என்ன செய்யப் போகிறோம்?
- குறிஞ்சி
16.9.2015 அன்று மாலை 6 மணிக்கு குடந்தை காந்தி பூங்காவுக்கு முன்பாக ஓர் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் குடந்தை கிளை, அம்மாச்சத்திரம் கிளை, திருபுவனம் கிளை, திருநாகேஸ்வரம் கிளை ஆகியன ஒன்று சேர்ந்து நடத்திய ஆர்ப்பாட்டம். கர்நாடகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கல்புர்கி அவர்களின் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. முற்போக்குச் சிந்தனையாளன் என்ற அடிப்படையில் நானும் அவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்றேன். மாலை 6 மணிக்குத் தொடங்கிய ஆர்ப்பாட்டம் இரவு 8 மணிக்கு முடிந்தது. தொடக்கத்தில் பத்து நிமிடம் முழக்கங்கள், பின்னர் உரைவீச்சுகள், நிறைவாக பத்து நிமிடம் முழக்கங்கள் என்று அந்நிகழ்ச்சி ஓழுங்கு செய்யப்பட்டடிருந்தது.
குடந்தை காந்தி பூங்காவுக்கு அருகில் எந்த நாளும் மாலை நேரத்தில் ஓரளவு கூட்டம்; இருக்கும். நடைப்பயிற்சி செய்வோர், பொருள்கள் வாங்குவோர் பணிமுடித்து வீடு திரும்புவோர், சிறு வணிகர் என அந்த இடத்தில் அசைந்து கொண்டே இருக்கும். மக்கள் திரளுக்கு முன்பு, தத்தம் கருத்துக்களை எடுத்துரைக்க கூடியிருந்தனர் தமிழ் எழுத்தாளர்களும், கலைஞர்களும். ஆனால் எனக்குள் ஓர் ஐயம் இருந்து கொண்டே இருந்தது. கூர்மையாக சிந்தித்து உள்வாங்க வேண்டிய செய்திகள் சமூக அக்கறையோடு முன்வைக்கப்படும் வரலாற்றுத் தரவுகள் போன்றவற்றை நம்முடைய மக்கள், எந்த அளவுக்குக் கேட்பார்கள் என்ற ஐயம்தான் அது. எனக்குள்ளே ஓர் அவநம்பிக்கை அசைந்து கொண்டே இருந்தது. முதல் ஆளாக பேசுவதற்கு அழைக்கப்பட்ட நான் என்னுடைய உரையை ஐந்து நிமிடங்களுக்குள் முடித்துக் கொண்டேன். இறை நம்பிக்கையின் தோற்றத்தையும், அவசியத்தையும் விளக்கி இன்று அந்நம்பிக்கை அரசியல் ஆக்கப்படும் அபாயத்தை மக்கள் உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் செய்திகளை விளக்கி பகுத்தறிவாளரும் பேராசிரியருமான கல்புர்கியின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து என் உரையை முடித்திருந்தேன். என்னைத் தொடர்ந்து பேச வந்த பல்வேறு தோழமை அமைப்பினரும் எழுத்தளர்களும் கலைஞர்களும் மாலை நேர பல்கலைக்கழகம் என்று நினைக்கத்தக்க விதத்தில் அரிய உரைகளை வழங்கினர். அசைந்து கொண்டிருந்த மக்கள் திரளில் பலர் ஆங்காங்கே அப்படியே நின்று உரைகளைக் கேட்டனர். மக்களின் ஆர்வம் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தியோருக்கு பன்மடங்கு ஆர்வத்தைத் தூண்டியிருந்தது. நகைச்சுவை இல்லாத விரசமில்லாத கூர்மையான சமூக, அரசியல் கருத்துகளைக் கேட்க மக்கள் தயாராக உள்ளனர் என்பதை அந்நிகழ்வு எனக்கு உணர்த்தியது. சமூக அக்கறையோடு தொண்டு செய்யும் அமைப்புகள் தான் இன்றைய தேவை என்பதை உணர்ந்தேன்.
சரி, ஆர்ப்பாட்ட உரைகளில் இருந்து ஒருசில செய்திகளையாவது நாம் பகிர்ந்து கொள்ளலாமே. அண்மையில் நர்நாடக மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைகவர்நராக இருந்து ஓய்வு பெற்ற முற்போக்குச் சிந்தனையாளர் கலபுர்கி மதவெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாரதிய சனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இந்து மத வெறி தூண்டப்படுவதையும், புராணக் கதைகளின் வழி மூட நம்பிக்கைகள் வளர்க்கப்படுவதையும் பேராசிரியர் கல்புர்கி கண்டித்துள்ளார். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகத்தில் பசவண்ணா என்பவரால் தொடங்கப்பட்ட பார்ப்பனரயல்லாதோர் இயக்கம் ‡ சாதி மறுப்பு இயக்கம் வீர சைவம் என்று வளர்ந்தது. ஆனால் காலப்போக்கில் அவ்வீர சைவம் தன்னுடைய முற்போக்குத் தன்மைகளை இழந்து ‘லிங்காயத்’ என்னும் ஒரு சாதியாக மாறிப் போனது. இன்னும் சொல்லப் போனால் இந்துத்துவத்துக்கு சேவை செய்யும் ஓர் ஆதிக்க சாதியாக வீரசைவ மரபு திசைமாறிப் போனது. இந்த வரலாற்று அவலத்தை அதே லிங்காயத் சாதியில் பிறந்த முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கல்புர்கி சுட்டிக்காட்டினார். இந்துத்துவம் ஆபத்தானது என்று விளக்கினார். மூட நம்பிக்கைகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்று பரப்புரை செய்தார். இவற்றையயல்லாம் இந்து மத வெறியர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ள முடியாத கோழைகள், அவரைச் சுட்டுக் கொன்று விட்டனர். இன்று வரை கொலையாளிகளை காவல்துறை கைது செய்யவில்லை. இந்நிகழ்வுக்கு பிறகு கர்நாடகத்திலேயே பகவான் என்ற முற்போக்கு எழுத்தாளர், இந்து மதவெறியர்களால் கொலை மிரட்டலுக்கு உள்ளாகி இருக்கிறார்.
கல்புர்கி படுகொலைக்கு முன்பே, மராட்டியத்தில் முற்போக்குச் சிந்தனையாளர் நரேந்திர தபோஸ்கர் இந்து மதவெறியர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியான கொடூரம் அதே மராட்டிய மாநிலத்திலேயே இடது சாரி சிந்தனையாளரும் தலைவருமான கோவிந்த பன்சாரே இந்து மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட கொடுமை. இந்த படுகொலைகளுக்குக் காரணமானவர்களை இன்னும் காவல்துறை தேடிக்கொண்டுதான் இருக்கிறது. நரேந்திர மோடி தரும் நல்லாட்சியின் இலட்சணம் இது. தமிழகத்தில் பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் எப்படி நெருக்கடிக்கு உள்ளானார் என்பது நாம் அறிந்ததே.
இப்படி முற்போக்குச் சிந்தனையாளர்கள் கொல்லப்படுவது இன்று நேற்றல்ல. காலங்காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இயேசு கிறிஸ்துவுக்கு நேர்ந்த சிலுவை மரணம்கூட இத்தகையதுதானே. நம் தமிழ்நாட்டில் நடந்த நந்தன் எதிர்ப்பும், வள்ளலார் மறைவும் ஆதிக்க சக்திகளின் படுகொலைகளே. முற்போக்காளர்கள் சிந்தித்து ஒன்று சேர வேண்டிய தருணம் இது. இத்தகைய கருத்துகள் ‡ இன்னும் பல வரலாற்று நிகழ்வுகள் ‡ தரவுகள் என ஆர்ப்பாட்ட உரைவீச்சுகள் அமைந்திருந்தன. இரவு வீடு திரும்புகையில் பல்கலைக்கழக வகுப்பறையில் இருந்து வெளியே வந்த உணர்வு. ஆர்ப்பாட்த்தின் தொடக்கத்தில் இருற்த அவநம்பிக்கை மறைந்து நம்பிக்கை ஒளி என்னுள் பரவியிருந்தது. அந்த நம்பிக்கையை உங்களோடு பகிர்ந்து கொண்ட மனநிறைவுடன் விடைபெறுகிறேன். மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்.
No comments:
Post a Comment