தமிழ் இலக்கியத்தில் ஆரோக்கிய அருமருந்து
- அருள்சகோ. விமலி fihm,
இதயா மகளிர் கல்லூரி, குடந்தை
நமது ஆரோக்கிய அன்னை தனக்கு அறிவிக்கப்பட்ட கடவுளின் திருஉளத்தை முழுமன சுதந்திரத்தோடு ஏற்று தன்னை முழுமையாக அர்ப்பணித்தாள். அன்னை மரியாள் தன் வாழ்வில் சுதந்திரத்தை வாழந்துக்காட்டினார். மரியாள் தனது அகசுதந்திரத்தை பயன்படுத்தி ஆண்டவரின் குரலுக்கு “ஆகட்டும்” என்றார். நாமும் நாம் பெற்றிருக்கின்ற புறசுதந்திரத்தை அகசுதந்திரத்தோடு வாழ்ந்தோம் என்றால் நாமும் மகிழ்ச்சியாக இருப்போம், பிறரையும் மகிழ்ச்சியாக வாழ வைப்போம். நமது நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்து, போராடிய மாபெரும் தலைவர்கள் எல்லாம் முழுமன சுதந்திரத்தோடு, துன்புறும் வாழ்வை தேர்ந்து கொண்ட, தாய் நாட்டின் விசுவாசிகள் அல்லவா? நாட்டு மக்களை நேசித்த தியாகிகள் அல்லவா? அன்றைய தலைவர்கள் சுதந்திர கானமாக “அன்னியனே வெளியேறு” என்பதை தேசிய சிந்தனையாக வெளியிட்டு, மக்கள் மனங்களை நிரப்பியதால்தான், அடிமைகளாய் இருந்த போதே சுதந்திர கீதம் பாடினார்கள், ஆடினார்கள்
இன்றோ ஆளுகின்றவர்கள், தம்மை தேசியவாதிகள் என்று கூறிக் கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்காக என்று சொல்லிக் கொண்டு ”அன்னியர்களே வாருங்கள் எங்கள் நாட்டின் வளங்களை, பொருளாதாரத்தை கொள்ளையடியுங்கள்” என்று கூவிக்கூவி அழைக்கிறார்கள். இதுதான் இவர்கள் பெற்ற சுதந்திரமோ? ஆதலால்தான் இந்திய தேசத்தின் சிறுபான்மை இனங்களை வெளியேறுங்கள் என்று கூப்பாடு போடுகிறார்களோ? எந்த வழியில் பயணமாகிறது நாம் பெற்ற சுதந்திரம்? இதே போன்றுதான் நமது மருத்துவமும் நமது மொழியும்.
“செம்மொழி” என்னும் சிறப்பினைப் பெற்றுச் செம்மாந்து நிற்கின்றது நம் தமிழ்மொழி. கலை, நாகரீகம், கல்விநிலை, இலக்கியச் சுவையுணர்வு, பிறமொழிச் செல்வாக்கு, செங்கோண்மை அடிப்படையில் அருமையுற அமைந்த மனித உடலைப் பேணிக்காத்திடும் அறிவுரைகளையும், மருத்துவத்தையும் தம்முள் தாங்கி நிற்கின்றது நமது தமிழ் மருத்துவம்.
மருத்துவத் தமிழ் :
தமிழ் இலக்கிய மருத்துவத்துவத்தின் தந்தையயன போற்றத்தக்கவர் திருமூலர். உலகம் வியக்கும் வண்ணம் அரிய மருத்துவ முறைகளைப் பண்டையத் தமிழர்கள் அனுபவத்தின் பயனாக உலகிற்கு அளித்து உள்ளனர். சித்தர்களின் உயரிய மருத்துவப் பாடல்கள், நான்காம் தமிழாக உருவெடுக்கிறது. இவ்விலக்கியங்களை ஆராய்ந்தால் இன்று குணப்படுத்த முடியா பல நோய்களுக்கு சரியான மருத்துவ முறைகளைக் கண்டு அறியலாம்.
மருத்துவ முறையின் கூறுகள் :
மருத்துவ முறையின் கூறுகளை வகுத்துக் கூறுகின்றார் வள்ளுவர்.
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” (948)
என்ற குறளில் மருத்துவர் நோயாளிக்கு கண்டிருக்கும் நோயை அதன் குறிகளால் இன்னது என்று ஆராய்ந்து, பின்பு அந்நோய் வந்த காரணத்தை ஆராய்ந்து, அந்நோயைத் தீர்க்கும் உபாயத்தை ஆராய்ந்து மருத்துவம் செய்தல் வேண்டும் என்கிறார்.
“பயன் மரம் உள்ளுர் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்”
மருந்து மரமானது காற்று நிழல், கொழுந்து, தளிர் இலை, அரும்பு, போதமலர், பிஞ்சு, காய்கள், பட்டை, பால் விழுது, வேர், நரம்பு, காம்பு, சருகு, கொட்டை, நரம்பு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுன்றது. மருந்துகள் மனிதனுக்கும் உச்சி முதல் உள்ளங்கால் வரை நோயைப் போக்கி நல்வாழ்வு வாழ பயன்படுகின்றன. மருந்தால் நோய் தீருமென்பதையும், சில நோய்கள் தீராதென்பதையும் இன்ன நோய்க்கு இன்ன மருந்து பயனளிக்கும் என்பதையும் புறநானூறு தெளிவாகக் கூறுகிறது
.
“பசிப்பிணி மருத்தவ னில்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமி னெமக்கே” (புறம் 173)
இயற்கை முறையில் நோய்களைத் தீர்ப்பதில், பூமி, நீர், தீ, காற்று போன்ற பொருள்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நவீன வைத்தியத்தில் நோய் அறிகுறிகளைக் கண்டறிந்து நோயைக் குணப்படுத்துகிறோம். அதனால் உண்மையான காரணம் என்ன என்பதை முழுவதும் கண்டறிவதில்லை. கொடுக்கப்படும் பக்க விளைவுகளால் உடல் மேலும் பாதிக்கப்படுகிறது. உட்கொள்ளும் மருந்துகளும், பசியின்மையை ஏற்படுத்துகின்றன. சீரணத் தன்மையும்குறைகின்றன. அந்த மருந்துகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் உடல் பலவீனமடைந்து விடுகிறது. ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறும் சக்தி மருந்துகளில் இல்லை. இயற்கையில்தான் உள்ளது என்ற கருத்தினை நற்றிணை பாடல் உணர்த்தியுள்ளது.
மருந்துகளின் தந்தையாகிய ஹிப்போகிராட்ஸ் “நோயைக் குணப்படுத்துவது இயற்கைதான். வைத்தியன் அல்லன்” என்கிறார். பண்டைய காலத்தில் போர் வீரர்கள் மேனியில் பட்ட வெட்டுக் காயத்துக்குத் தும்பைச் சாற்றை மருந்தாகப் பயன்படுத்தியுள்ளனர். செல்வக் கடுங்கோ வாழியாதன் போர்ப் பாசறையில் அம்புபட்ட புண்ணுக்கு மருந்தாக சந்தனம் பூசி இருந்த செய்தியை கபிலரின் பாடலில் காண முடிகிறது.
“உண்டிமெய் யோர்க்கு உறுபிணி எளிது”
என்ற வரிகள், அளவுக்கு அதிகமான உணவு வகைகளை உண்பவர்களுக்கு அளவற்ற நோய்கள் உண்டாவது எளிது.
தேம்பாவணியில் வீரமாமுனிவர் மூலிகைகளையும், பச்சிலைகளையும், வேர்களையும் மருந்தாகப் பயன்படுத்தும் உத்தியை கூறியுள்ளார். “பெளத்தம்” அம்புபட்ட அன்னப் பறவைக்கு புத்தர் பச்சிலைச் சாறு எடுத்து மருத்துவம் செய்துள்ளார். வள்ளற்பெருமான் அவர்கள் 135 ஆண்டுகளுக்கு முன்பே 485 வகையான மூலிகைகளையும் அவற்றின் மருத்துவ குணங்களையும் அட்டவணையிட்டு எழுதி வைத்துள்ளார்.
பச்சிலைகளில் எளிதில் கிடைக்கக் கூடிய கரிசலாங்கண்ணி, பொற்றாலைகையாந்தரை, தூதுவளை, புளயாரை, பொன்னாங்கண்ணி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு வள்ளற் பெருமான் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
கரிசலை - பாண்டுமர்த்ததனி ‡-என்கிறார்.
தினமும் கரிசலாங்கண்ணி இலையை பச்சையாகவோ, சமைத்தோ சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி உண்டாகி சோகை நோய் வராது.
“சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல்தவம் ....
ஆற்றிலே கரைத்த புளி என்போம்”
என வள்ளலார் அறுதியிட்டுச் சொல்கிறார். பசித்தபின்பு உண்ண வேண்டும். ஒரு பிடி குறைவாகவே சாப்பிடுவது ஆரோக்கியம். வயிற்றில் அரை பங்கு உணவு, கால்பங்கு தண்ணீர் கால்பங்கு வெற்றிடம் இருக்கும்படி உண்ணப் பழக வேண்டும்.
முதன்மையாக மருத்துவக் கண்ணோட்டத்தில் நமது முன்னோர் உணவின் சுவையினை ஆறுவகைகளாகப் பயன்படுத்தினர். ஒரே நேரத்தில் ஆறுவகைச்சுவை உணவையும் வயிறுபுடைக்க உண்ண வேண்டும் என்பது கருத்தல்ல. உடலின் நலனறிந்து ஆறுவகைச் சுவையினையும் பயன்படுத்தினால் உடல் நோயனுகாத இயல்பு புகுந்த முழுமையான ஆரோக்கியத்தை பெற முடியும் என்பது நமது முன்னோர்களின் சிந்தனையாக இருந்தது.
உடலின் அடிப்படையான ஆறு தாதுக்கள் என்பன இரத்தம், எலும்பு, தசைக்கொழுப்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஆறும் அடிப்படையான தாதுக்கள். மூளை என்பது உடலின் மற்ற தாதுக்களை ஆட்டிப்படைக்கும் தன்மை பெற்றிருப்பதால் அதை தலைமைத்தாது என்று பிரித்து விட்டால் மிச்சமிருப்பவை ஆறு தாதுக்களாகும். இந்த ஆறு தாதுக்கள் தான் ஆறு ஆதாரங்கள் எனப்படும்.
இவ்வாதாரங்கள் அரவே இல்லாது, ஆக்கும், அழிவு வேலைகள் அதிகமாக அரங்கேறுகின்றது. நம் நாட்டில் அதன் வெளிப்பாடுதான், இன்று, இந்தியாவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன வாருங்கள் என அன்னிய (மருந்து)களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் நபர்களாக நமது தலைவர்கள் இருக்கின்றார்கள். இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்ற 69‡ஆம் ஆண்டு இது. நாட்டு விடுதலைக்காக செய்யப்பட்ட தியாகங்களை நினைத்துப் பார்ப்பதும் தியாகிகளைப் போற்றுவதும் பொருத்தமானவையே. சுதந்திர இந்தியாவின் முதல் கொடியை ஏற்றிய ஜவஹர்லால் நேரு அந்த நடுநிசியின் புதிய விடியல் பற்றிக் குறிப்பிடும்போது, அது விதியை நாம் நேருக்கு நேர் சந்திக்கும் தருணம் என்றார். விதியையே எதிர்த்து நின்று வரலாறு படைப்போம் என்னும் நம்பிக்கை அவரது உரையில் இருந்தது. எனவே தமிழர்களின் வியத்தகு மருத்துவ முறையினை முறையாக ஆராய்ந்து சரியான மருத்துவ தன்மையினை முழுமையாக உலகிற்கு வெளிப்படுத்த வேண்டியது நம் கடமையாகும்.
அவநம்பிக்கையின் அச்சம் தவிர்க்கும் மருந்தான
நம்பிக்கையின் உச்சம் தொடுவோம்!
No comments:
Post a Comment