திருப்பலி விளக்கம்
9. வார்த்தை வழிபாடு
- அருள்பணி. எஸ். அருள்சாமி,
பெத்தானி இல்லம், கும்பகோணம்
முன்னுரை :
தொடக்கச் சடங்கு திருக்குழும மன்றாட்டோடு முடிவடைகிறது. அடுத்து வருவது ‘வார்த்தை வழிபாடு’ ஆகும். இதைப் பற்றி குறிப்பிடும்போது திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் பின்வருமாறு கூறுகிறது. “நம்பிக்கை கொண்டோருக்கு இறைவார்த்தைப் பந்தியில் இன்னும் மிக நிறைவாக உணவு வழங்கப்படவேண்டும். இதற்காக விவிலியத்தின் கருவூலங்களை இன்னும் தாராளமாகத் திறந்திடவும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள்ளாக விவிலியத்தின் முதன்மையான பகுதிகளை மக்களுக்கு வாசித்திடவும் வேண்டும்” (தி.வ.எண் 51).
அதைத் தொடர்ந்து உரோமை திருப்பலி நூலின் பொது படிப்பினையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது : “(விவிலிய) வாசகங்கள் வாயிலாக நம்பிக்கையாளருக்கு இறைவாக்கு விருந்து படைக்கப்படுகின்றது. விவிலியத்தின் கருவூலங்கள் அவர்களுக்குத் திறக்கப்படுகின்றன. விவிலிய வாசகங்களில் உள்ள அமைப்பு முறையைப் பின்பற்றுவது பெரிதும் நம்பத்தக்கது. ஏனெனில் அது இரு ஏற்பாடுகளின் ஒன்றிணைப்பையும் மீட்பின் வரலாற்றையும் தெளிவுப்படுத்துகின்றது. வாசகங்களும் பதிலுரைத் திருப்பாடலும் இறைவார்த்தையைக் கொண்டிருப்பதால், அவற்றிற்குப் பதிலாக விவிலியம் அல்லாத வேறு பாடங்களைப் பயன்படுத்தலாகாது”. (உ.தி.தூ.பொது படிப்பினை எண் 57. இனிமேல் றூணூயூனி ).
இந்த அறிவுறுத்தலையும், படிப்பினையையும் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது என இனி காண்போம்.
அருள் அடையாள கொண்டாட்டமும், இறைவாக்கும் :
திருப்பலியில் வார்த்தை வழிபாட்டை விளக்கும் முன் பொதுவாக அருள் அடையாளங்களைக் கொண்டாடுவதற்கு இறைவார்த்தை எவ்வாறு தேவைப்படுகிறது எனக் காண்போம்.
ஒவ்வொரு அருள் அடையாள கொண்டாட்டத்திற்கும் அடிப்படையாக அமைந்திருப்பது இறைவார்த்தை போதகமாகும். நற்செய்தி அறிவிப்பு இல்லாமல் திருமுழுக்கு அளிக்கப்பட்டதாகப் புதிய ஏற்பாட்டில் ஓர் இடத்தில் கூட நாம் காண முடியாது. ஏனெனில் இறைவார்த்தை பறைசாற்றப்படும்போதுதான் விசுவாசம் பிறக்கிறது. அதுவே அருள் அடையாளத்தைப் பெறும் சூழலை உருவாக்குகிறது. உயிர்த்த ஆண்டவர் தம் சீடர்களுக்குத் தோன்றி ‘உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்’..... (மாற்கு 16 : 15 ‡ 16) என்று கூறினார். இதிலிருந்து நற்செய்தி போதகம் விசுவாசத்திற்கு வழிகோலுகிறது என்றும், விசுவாசம் திருமுழுக்குக்கு இட்டுச் செல்கிறது என்றும்
அறியமுடிகிறது.
ஆக போதகம் ‡ விசுவாசம் ‡ அருள் அடையாளம் என்பது அடிப்படை அமைப்பு எனத் தெரிகிறது. அதாவது இறைவார்த்தையை அறிவித்து அது விளக்கப்படும்போது, அதைக் கேட்பவர்கள் அதை ஏற்று விசுவசிக்கிறார்கள். “ஆகவே அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்” (உரோ 10 : 17). அதன் பயனாக திருமுழுக்குப் பெறுகிறார்கள். இதற்கு எத்தியோப்பிய நிதி அமைச்சர் திருமுழுக்குப் பெற்றதை எடுத்துக்காட்டாக இங்கு குறிப்பிடலாம். (தி ப 8 : 35 - 38 காண்க). புனித பேதுரு தம் போதனைக்குப் பிறகு திருமுழுக்கு அளித்ததாக திருத்தூதர் பணிகளில் வாசிக்கிறோம் (திப 10 : 44 - 48 காண்க).
இதே போன்று இன்று ஒவ்வொரு அருள் அடையாளக் கொண்டாட்டத்திலும் இறைவார்த்தை வழிபாடு தேவையாக உள்ளது. ஏனென்றால் இறைமக்களின் விசுவாச சூழலில்தான் அருள் அடையாளம் கொண்டாடப்படுகிறது. இந்த விசுவாச சூழலை உருவாக்கிக் கொடுப்பது வார்த்தை வழிபாடாகும்.
வார்த்தை வழிபாடு - விசுவாசம் - அருள் அடையாள வழிபாடு
மேலே நாம் குறிப்பிட்டதிலிருந்து நற்செய்தி முழக்கமில்லாது அருள் அடையாளங்கள் இடம் பெற முடியாது எனத் தெரிகிறது. இங்கு நாம் சிந்திப்பது திருப்பலி கொண்டாட்டத்தில் முக்கிய பகுதியாகிய வார்த்தை வழிபாடு பற்றியது ஆகும். இந்த வார்த்தை வழிபாடு திடீரேன இரண்டாவது வத்திக்கான் சங்கத்திற்குப் பின் புகுத்தப்பட்ட ஒரு வழிபாடு அன்று. யூத மரபிலும், திருஅவையின் தொடக்கக் காலத்திலும் இது நடைமுறையில் இருந்ததாக நாம் அறிகிறோம்.
யூத மரபில் வார்த்தை வழிபாடு :
யூதர் தம் செபக்கூடங்களில் நடத்திய வழிபாடு இன்றைய வார்த்தை வழிபாட்டிற்கு முன்னோடியாக இருந்தது என்று சொல்லலாம். யூதர்களுக்குக் கோவில் ஒன்றுதான் இருந்தது. அது எருசலேம் தேவாலயமாகும். அங்கு பலி மட்டுமே ஒப்புக் கொடுக்கலாம். வாரத்தின் இறுதி நாளாகிய சாபாத் என்னும் சனிக்கிழமை தோறும் மக்கள் தங்கள் ஊர் மத்தியில் இருந்த செபக்கூடத்தில் கூடி வழிபாடு நடத்தினர். அந்த வழிபாட்டில் சில செபங்கள் சொல்லப்படும்; மக்கள் ‘ஆமென்’ என்று சொல்லி தங்கள் ஒப்புதலை வெளிப்படுத்துவர். பின் விவிலியத்திலிருந்து வாசகங்கள் இடம்பெறும். இந்த வாசகங்கள் தோரா எனப்படும் சட்ட நூலிலிருந்து ஒன்றும், இறைவாக்கினர் நூலிலிருந்து மற்றொன்றுமாக அமைந்திருக்கும். இவ்விரு வாசகங்களுக்கிடையில் திருப்பாடல்களைப் பாடுவர். அதன்பின் அங்கு கூடியுள்ளவர்களில் பெரியவர் அல்லது தனிச் சிறப்புடையவர் வாசகங்கள் பற்றிய விளக்கத்தைக் கொடுப்பார். இறுதியாக நீண்ட செபத்துடன் செபக்கூட வழிபாடு முடிவடையும்.
இதே போன்ற வழிபாட்டு முறை புதிய ஏற்பாட்டிலும் நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவே தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத் செபக்கூடத்தில் எழுந்து வாசகங்களுக்கு விளக்கம் அளித்தார் என்று லூக்கா நற்செய்தியில் வாசிக்கிறோம் (4 : 16 ‡ 23 காண்க). அதோடு திருத்தூதர் பணிகளில் திருச்சட்டமும் இறைவாக்குகளும் வாசித்துப்பின் மக்களுக்கு அறிவுரை கூற புனித பவுலை செபக்கூடத்தலைவர் அழைப்பதைக் காண்கிறோம் (தி ப 13 : 14 ‡ 16).
இத்தகைய யூத மரபு இன்றைய இறைவாக்கு வழிபாட்டிற்கு ஏவுதலாக இருந்தது என்பதில் ஐயமே கிடையாது.
திருஅவையின் தொடக்கக் காலம் :
தொடக்ககால திருஅவையில் முதல் கிறிஸ்தவர்கள் யூதர்களாக இருந்ததால் செபக்கூட வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்தனர். அதற்குத் தடை ஏற்பட்டபோது வீடுகளில் அப்பம் பிட்கக் கூடினபோது அதற்குத் தயாரிப்பாக வாசகங்களை வாசித்து இறைவாக்கு வழிபாட்டை நடத்திய பின்பே நற்கருணை விருந்து உண்டனர். இவ்வாறு தங்களுக்குப் பழக்கப்பட்ட சடங்குமுறையைக் கிறிஸ்தவக் கொண்டாட்டத்தில் சேர்த்துக் கொண்டனர்.
நாளடைவில், பழைய ஏற்பாட்டு வாசகங்களோடு புனித பவுல் தங்களுக்கும் மற்றும் தங்களுக்கு அருகாமையில் இருந்த வேறு திருஅவைக்கும் எழுதியனுப்பிய மடல்களையும் வாசிக்கத் தொடங்கினர். திருத்தூதர்களின் போதனைகள் எழுத்து வடிவம் பெற்று நற்செய்தி நூல்களாக வந்தபோது அவற்றிலிருந்தும் ஆண்டவருடைய வாழ்க்கை வரலாறும் போதனைகளும் வாசிக்கப்பட்டன.
இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக்கு முன்பே இப்பழக்கம் நிலையாகிவிட்டது. அக்காலம் முதல் இறைவாக்கு வழிபாடு நற்கருணை வழிபாட்டுடன் இணைந்தே வந்துள்ளது.
இரண்டாவது வத்திக்கான் சங்கத்திற்கு வார்த்தை வழிபாடு :
தொடக்க கால திருஅவையில் கடைபிடிக்கப்பட்ட வழிமுறைகள் நாளடைவில் தளர்வுற ஆரம்பித்தன. மக்கள் பேசும் கிரேக்க மொழியில் கொண்டாடப்பட்ட வழிபாடு 4‡ஆம் நூற்றாண்டு முதல் இலத்தீன் மொழியில் கொண்டாடப்பட்டது. அதனால் இறைவாக்கு வழிபாடும் இலத்தீன் மொழியிலேயே கொண்டாடப்பட்டது. எல்லா மக்களாலும் இறைவாத்தையைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
மேலும் விவிலியத்தின் எல்லா பகுதிகளும் இறைவாக்கு வழிபாட்டில் இடம் பெறவில்லை. சில பகுதிகளே வாசிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக இறைவாக்கு வழிபாட்டின் முதல் வாசகம் புதிய ஏற்பாட்டு திருமுகங்களிலிருந்து வாசிக்கப்பட்டது. அதனால் இது ‘நிருபம்’ வாசகம் என்று அழைக்கப்பட்டது. இது பெரும்பாலும் புனித பவுல் எழுதிய திருமுகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இதற்கு விதிவிலக்காக திருவருகைக் காலத்திலும், தவக்காலத்திலும் மட்டும் பழைய ஏற்பாட்டிலிருந்து சில பகுதிகள் வாசிக்கப்பட்டன.
மற்றும் வார நாட்களின் திருப்பலி கொண்டாட்டங்களுக்குத் தனிவாசகம் கிடையாது. ஞாயிற்றுக்கிழமை வாசிக்கப்பட்ட அதே வாசகங்கள் அடுத்து வந்த வார நாட்களிலும் வாசிக்கப்பட்டன. அதனால் விவிலியத்தின் எல்லா பகுதிகளையும் கேட்கும் வாய்ப்பு மக்களுக்கு இல்லாமல் போனது.
இத்தகைய தளர்ச்சி திருஅவையின் இடைக்காலங்களில், அதாவது ஏழாம் நூற்றாண்டிற்குப் பின் ஏற்பட்டு இரண்டாவது வத்திக்கான் சங்கத்தில் கொணரப்பட்ட மறுமலர்ச்சி வரை நீடித்திருந்தது.
திருவழிபாட்டில் மறுமலர்ச்சி :
இரண்டாவது வத்திக்கான் சங்கம் கொண்டுவந்த மறுமலர்ச்சியை நாம் இறைவாக்கு வழிபாட்டிலும் காண முடிகிறது.
வழிபாட்டை அந்தந்த மக்களின் மொழிகளில் கொண்டாட வாய்ப்பளிக்கப்பட்டதால், திருவழிபாட்டில் பறைசாற்றப்படும் இறைவார்த்தையை மக்கள் தத்தம் மொழிகளில் கேட்டு புரிந்துக்கொள்ள முடிகிறது.
திருவழிபாட்டு கொண்டாட்டங்களில் இடம் பெறும் விவிலிய வாசகங்கள் அதிகமாகவும் பல்வகையாய் வேறுபட்டனவாகவும், பொருத்தமானவையாகவும் (தி. வ 35 / 1 காண்க) இருப்பதால் விவிலியத்தின் கருவூலங்கள் இன்னும் தாராளமாகத் திறந்து விடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஆண்டு காலத்துக்குள் முக்கியமான பகுதிகள் எல்லாம் மக்களுக்கு வாசிக்கப்படுகின்றன (தி வ 51 காண்க). மேலும் பதிலுரை பாடல்கள் திருப்பாடல்களிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதால் விவிலிய வார்த்தைகளிலேயே செபிக்க மக்களுக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது. மறையுரை, அதாவது பறைசாற்றப்பட்ட வாசகங்களின் விளக்கம், இறைவார்த்தை வழிபாட்டின் ஒருபகுதியாக கருதப்பட்டு இடம்பெறுவதால், நற்கருணை உணவை உண்ணும்முன், மக்கள் இறைவாக்கு விருந்தில் அமர்ந்து ஊட்டம் பெற்று ஆன்ம வளம் அடைய முடிகிறது. அந்த வளமையோடு நற்கருணை விருந்தில் பங்குபெற தகுதி கிடைக்கிறது.
முடிவுரை :
இவ்வாறாக இறைமக்கள் விவிலியத்தை மென்மேலும் அறிய புதுப்பிக்கப்பட்டுள்ள வார்த்தை வழிபாடு வாய்ப்பளிக்கின்றது. இந்த வார்த்தை வழிபாட்டின் அமைப்பு முறையை அடுத்து வரும் சிந்தனையில் காண்போம் (தொடரும்)
No comments:
Post a Comment