மூன்று உறவுகள்
ஒருமுறை காவல் நிலையத்திற்கு சென்றிருந்தேன். தலைமைக் காவலர் என்னிடம் பகிர்ந்துக் கொண்டார். ‘அலை அலையாக இங்க வருகிறாங்க சார்’ என்றார். ஊர்களில் அவ்வளவு கருத்து வேறுபாடுகள், சண்டைகள், குழப்பங்கள். இப்போது மருத்துவமனைகளிலும் அதே நிலைதான் என்று சொல்லலாம். அலைமோதுகின்ற மக்கள் கூட்டம். மருத்துவமனைகள் வணிகக் கூடங்களைப் போல் ஆகிவிட்டன. ஒரு சிரிப்பு எழுதியிருந்தார்கள். ஒரு டாக்டர், தன் மருத்துவமனையில் வட்டிக்கடையும் வைத்திருந்தார். ஏனென்று கேட்டதற்கு, பணமில்லாதவர்கள் உடனடியாக அடகுவைத்து பணம் பெறுவதற்குதாதன் இந்த வழி என்றாராம்.
‘வலிமை வாய்ந்த தலை ஒருபோதும் வலிக்காது’ என்பது ஒருபழமொழி. ‘உடல் நலமும் உற்சாகமும் ஒன்றை ஒன்று பெற்று தரும்’ என்பது மற்றொரு பழமொழி. செப்டம்பர் மாதத்தில் நம் கண்முன் நிற்பது செப்டம்பர் 8இல் கொண்டாடப்படும் ஆரோக்கிய மாதா திருவிழா. நோய்களிலிருந்து விடுதலைப் பெற்று பூரண உடல் நலத்துடன் வாழ மாதாவின் துணையை வேண்டி மக்கள் அலை அலையாக வேளை நகர் நோக்கி செல்கிறார்கள்.
இறைவனின் உதவியை, நலனுக்காக தேடுகின்ற வேளையில், நலன் உண்டாக நம்மால் முடிந்தவைகளையும் செய்ய வேண்டும். உணவு, உடற்பயிற்சி, உற்சாகம் ஆகிய மூன்று உறவுகளை வளப்படுத்தினால் உடல்நலம் பலமாக நமக்குக் கிடைக்கும். வள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் பத்து பாடல்களில் ஆறுபாடல்களில் உணவு அருந்துதல் பற்றி கூறுகிறார்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி கூணின் (குறள் 242).
முன்னால் உண்டது செரித்த பிறகு மீண்டும் உண்டால் மருந்து மாத்திரை தேவையில்லை என்கிறார். பசிக்காக உண்பதை விட ருசிக்காக சாப்பிடுவது பெருகி வருகிறது. இதனால் உடல்பருமன் பெருத்து வாழ்பவர்கள் பெருகி வருகிறார்கள். அமெரிக்க, சீனாவை அடுத்து அதிக உடல்பருமன் உள்ளவர்கள் இந்தியாவில் பெருகி வருகிறார்கள் என்கிறது கணக்கெடுப்பு.
‘அளவின்றி உண்டு குடிப்பதில் களி கூரா¼த் இதனால் ஏற்படும் செலவு உன்னை ஏழையாக மாற்றிவிடும்’ என்கிறது சீராக் ஞானம் 18 : 32. ஆண்களில் ஐந்துக்கு ஒருவரும், பெண்களில் ஏழிற்கு ஒருவரும் இந்தியாவில் அதிக உடல் பருமனாக விளங்குகிறார்கள் என்கிறது கணக்கெடுப்பு. உணவு ருசிக்காக செய்யப்படும்போது தேவையில்லாத இரசாயன பொருள்களை சேர்க்கிறார்கள். அதிர்ச்சி தரும் ஒரு தகவலை அண்மையில் படித்தேன். பாக்கட் பால் நிறையவே கிடைக்கிறது. ஆனால் பாக்கட் பாலில் 20 அல்லது 30 சதவிகிதம் தான் உண்மையான பால். மற்றவை 50 சதவிகிதம் சோயா பால், ஸ்டார்ச், டிட்டர்ஜன்ட், சோடியம் ஹைட்ராக்சைடு, கொஞ்சம் யூரியா இப்படியாக மாடு வளர்ப்பு குறைந்த காலத்தில் பாக்கட் பால் கொடி கட்டி பறக்கிறது.
உடற்பயிற்சிக்காக, யோகா, ஜிம் என்றெல்லாம் செல்கிறார்கள். ஆனால் வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், விவசாயம் ஆகியவை பயிற்சிகளை தரும். அவைகளை மதிப்பு குறைவானதாக ஒதுக்கி வைக்கிறோம். மண்வெட்டி, களைகொத்தி ஆகியவைகளை கையில் எடுத்தால் தாழ்ந்த நிலையினர் என்று கருதுகிறோம்.
நல்ல உணவும், உடற்பயிற்சியும் சேர்ந்தால் நல்ல உடல்நலம் பிறந்து, உற்சாகத்தில் வளர்வோம். அண்மையில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. இந்தியா இரண்டு பதக்கங்களை போராடி பெற்றிருக்கிறது. இந்த இரண்டு பதக்கங்களும், பெண்கள் பெற்றிருக்கிறார்கள். சிங்கமான ஆண்கள் தலையில் துண்டுபோட வேண்டியதாயிற்று. செழுமையான மரம்தான் நிறைய கனிகள் தரும். வளமில்லா மரம் கனிதர வாய்ப்பில்லை. விளையாட்டுத் துறையில், மற்ற துறைகளில் உள்ளது போலவே கொடுமையான ஊழல் ஊஞ்சலாடுகிறது. சரியான நபர்களை இளமையிலேயே தேர்வு செய்வதில்லை. முறையான பயிற்சி இல்லை. பள்ளிகளிலும், கிராமங்களிலும் விளையாட தேவையான விளையாட்டு திடல்கள் இல்லை.
நார்மன் கசின் என்பவர் கூறுகிறார், ஒவ்வொருவரும் தனக்குரிய மருத்துவரை தங்களுக்குள்ளேயே வைத்திருக்கின்றனர் என்கிறார்.
அன்னை மரியாவின் பிறப்பு சூரியனுக்கு முன் வரும் விடிவெள்ளியைப் போல. தீமைகளைப் போக்கி நன்மைகளை உலகில் உதிக்க செய்யும் வழியைக் காட்டினார் இயேசு. அந்த வழியின் முன்னோட்டமான மரியாவின் பிறப்பு விழாவை மகிழ்வுடனும், திடமுடனும் கொண்டாடுவோம்.
நம் முயற்சிகள் என்ற கரங்களைக் குவித்து
உடல் உள்ள நலனுக்காக மன்றாடுவோம்.
அப்போது நம்மில் புதைந்திருக்கும் நலன்களை
விண்ணின் மழை, எழுந்து வாழ செய்யும்
No comments:
Post a Comment