பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு 25-09-2016
ஆமோ 6 : 1, 3 - 7; 1 திமொ 6 : 11 - 16; 16 : 19 - 31
‘ஆர்வம் என்பது ஒருவரை வாழவைக்கும் வல்லமையில் பாதிபாகம். அலட்சியம் என்பது ஒருவரை சாகவைக்கும் அழிவு சக்தியில் பாதிபாகம்’ என்கிறார் காலில் ஜிப்ரான் என்பவர். ‘அன்பு என்ற பண்பின் எதிர்பதம், வெறுப்பு அல்ல. மாறாக அலட்சியம்’ (ணூஐdஷ்க்ஷூக்ஷூereஐஉe) என்கிறார் கிறிஸ்டோபர் பைக் என்பவர். சொல்லாமல் செய்வர் பெரியர் என்பது வள்ளுவரின் வாக்கு. தேடிச்சென்று, குறிப்பறிந்துஅன்பு செய்ய வேண்டும். இதனைத்தான் இன்றைய நற்செய்தி பகுதி நமக்கு வாழ்வின் செய்தியாகத் தருகிறது. செல்வந்தன் சொகுசாக வாழ்கிறான். ஏழை லாசர் வறுமையிலும், நோயிலும் ஒரு நாயோடு நாயாக வாழ்கிறான். செல்வந்தர் எந்த தீய செயலையும் செய்ததாகக் கூறப்படவில்லை. ஏழை லாசரும் சிறந்தவனாகச் சித்தரிக்கப்படவில்லை. ஆனால் இருவரும் இறந்ததும், நிலை தலைகீழாக மாறுகிறது.
ஏழை லாசர் ஆபிரகாமின் மடியில் தவழ்கிறான். செல்வந்தன் வறுக்கும் நெருப்பில் துடிக்கிறான். செல்வந்தன், லாசரின் உதவியை நாடுகிறான். வறண்ட நாவிற்கு ஒரு சொட்டு நீராவது கொடுக்கும்படி கெஞ்சுகிறான். லாசருக்கும், செல்வந்தனுக்கும் இப்போது பிளவுபட்ட நிலை. இந்த பிளவுபட்ட நிலை செல்வந்தனின் அலட்சியத்தால் (ணூஐdஷ்க்ஷூக்ஷூereஐஉe) ஏற்பட்டது. விவிலியத்தில் ஏழைகள் கவனிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது (லேவி 25 : 35). ஆனால் அவனாகவே கவனித்து ஏழைகளோடு பகிர்ந்து கொள்ள முன்வரவில்லை. அதுதான் அவன் செய்த தவறு. லூக்காவின் மலைப்பொழிவில், “ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர்” என்பதும் (லூக் 6 : 20), ‘செல்வர்களே, ஐயோ உங்களுக்குக் கேடு’ என்பதும் (லூக் 6 : 24) இந்த செல்வந்தன் ‡ லாசர் உவமையில் உயிர்பெறுகிறது.
முதல் வாசகத்தில், ஆமோஸ், செல்வந்தரின் உல்லாச வாழ்வை மிகவும் கண்டித்துப் பேசுகிறார். தந்தத்திலான கட்டில், பஞ்சனை, இசைப்பின்னணியில் சுவையான விருந்து. இவ்வாறு ஆடம்பரத்துடன் வாழ்பவர்க்கு இறைவனின் ஆசீர் கிடைக்காது (ஐயோ கேடு) என்கிறார்.
இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், ‘கடவுளின் மனிதனாகிய நீ, பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு’ என்று திமொத்தேயுவுக்கு அறிவுரைக் கூறுகிறார். பொருள் ஆசை, ஆடம்பர வாழ்வு அனைவரையும் காந்தமாக பற்றி இழுக்கிறது. ஆனால் பொருள் நடுவில் இருள் மறைந்திருப்பதை மனிதர் உணர்வதில்லை. பொருளை சேர்த்தவர் பேராசைக்கும், வெற்று பெருமைக்கும் ஆளாகி மனிதத்தின் நிறைவை பெறாமல் போவதைப் பார்க்கிறோம். ஓர் ஆசிரியர் நல்ல வசதியானவர். எப்படியோ குடும்பம் நொடித்துவிட்டது. தன்னிடம் கல்வி கற்ற மாணவரிடம் சென்று அடிக்கடி உதவி கேட்பார். ‘போய்யா, தொந்தரவு செய்யாதே’ என்று பழைய மாணவர் விரட்டுவார். ஆனால் ஒரு குடும்பத்தில், ஒருவர் இராணுவத்தில் வேலை செய்கிறார், மற்றவர் ஆசிரியர், எல்லோருக்கும் பெரியவர், விவசாயி. தம்பிகள் வாங்கும் சம்ளத்தை அண்ணணிடம் கொடுத்து, அவர் வரவு ‡ செலவு செய்வார். ஒன்றித்த ஒப்புரவான குடும்பமாக அது வளர்ந்தது. ஒளவையார் பகிராத செல்வத்தினால் வரும் தீமைகளை அழகாக சொல்கிறார்.
நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம், பேய்க்காம், பரத்தையர்க்காம் - வம்புக்காம்
கொள்ளைக்காம், கள்ளுக்காம், கோவுக்காம், சாவுக்காம்
கள்ளர்க்காம், தீக்காய் காண்
(பம்புக்காய் = ஆரவாரத்திற்கு)
முன்வந்து பகிர்வோம், இறைவன் பின் நின்று வாழ்த்துவார்.
No comments:
Post a Comment