இரட்சணிய யாத்திரிகம்
- எம்.சி. குமார்,
M.A., B. Ed., M. Phil,
விரகாலூர்
தன்னுடைய நிலையை அறிந்த கிறித்தியான், துன்ப மிகுதியால் உடலும், உள்ளமும் சோர்ந்தான். நிலையான வாழ்வை நினைத்தான். துன்ப காலத்தில் துணைபுரிய வேண்டிய மனைவியும், மக்களும் இகழ்ந்தனர். நண்பர்கள் நழுவினர். தன் மன பாரத்தைப் பகிர்ந்து கொள்ளுவதற்கு யாருமில்லையே என ஏங்கினான். அப்போது அங்கு ஒருவர் வந்தார். அவரின் பார்வையோ அருள் நிறைந்த பார்வை. அன்பை வெளிப்படுத்தும் மலர்ந்த முகம். இரக்கம் மிகுந்த உள்ளம். அவர்தான் குருவானவர் (நற்செய்தியாளர்). கிறித்தியானை நெருங்கி, வாடிய முகத்தைக் கண்டார். களங்கமில்லாத அன்பு கலந்த இனிய வார்த்தைகளால் அவன் துன்பத்திற்கு மாற்று வழி கூற எண்ணினார்.
“உருகிமெய் விசாரியை யுற்று நோக்கிநின்
கருணைத் தியாரைநீ யவலிக் கின்றனை
பெருகுமித் துயருனக் குற்ற பெற்றியயன்
திருகலில் சிந்தையாய் செப்பு கென்றனன்”
“அன்பா! நீ யார்? ஏன் மிகுந்த கவலையோடு நிற்கின்றாய்? உனக்கு மிகுந்த இந்தத் துன்பம் உண்டாவதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்குக் கிறித்தியான் “நான் அழிவு நகரைச் சார்ந்த கொடியவனுள் கொடியவன். இறைவனுடைய சினத்தீ விழுந்து இந்த இடமெல்லாம் அழியப் போகிறது என அறிந்தேன். விண்ணரசால் அற விசாரணை உண்மையாகவே வரும். அந்நாளில் அருளரசராகிய இறைவனின் கட்டளையை மீறிய தீயவர்கள் கொடிய நரகை அடைவது உறுதியயன்று இந்தத் திருமறை கூறுகிறது. இதனைப் படித்து அறிந்த நான் இத்துன்பம் அடைந்தேன். இறைவனை மறந்து, அவர் செய்த நன்மையை மறந்து ஒவ்வொரு நாளும் இழிவான செயலையே செய்து வீண் காலம் கழித்தேன். கொடியவனாகிய எனக்கு வர இருக்கின்ற தண்டனைக்கு இன்றைக்கு வருந்துவதில் பயனில்லை. சாகவும் மனமில்லை, தண்டனையை எதிர்கொள்ளவும் துணிவில்லை. மற்றவர்களைப் போலச் சென்று அடையும் வேறு அடைக்கலமும் எனக்கில்லை. இதற்கு ஈடாக ஏதாவது செய்யலாமென்றால் அதற்குச் சிறிதும் பலமில்லை. ஆதலால் நான் துன்புறுகின்றேன்” என்றான்.
இதனைக் கேட்ட குருவானவர் “கிறித்தியானே! நீ சொன்ன யாவும் உண்மையே. மறை பொருள் ஒன்றுமில்லை. இவ்வுலக வாழ்வில் மிகுந்த வேதனை உண்டாவதை அறிந்தும் சாவதற்கு ஏன் பயப்படுகிறாய்?” என்றார். அதற்குக் கிறித்தியான் “நான் பிறந்தது முதல் இன்று வரை செய்த குற்றங்கள் யாவும் ஒன்று சேர்ந்து என் முதுகு முரியுமாறு அழுத்துகின்றன. பாவச் செயல்களைச் செய்கின்ற தீயவர்கள் வாழும் நெருப்புக்கடல் பள்ளத்தில், நானும் அமிழ்ந்து விடுவேன் என்று அஞ்சுகின்றேன். பல நூல்களைக் கற்றறிந்த இவ்வுலகை ஆளும் அரசன் தண்டிக்கும் போது அஞ்சுகின்ற இவ்வுலக மக்களாகிய நாங்கள் எல்லாவற்றையும் படைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு அஞ்ச வேண்டாமா?” என்றான்.
இதனைக் கேட்ட குருவானவர், “கிறித்தியானே! நீ உன் நிலையை உணர்ந்து சிந்திப்பதும், துணிவதும் மிகவும் நல்லது. நீ இவ்வளவு காலம் அழிவு நகரில் காலம் தாழ்த்தியது அறச்செயல் ஆகாது. சாகும் அளவிற்கு துன்பம் வருவதற்கு முன்னர் அடைக்கலத்தைத் தேடிச் செல்வது இந்த இடத்திலேயே சுற்றி அலைவது உனக்கு நன்மை தராது” என்றார்.
இதனைக் கேட்ட கிறித்தியான் “இக்கொடிய துன்பத்திலிருந்து தப்பிப் பிழைக்கும் வழி எதுவென்று எனக்குத் தெரியவில்லை. இவ்வுலகில் பலர் பல வழிகளைக் கூறுகின்றனர். அவைகள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தேன். உண்மை வழிகளாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வழிகள் யாவும் பொய்வழிகள் என்று அறிந்து கொண்டேன்.
அவ்வழிகளில் நான் செல்ல மாட்டேன். இறைவனின் விண்ணுலகுக்குச் செல்லும் வழி எவ்வழியயன்று இன்னும் நான் அறியவில்லை. விண்ணுலக நகருக்குச் செல்லும் நிலையான வழியை நீர் அறிந்திருப்பீரானால் சொல்லும். நானும் அவ்வழியே செல்லுவேன்” என்றான்.
குருவானவர் விண்ணாட்டின் சிறப்பையும் அந்நகரத்தின் சிறப்பையும் கிறித்தியானுக்குக் கூறத் தொடங்கினார். (தொடரும்).
No comments:
Post a Comment