பொதுக்காலம் 23ஆம் வாரம் 4 - 9 - 2016
சாஞா 9 : 13 - 18; பில 9 - 10, 12 - 17; லூக் 14 : 25 - 33
- அருள்பணி. ச.இ.அருள்சாமி,
பொருள்கள், உறவுகள் மீது விருப்பமில்லா நிலை என்ற பண்பு ஒரு செல்வமாகும். அதற்கு ஈடானது ஒன்றுமில்லை
என்கிறார் வள்ளுவர்.
“வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்” (குறள் - 363)
பொருள்களை பிள்ளைகளுக்கென்று சேர்ப்பதால், பெற்றோர்கள் பிள்ளைகளின் வாழ்வினையே அழித்து விடுகிறார்கள் என்றார் ஒரு சொற்பொழிவாளர். வாழ்வு என்பது நிலைத்திருப்பது. பொருள் கைமாறி செல்வது. பொருள் பைத்தியம் பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளையும் பிடித்துவிடும்.
ஓரு காவலர் குடும்பம். ஒரே பையன். செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். நாம் பட்ட கஷ்டம் பிள்ளைகள் படக்கூடாது என்பது பெற்றோர்களின் கொள்கை. வேண்டியதெல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள். சைக்கிள், பிறகு பைக். வீட்டில் பெரிய தொலைக்காட்சி பெட்டி, குளிரூட்டும் பெட்டி (ரெப்ரிஜிரேட்டர்), குளிரூட்டி (ஏசி) எல்லாம் இருந்தன. பண வசதியால் பையன் தீய நண்பர்களுடன் சேர்ந்தான். போதை பொருள்களுக்கு அடிமையானான். எனக்கு கார் வாங்கிக் கொடுங்கள் என்று அடம்பிடித்தான். ‘இப்போது அது முடியாதப்பா’ என்றனர் பெற்றோர்கள். சில நாள்கள் தொடர்ந்து கேட்டான். பிறகு ஒருநாள் குடித்து விட்டு வந்து, ‘கார் வாங்கிக் கொடுக்க வக்கில்லாத நீ, ஏன் என்ன பெத்த?’ என்று சொல்லி தொலைக்காட்சி பெட்டி, கண்ணாடி பொருள்கள் அனைத்தையும் அடித்து உடைத்தான்.
இன்றைய நற்செய்தி பகுதியில், இயேசுவின் சீடராக, அவரின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டுமென்றால், பற்றற்ற நிலை வேண்டும் என்கிறார் இயேசு. தன் சீடர்கள் பற்றற்ற நிலையில் வாழ வேண்டும் என இயேசு கூறுவதை லூக் 9 : 23 - 27, 57 - 62 என்ற பகுதியிலும் பார்க்கிறோம். உறவுகள் (தாய், தந்தை, பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள்), ஒருவரின் தன் நலம் ஆகியவை இயேசுவின் வழிகளுக்கு அடுத்த நிலையில்தான் நிற்க வேண்டும். உறவுகளுக்கு முதலிடம் கொடுக்கக் கூடாது என்று தமிழ் மொழிபெயர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கிரேக்க மூலத்தில், உறவுகளை வெறுக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. உறவுகள், தன்நலம் ஆகியவற்றை ஒதுக்கிவைத்து, இயேசுவின் வழியில் செல்லும்போது வருகின்ற சுமைகளை, எதிர்ப்புகளை சிலுவையாக தாங்கிக் கொள்ள வேண்டும் என்கிறார்.
இத்தகைய கொள்கை, மனிதருக்கு புரிந்துக் கொள்ள முடியாத ஒன்று. ‘தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும்’ என்று உறவின் ஒன்றிப்பைக் கூறுவார்கள். ஆனால் பற்றற்ற நிலையில் வாழ்வது இறைவனின் திட்டமாகிறது. இதனைத்தான் முதல் வாசகத்தில், சாலமோனின் ஞானம், ‘கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்?’ என்றும், ‘மண்ணுலகில் உள்ளவற்றேயே நாம் உணர்வது அரிது, விண்ணுலகில் இருப்பவற்றை தேடி கண்டுபிடிப்பவர் யார்?’ என்றும் ’ஞானத்தாலும், தூய ஆவியாரின் உதவியாலும் தான் உண்மைகளைக் காணமுடியும்’ என்றும் கூறுகிறது.
இரண்டாம் வாசகத்தில், பவுல், ஒனேசிமு என்ற அடிமையை, “உன் சகோதரனாக ஏற்றுக் கொள்” என்று பிலோமோனுக்கு அறிவுரைக் கூறுகிறார். சமத்துவம் என்பது பழமையிலிருந்து விடுபட்ட பற்றற்ற நிலையினால் ஏற்படுகிறது.
நுகர்வோர் கலாச்சாரத்தில், பொருள்கள் நமது தலைமை பீடமாகின்றன. எனவே மனித மாண்புகள் வெறுமையாகின்றன. ஏமாற்றமும், விரக்தியும் பலனாக நம் கைகளில் வந்து விழுகின்றன.
“இலலம் இளமை எழில் வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் றிவை எல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாம் உய்யக் கொண்டு”
- நாலடியார் 53.
No comments:
Post a Comment