Pages - Menu

Friday, 30 September 2016

பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு

சா ஞா 11 : 22 - 12: 2;       2 தெச 1 : 11 - 2 : 2:               லூக் 19 : 1 - 10

மனிதர் இறைவன் இசைக்கும் இனிய தாளங்கள். ஆனால் சிலர் தப்புத் தாளங்களாக சூழ்நிலைகளால் சிதைக்கப்பட்டு விடுகின்றனர். தப்புத் தாளங்களை இனிய தாளங்களாக மாற்ற வேண்டும் என்று இயேசு அழைப்புக் கொடுத்தார். அதனையே செயலில் காட்டினார். ‘நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனமாற அழைக்க வந்தேன்’ என்றார் (லூக் 5 : 32). ‘பாவி’ என்பதற்கு கிரேக்க மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை, ‘அமார்த்தலோஸ்’ என்பதாகும். இது ‘அமார்த்தியா’ என்ற வார்த்தையிலிருந்து மருவி வருவதாகும். ‘அமார்த்தியா’ என்றால் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதில் காணும் தோல்வியாகும். ‘குறி தவறுதல்’ என்றும் கூறலாம். புதிய ஏற்பாட்டில் இந்த ‘பாவம்’, ‘பாவி’ என்ற வார்த்தைகள் பாவத்தை தவித்தல்,, மன்னிப்பு என்ற சூழலில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என அறிஞர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக மாற் 1 : 4இல் திருமுழுக்கு யோவான், பாவம் ‡ மன்னிப்பு ‡ மனமாற்றம் இவைகளை குறிப்பிட்டே மக்களுக்கு போதனை செய்தார் (காண் லூக் 3 : 3, தி ப 2 : 38).

இன்றைய நற்செய்தியில் சக்கேயு என்ற தலைமை வரிதண்டுபவர் இயேசுவின் வலையில் வீழ்கிறார். எரிக்கோ நகரில் வினோத பிரியனாக இயேசு யார்? என்று பார்க்க, குட்டையான சக்கேயு அத்திமரத்தில் ஏறுகிறான். நத்தனியேலை அத்திமரத்தின் கீழ் கண்டார் இயேசு. அத்திமரம், சட்டங்களை கற்கின்ற சூழலை கொண்ட மரம் என்பது ஒரு யூத வழக்கு. சக்கேயு அத்திமரத்தின் மீது ஏறுகிறான். இயேசுவை காண்கிறான். புதிய சட்டத்தைக் காண்கின்றான். தனது பேராசையான பாம்பு சட்டையை கழற்றி எறிகிறான். சக்கேயுவுக்கு இறைவாக்கினரைப் போல இயேசுவிடமிருந்து அழைப்பு வருகிறது. ‘சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும், இன்று உமது வீட்டில் தங்க வேண்டும்’. சக்கேயு என்றால் ‘தூய்மை’ என்று பொருள். பாவிகள் என்று கருதப்பட்ட வரிதண்டுபவர்கள் இயேசுவின் நண்பர்களாகிறார்கள் என்ற குறிப்பினை லூக்கா நற்செய்தியில் பல இடங்களில் பார்க்கிறோம். (லூக் 3 : 12 - 13; 5 : 27 - 32; 7 : 29 - 30; 15 : 1 - 2; 18 : 9 - 14).

வரிதண்டுபவர்கள் இயேசுவின் அழைப்பிற்கு பதிலளித்து மனமாறுகிறார்கள். சக்கேயு வரிதண்டுபவர் மட்டுமல்ல, பெரிய செல்வந்தர் என்றும் கூறப்பட்டுள்ளது. இயேசு செல்வந்தர் ஒருவருக்கு நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளும் வழியாக, ‘தன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு’ என்றும் அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர் என்றும் அறிவுரை கூறினார். இதனைக் கேட்ட அந்த செல்வர் மிகவும் வருத்தமுற்றார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் இயேசு செல்வர் ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது என்றார் (லூக் 18 : 18 - 27).

சக்கேயு என்ற ஒட்டகமான செல்வந்தன் ஊசியின் காதில் நுழைந்துவிட்டான். ஏனென்றால் தன் சொத்துக்களின் பாதியை ஏழைகளுக்கு கொடுத்து விடவும், தன்னால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு நான்கு மடங்கு ஈடுசெய்யவும் முன்வருகிறார். இவ்வாறு உயர்ந்த ஒட்டகம் சிறிய ஊசியில் நுழைகிறது.

முதல் வாசகத்தில, தவறு செய்பவர்களை இறைவனே சிறிது சிறிதாய் திருத்துகிறார் என்றும், இறைவன் இரக்கம் கொண்டவர் என்றும், மனிதர் மனந்திரும்ப வேண்டும் என்பதை விரும்புகிறார் என்றும் கூறுகிறது.

இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், கடவுள், உங்களை தாம் விடுத்த அழைப்புக்கு தகுதியுள்ளவராக்குவாராக என்றும், ‘உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும் நிறைவுற செய்வாராக’ என்றும் தெசலோனிக்கருக்கு அறிவுரை கூறுகிறார்
.
குறையில்லாத மனிதர் இல்லை. புல்டன் Uன் ஆண்டகை சிறை சாலை ஒன்றை சந்தித்தார். அப்போது அங்கிருந்த கைதிகளைப் பார்த்து கூறினார், நாம் எல்லோரும் ஒன்றுதான். ஒரே வேறுபாடு, நீங்கள் கம்பிகளுக்குப் பின்னால் உள்ளீரகள். நாங்கள் கம்பிகளுக்கு வெளியே உள்ளோம் என்றார்

No comments:

Post a Comment

Ads Inside Post