பொதுக்காலம் 30ஆம் வாரம் 23 - 10 - 2016
‘தற்பெருமை சோகத்தையே வருவிக்கும்’ என்கிறார் எமிலி பிரோன்த்.
‘ஒருவரின் அழிவுக்கு முன்னால் வருவது அகந்தை’ என்கிறது ஸ்பெயின் பழமொழி.
இன்றைய இறைவாக்குகள், அகந்தை இறைவனுக்கு ஏற்ற பண்பு அல்ல என்றும், பணிவு இறைவன்முன் இனிய பண்பு என்ற கருத்துக்களை கூறுகின்றன.
நற்செய்தியில், தங்களை நேர்மையாளர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்குபவர்களைப் பற்றி விளக்க ஓர் உவமையைக் கூறுகிறார்.
பரிசேயர், வரிதண்டுபவர் இவர்களின் அகந்தை ‡ பணிவு என்ற பண்புகளை வேறுபடுத்திக் காண்பிக்கிறார். பரிசேயர் தன்னை உயர்த்தி அடுத்தவரை தாழ்த்திப் பார்க்கிறார். வரிதண்டுபவர் தன் தாழ்நிலையை நினைத்து வருந்துகிறார். தன்னையே தாழ்த்திக் கொண்ட வரிதண்டுபவர்தான் இறைவனுக்கு ஏற்புடையவராக வீடு திரும்பினார் என்று இயேசு தீர்ப்புக் கூறகிறார். முதல் வாசகத்தில், ‘தங்களை தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்’ என்று சீராக்கின் ஞானம் எடுத்துக் கூறுகிறது. முகட்டில் தண்ணீர் நிற்பதில்லை. பள்ளத்தில்தான் தண்ணீர் தங்குகிறது.
பெருமையை எல்லா மனிதரும் தேடுகின்றனர். மற்றவர்கள் தங்களைப் பற்றி பெருமையாகக் கூறும்போது மனதில் ஒரு திருப்தி உண்டாகிறது. நாம் பெற்றிருக்கின்ற நன்மைகளுக்காக மகிழ்ச்சியடைவது நல்லதுதான். ஆனால் நம்மிடம் இல்லாத நன்மைகளை நம்மிடம் இருப்பதாக பெருமையடித்துக் கொள்வதுதான் தங்களையே ஏமாற்றிக் கொள்ளும் செயல். அதிலும் மற்றவர்களைக் குறைத்து நம்மை உயர்த்தி பேசுவது காற்றால் நிரப்பப்பட்ட பலுனை போன்றதாகும். எனவேதான் யூத பழமொழி, ‘தற்பெருமை அகந்தையுடள் விருந்துண்ணும், ஆனால் கடைசியில் ஏழ்மையின் பசியில் துன்புறும்’ என்கிறது.
வள்ளுவரும்,
‘அமைந்தாங்கு ஒமுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்’ (குறுள் 474)
என்கிறார். ‘அளவறியான்’, ‘தன்னை வியந்தான்’ என்று கூறுகிறார்.
நெல் முதிர்ச்சி அடையும்போது அப்படியே பணிகிறது. அதே போல ஞானம், அனபவம் வளர வளர பணிவு வளர்கிறது. பதரானது நிமிர்ந்து நிற்கிறது. குறைகுடம் ததும்புகிறது. பணிவது, அவமானத்தை தாங்குவது போல. இருவர் காதல் திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால் பெண்ணின் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. மாப்பிள்ளை வீட்டிலும் ஏற்று கொள்ளவில்லை. வீட்டை விட்டு விரட்டி விட்டனர். ஆனால் தனியாக சென்று வாழ்வில் மிகவும் வசதியாக வாழ்ந்தனர். இடையில் பெண்ணின் பெற்றோர், அவர்களுடைய மகன்களால் கைவிடப்பட்டார். முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். இதனை கேள்விப்பட்ட பெண், பெற்றோர்களால் துரத்தியடிக்கப்பட்டவள், முதியோர் இல்லத்திற்கு சென்று தன் பெற்றோர்களை அழைத்து வந்து காப்பாற்றுகிறாள். முதியோர் இல்லத்திற்கு மகள் சென்றபோது அம்மா கட்டிப்பிடித்துக் கொண்டு, ‘மன்னித்துவிடு, நான் உன்னை அவமானப்படுத்தி விட்டேன்’ என்றாள்.
இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், தன் வாழ்வின் நிறைவைப் பற்றி பேசுகிறார். உலகத்தை விட்டு பிரியபோகுமுன் நேரம் வந்துவிட்டது. என் வாழ்க்கை போராட்டத்தில் வெற்றி பெற்று விட்டேன் என்கிறார்.
“பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து”
என்கிறார் வள்ளுவர். பணிவு விண்ணகத்தின் பண்பு. தற்பெருமை வெறுமையின் முக்காடு.
No comments:
Post a Comment