ஆண்டின் இரண்டாம் ஞாயிறு
17/01/2016
எசா 62 : 1 - 3
1 கொரி 12 : 4 - 11
யோவான் 2 : 1 - 11
சென்ற ஞாயிறன்று திருமுழுக்கின் வழியாகப் புதுவாழ்வைப் பற்றிச் சிந்தித்தோம். இன்று திருமணம் எனும் அருட்சாதனம் வழியாக திருமணத்தம்பதியர்க்கும் பிறருக்கும் இறைவன் அருளும் புதிய வாழ்வைப் பற்றிச் சிந்திப்போம்.
அந்தத் திருத்தலத்திலே திருமணம் ஒன்று நிறைவேறியது. வெகு தூரத்திலிருந்து சென்றிருந்த பக்தர்களின் திருமணம் அது. திருமணச் சடங்குத் தொடங்குமுன் மணமாலையைத் தேடினர். ஒரு மாலை மட்டும்தான் இருந்தது. இன்னொரு மாலையைக் காணவில்லை. இதைவிட பெரிய அதிர்ச்சி. தாலியையும் காணவில்லை. தாலியை வீட்டிலேயே வைத்துவிட்டு மறதியாக சென்றுவிட்டனர். சொல்லவா வேண்டும் கூச்சல் குழப்பங்களுக்கு?
இதைக் கவனித்துக் கொண்டிருந்த வேறு ஒரு பக்த புதுமணத் தம்பதியர் தங்களின் புதுத்தாலி ஒன்றை மந்திரித்து அணிந்து கொள்ள கொண்டு வந்து இருந்தனர். இந்த இருவரும், மனம் ஒருமித்துச் சென்று, தம் தாலியை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களின் ;திருமணத்தை நிறைவேற்றிக் கொள்ளுமாறு வேண்டினர் புதியத் திருமணத் தம்பதியர். அதை நன்றியோடுப் பெற்றுக்கொண்டு புதிய வாழ்வு வாழப் புறப்பட்டனர்.
இன்றைய நற்செய்தியில் கானாவூர்த் திருமண விருந்தில் தண்ணீரும், இரசமும் புதுவாழ்வைக் குறிக்கின்றன. கானாவூர்த் திருமணத் தம்பதியரின் வாழ்விலே பழைய இரசம் தீர்ந்துப் போனது. மரியன்னையின் ஈடுபாட்டாலும், ஆண்டவர் இயேசுவின் அருளாலும், புதிய அருள்வாழ்வு அவர்களுக்கு அளிக்கப்பட்டது. ஆண்டவர் இயேசு சமாரியப் பெண்ணிடம், நான் கொடுக்கும் தண்ணீர் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வை அளிக்கும் (யோவான் 4 : 15) என்றார். பழைய ஏற்பாட்டில் மோயீசன் கடும்பாறையை நீரோடையாக்கினார் (வி ப 17 : 6). புதிய ஏற்பாட்டில் தண்ணீர் வழியாக நிலைவாழ்வைத் தந்தார் (யோ 4 : 15). அன்று தண்ணீரால் மக்களின் தாகம் தீர்க்கப்பட்டது. இன்று தண்ணீரால் மக்களுக்கு நிலைவாழ்வு அருளப்பட்டது.
இஸ்ராயேல் மக்கள் வாழ்வில் பழைய இரசம் அவர்களின் பாவ வாழ்வையும், அதன் விளைவானத் தண்டனையையும் குறிக்கிறது. திராட்சை இரசம் கொண்டு வருவோம். போதையேற அருந்துவோம் (எசா 56 : 12). புதிய இஸ்ராயேல் மக்கள் வாழ்வில் திராட்சை இரசம் புதிய வாழ்வைக் குறிக்கிறது. இறையாட்சி வரும் அந்நாளில் தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன் (மாற்கு 14 : 25). இறையாட்சி ‡ புதிய வாழ்வு அரும்பி விட்டதன் அடையாளமாக கானாவூர்த் தம்பதியர்க்கு புதுத்திராட்சைப்பழ இரசத்தை வழங்கி ஆசீர்வதித்தார்.
முதல் வாசகத்தில் பாபிலோனிய அடிமைத்தனத்தின் இறுதிக்கட்டத்தில் இருந்த இஸ்ராயேல் மக்களுக்கு புதிய விடுதலை வாழ்வின்போது புதுமணக்கோலம் பூண்டு மகிழ்ந்திருக்கச் சொன்னார். எசாயா இறைவாக்கினர் இந்தப் புதிய வாழ்வைப் பெற்று வாழ்வதற்கான வழிமுறைகளை இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் பட்டியலிட்டார். தூய ஆவியார் அருளினத் திறமைகளைக் கண்டுபிடித்து பொதுநலனுக்காக வாழும்போது புதிய வாழ்வைத் தொடங்குகிறோம் (1 கொரி 12 : 7). புதுவாழ்வை நமதாக்கிக் கொள்வோமா?
No comments:
Post a Comment