர்களது கண்ணில் ஒரு குளிர்ச்சி. ஆரத்தழுவிய அவர்களது அரவணைப்பு எனது துக்கத்தை எங்கோ கூட்டிக் கொண்டு போய்விட்டது. ஜன்னல் அருகே பழைய நினைவுகளில் முழ்கி இருந்த என்னை என் அண்ணனின் வரவு அழுகையை வரவழைத்தது. தேக்கி வைத்திருந்த என் மன புழுக்கத்தை கொட்டித் தீர்த்தேன். எனக்கு அந்த வீட்டில் எந்த மரியாதையும் கிடையாது. என் கணவருக்குப் பின்னால் நான் உயிரோடு இருப்பதே தேவையில்லாததுன்னு தோனுதுன்னு சொன்னபோது என் தாயாரின் கண்களில் கண்ணீர். என் கோபம் தேவையில்லாதது, பேரன் சொல்வதில் தப்பில்லை. இனிமேல் நாம் நம் வாழ்க்கையை மட்டும் பார்த்துக் கொண்டு வாழ்ந்தால் போதும் என்று என் தாயார் சொன்னபோது எனக்கு உடன்பாடில்லை. ஆனால் என் அண்ணன் “தங்கா! இங்க வா. உனக்கு புரிய வைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே நாங்கள் இருவரும் சிறு வயதில் ஒன்றாக நின்னு வேடிக்கை பார்க்கும் ஜன்னல் அருகே அழைத்துச் சென்றார். இதோ பாரும்மா, இந்த ஜன்னல் வழியாக நாம ரெண்டு பேரும் செட்டியார் செக்கை ஓட்டுறதப் பார்ப்போம். செட்டியார் செக்காடி முடிஞ்சோன எள்ளு புண்ணாக்கைத் தருவாரு. சுடச்சுட இருக்கிற புண்ணாக்கு வாசமா ருசிக்கும், ஞாபகம்இருக்கா?”
“இருக்குண்ணே! அதுக்கென்ன?”
“அந்த செக்குமாட்டை பார்த்திருக்கியா? எந்த இலக்கும் இல்லாம அதுபாட்டுக்கு சுத்திக்கிட்டு இருக்கும். கால் வலிச்சா நிக்கும். செட்டியார் குச்சியால அடிச்சா திரும்ப நடக்கும். இனிமே நமக்கு வாழ்க்கையில எந்த இலக்கும் இல்லை. நம்ப புள்ளைங்க பாத்துக்குவாங்க. நீ உன்னோட உடம்பை பார்த்துக்க. உன்னால முடிஞ்சதை செய். கிறிஸ்மஸ் புதுத்துணி போட்டாத்தான் கொண்டாட்டமாகாது. பிறக்கப்போற இயேசு பாலன் உன் பையனுக்கு நல்ல வியாபாரம் நடக்க உதவி செஞ்சி தன் தங்கச்சியை பார்த்துக்கிற மனச குடுக்கனும்னு வேண்டிக்க. உன்னோட பணத்தை அவனுக்கு குடுத்து உதவுவது தப்பில்லை. மனதில் வறியவர்களா இருக்கக் கூடாதுன்றதுதான் இயேசு பாலனோட எதிர்பார்ப்பு. நீங்க எல்லாரும் என் வீட்டுக்கு வாங்க. குடும்பத்தோட கிறிஸ்மஸ் கொண்டாடுவோம்”.
“சரிண்ணே!”
“இப்ப நமக்கு எதுக்கு கோப தாபங்கள்! கடவுளோட இணைவதுதான் நமக்கு தேவை. நம் ஓட்டம் முடியும்போது இன்பமயமான எதிர்காலம் நமக்காக காத்திருக்கும்”.
No comments:
Post a Comment