பணிவு என்னும் இனிய பாதை
6. அனைத்து பாவங்களுக்கும் அடிப்படை ஆணவமே
அருள்பணி. மகுழன்,
பூண்டி மாதா தியான மையம்.
என்னிடத்தில் ஆற்றுபடுத்துதல் செய்ய வருபவர்கள் அடிக்கடி சொல்லும் குறைகள்: ‘எனக்கு மிகவும் கோபம் வருகிறது. நான் அதிகமாக புறணி பேசுகிறேன்’ என்பார்கள். நான் அவர்களிடத்தில் சொல்வேன்: கவலைபடாதீர்கள். இவை இரண்டும் உங்கள் பாவங்கள் மட்டுமல்ல. மனித குலத்தின் பாவங்கள். நம் எல்லாருடைய பாவங்கள். இவற்றிற்கு உட்படாத ஆட்களே உலகில் இல்லை. ஆனால் ஒன்றை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை இரண்டிற்கும் அடிப்படை ஒன்று உண்டு. அதை அகற்றிவிட்டால் இந்த இரண்டு பாவங்களும் உங்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அகலும். அதுதான் ஆணவம் என்று சொல்வேன்.
ஆணவம் என்றால் என்ன? ஆணவத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அதன் பல்வேறு வடிவங்கள் வழியாகத்தான் அதனை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
1. ஆணவம் என்பது ‘என்னால் எல்லாம் முடியும் என்ற மனப்பான்மை: எனக்கு யார் உதவியும் தேவையில்லை, என் சூழ்நிலைகளைப் பற்றி என்னைவிட யாருக்கும் அதிகம் தெரியாது’ என்ற அதிரடியான உணர்வு.
2. ஆணவம் என்பது ‘நான் மிகவும் நல்லவன் என்ற எண்ணம்; நான் அவர்களைப் போல இல்லை, நான் எல்லாவற்றிலும் சரியானவன் என்ற தற்பெருமை.
3. ஆணவம் என்பது தற்பெருமை: ‘நான் செய்தவற்றை பாருங்கள். என்னைப் போல சிறப்பாக யாராலும் செயல்பட முடியாது என்ற பிடிவாதம்’.
4. ஆணவம் என்பது உயர்வு மனப்பான்மை: ‘நான் சொல்வது போல தான் மற்றவர்கள் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது’ என்ற திமிர்.
5. ஆணவம் என்பது மற்றவர்களை தாழ்வாக நினைப்பது : ‘நீ சொல்வதை நான் கேட்க வேண்டும் என்று எனக்குத் தேவையில்லை’.
6. இன்னும் ஆணவத்தின் சில வடிவங்கள் :
- பிடிவாதம்
- போட்டி மனப்பான்மை
- பொறாமை
- அடுத்தவர்களின் துன்பத்தில் மகிழ்ச்சி
- அடுத்தவர்களின் வெற்றியில் வருத்தம்
இந்த ஆணவம் எப்பொழுதும் வீழ்ச்சிக்கும், பாவத்திற்கும் நம்மை அழைத்துச் செல்லும் என்பதையும் நாம் உணரலாம்.
மீதூய்மையற்ற வாழ்வு : என்னுடைய இன்பம் மட்டுமே எனக்கு முக்கியம். அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.
மீவெறுப்பு : நான் உன்னைவிட சிறந்தவன். அதனால் நான் உன்னை வெறுப்பது சரியே.
- நன்றியின்மை : என் திறமையினால் அனைத்தும் எனக்குக் கிடைத்தன. நான் யாருக்கும் நன்றி சொல்லத் தேவையில்லை.
- பிரிவினை : நான் தனித்தீவாக வாழ்ந்து கொள்ள முடியும். ஒற்றுமை எனக்குத் தேவையில்லை.
- கீழ்ப்படிதலின்மை : நல்லது எது என்று எனக்குத் தெரியும். என்னைவிட யாருக்கும், எந்த மனத்திற்கும் நன்மை எது என்று தெரியாது.
உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லட்டுமா? மேற்சொன்ன ஆணவத்தின் பல வடிவங்கள் என்னிடத்தில் இருக்கின்றதே என்று கவலைப்படாதீர்கள். இந்த உலகத்தில் வாழும் அனைவரும் ஆணவம் என்ற கொடிய மிருகத்தின் கரங்களில்தான் இருக்கிறோம். இந்த ஆணவத்தின் கைவன்மையை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி பணிவை ஏற்கும்போது வாழ்வில் இனிமை பெருகும். (தொடரும்)
No comments:
Post a Comment