Pages - Menu

Saturday, 3 September 2016

சாட்டை - சிறுகதை
- எம். பீட்டர் டேமியன், ஆசிரியர்
விரகாலூர்

பிரகாசம் கடந்த சில நாட்களாகவே மிகவும் உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் இருந்தார். காரணம், ஒவ்வொரு வருடமும் குடும்பத்தினரோடு அன்னையின் திருவிழாவில் கலந்து கொள்ள நடந்தே வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்வது போல், இந்த வருடமும் செல்ல தயாராகிக் கொண்டு இருந்தார். பிரகாசத்தின் மனைவி ரோசி, 8ஆம் வகுப்பு படிக்கும் மகன் டொனால்டு, 5ஆம் வகுப்பு படிக்கும் மகள் மெல்வினா. இதுதான் அவர்கள் குடும்பம். அவர்கள் வசிக்கும் கிராமத்திலிருந்து வேளை நகருக்கு நடைபயணமாக செல்வதென்றால் மூன்று நாட்கள் ஆகும். இப்படி பாதயாத்திரையாக செல்லும் இவர்கள், குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கி, விதவிதமாக ருசியாக சமைத்து சாப்பிட்டு விட்டுத்தான் வருவார்கள்.

பிரகாசம் தன்னுடைய வீட்டின் திண்ணையில் அமர்ந்து மூன்று நாட்களுக்கு வேண்டிய மளிகை சாமான்களை பட்டியலிட்டார். யோசித்து, யோசித்து எழுதி, தான் எழுதியதைப் படித்துப் பார்த்து திருப்திபட்டுக் கொண்டார். பின்னர் தன் மனைவியை சப்தம் போட்டு அழைத்தார்.

“ரோசி, ரோசி”
“என்னங்க”, சமையல் அறையிலிருந்து மனைவியின் குரல் கேட்டது.
“வா, வா இந்த  லிஸ்ட கொஞ்சம் பாரு”

ரோசி தன் கணவன் பிரகாசம் எழுதியதை வாசித்துப் பார்த்தாள். பின் தன் கணவரிடம், “எல்லாம் சரியா இருக்குங்க, ஆனா இந்த  மிளகு மட்டும் மிளகு தூளாகவே வாங்கிடுங்க, ஏன்னா அங்க போயி நம்மளால அரைச்சுகிட்டு இருக்க முடியாது” என்றாள்.

பிரகாசம், “அதுசரி! போன தடவ  நாம வேளாங்கண்ணிக்கு போனப்ப மீனும்,  நண்டும் மட்டும்தான் எடுத்து சமைச்சோம். ஆனா இந்த தடவ இறாலும் சேர்த்து வாங்கி சமைச்சிடனும்!”

“ஆமாங்க வரு­த்துக்கு ஒரு தடவ போறோம், நல்லா சமைச்சு ருசியா சாப்பிட்டுட்டு, தினமும் சாயந்தரம் கடலுக்கு போயி குளிச்சிட்டு வருவோம்”.

“சரி, சரி நாளைக்கு ஒருநாள்தான் இடையில இருக்கு. அரிசி மட்டும் 3 நாளைக்கு தேவையானதை  எடுத்துக்கோ! மற்றபடி மளிகை சாமான்கள், விறகு எல்லாம் வழக்கமான இடத்திலேயே வாங்கிக் கொள்வோம். நாளைக்கு நமக்கு, நம்ப பிள்ளைகளுக்கு தேவையான துணிமணியயல்லாம் எடுத்து வச்சிடு! என்ன சரியா?” என்றார் உற்சாகமாக பிரகாசம்.

“சரிங்க!” ரோசி மறுபடியும் சமையறைக்குள் புகுந்தாள்.
இவர்களது  உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த பிரசாகத்தின் மகன் டொனால்டு மெதுவாக தந்தையிடம் வந்தான்.

“அப்பா” என்று அழைத்தான். மெதுவாக  திரும்பிய பிரகாசம், “என்ன?” என்றார்.
“ஒரு சந்தேகம்பா! நாம வேளாங்கண்ணி கோவிலுக்கு மாதாவ கும்பிட போறோமா? இல்ல விதவிதமா சமைச்சு சாப்பிட போறோமா?”
“என்னடா சொல்ற” உறுமினார் பிரகாசம்.

“பின்ன என்னப்பா, ரெண்டு நாளைக்கு முன்னாடி நான் ஸ்கூலுக்கு போறப்ப உங்ககிட்டே தீனி வாங்க காசு கேட்டேன்! அப்ப நீங்க என்ன சொன்னீங்க? நீ ஸ்கூலுக்கு படிக்க போறியா? இல்ல தீனி வாங்கி தின்றதுக்காக போறியான்னு கேட்டீங்க? உங்களுக்கு ஒரு நியாயம்!  எனக்கொரு நியாயமா? பரீட்சை வந்தால் நம்மை நாமே நல்லா தயாரிச்சுகிட்டு போகனும்னு அறிவுரை சொன்ன நீங்க, இப்ப மாதா கோவிலுக்கு போறதுக்கு என்ன தயாரிப்பு செஞ்சு இருக்கீங்க? விரதம் இருந்தீங்களா? அல்லது ஒறுத்தல், தானம் இது  ஏதாவது செஞ்சு உங்களை நீங்களே தயாரிச்சு இருக்கீங்களா?”

சாட்டையால் அடிவாங்கியதைப் போல பிரகாசம் தலை குனிந்தார்! தவற்றை  உணர்ந்தவர், நிமிர்ந்து மகனைப் பார்த்த பார்வையில் மாற்றம் தெரிந்தது

No comments:

Post a Comment

Ads Inside Post