பொதுக்காலம் 24ஆம் வாரம் 11-09-2016
விப 32 : 7 - 11, 13 - 14; 1 திமொ 1 : 12 - 17; லூக் 15 : 1 - 32
நம் நாட்டில் ஊழல்கள், அநீதிகள், வன்முறைகள் அதிகரித்து வருவதற்குக் காரணம், தவறுகளுக்கு சரியான தண்டனை வழங்கப்படாததுதான் என்று சோ அவர்கள் ஒருமுறை கூறினார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் தவறுகளுக்கு சரியான தண்டனை கொடுக்கப்படுகிறது. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. எனவே மக்கள் மனதில் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்ற பயம் இருக்கிறது. ஆனால் நமது நாட்டில் இந்த தண்டனை முறை சரியாக இல்லை. அதனால்தான் தீமைகள் மலிந்து வருகின்றன என்று அவர் கூறினார்.
இயேசு, இறைவன் என்பவர், இரக்கத்தின் உருவம். அவர் அழிக்கின்ற கொடுமையாளர் அல்ல என்ற கருத்தை தமது வாழ்வாலும், போதனைகளாலும் உறுதிப்படுத்தினார். இன்றைய நற்செய்தி பகுதியில் மூன்று உவமைகள் வழியாக இறைவனின் பைத்தியமான இரக்கப்பண்பை விளக்குகிறார். இயேசு, தன் வாழ்வில் இந்த இரக்கப் பண்பை வாழ்ந்து காட்டுகிறார். ‘பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறார்’ என்று அக்காலத்து அறிஞர்களான பரிசேயர், மறைநூல் அறிஞர் ஆகியோர் குறை காண்கின்றனர். அவர்களின் கண்ணோட்டம் இறை பண்பினை புரிந்துக் கொள்ளாத பார்வை என்று மூன்று உவமைகள் வழியாக விளக்குகிறார் இயேசு. காணாமற் போன ஓர் ஆட்டிற்காக, 99 ஆடுகளை பாலைநிலத்தில் விட்டுவிட்டு, அதனைத் தேடி செல்கிறான் ஆயன். காணாமற் போன ஒரு காசை கண்டுபிடிக்க, வீட்டினையே புரட்டி போடுகிறாள் ஒரு பெண். தன் சொத்துக்களை அழித்து, பெருத்த அவமானத்தை தரும் வாழ்வை நடத்தி விட்டு திரும்பி வந்த மகனை பெருமகிழ்வுடன் வரவேற்கிறார் தந்தை. ஆட்டினைத் தேடிய ஆயர், காசைத் தேடிய பெண்மணி, பிரிந்து சென்ற மகனை ஏற்றுக்கொண்ட தந்தை ஆகியோர் இறைவனின் இரக்கத்தை எடுத்துக்காட்டும் ஊடகமாக விளங்குகிறார்கள். மூவரும் இழந்ததைத் தேடுகிறார்கள். தந்தை ‡ மகன் உவமையில் தேடுதல் கொடுக்கப்படவில்லை. அடுத்து, மூவரும், இழந்ததை கண்டுகொள்கிறார்கள், தொடர்ந்து இழந்ததைக் கண்டதும் மகிழ்கிறார்கள். மூன்றாவதாக மற்றவர்களுடன் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டு, மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள். இந்த உவமையின் மையக்கருத்து மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக் 15 : 7, 10) என்பதாகும்.
முதல் வாசகத்திலும், இஸ்ரயேல் மக்கள், கடவுள் செய்த பெரும் வல்ல செயல்களையயல்லாம் மறந்துவிட்டு, கன்றுகுட்டியை வழிபட ஆரம்பித்தார்கள். இறைவன்அவர்களை அழிக்க விரும்புகிறார். ஆனால் மோசே மக்களுக்காக மன்றாட, இறைவன், தன் அழிக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டார் என்று கூறப்பட்டுள்ளத. ‘கிறிஸ்துவை அழிக்க நினைத்த என்னிடம், கடவுள் எனக்கு இரங்கினார்’ என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார் கூறுவதைப் படிக்கிறோம்.
நம் திருத்தந்தை இவ்வாண்டை இரக்கத்தின் ஆண்டாக அறிவித்திருக்கிறார். மனிதரில் பழிவாங்கும் எண்ணம்தான் தலைதூக்கி நிற்கிறது. மற்றவர்கள் நமக்கு செய்த தீமைகளுக்கு, நாமும் தீமை செய்தால்தான் நம் மனம் நிம்மதி அடைகிறது. ஒன்றுக்கு நூறாக பழிவாங்க நினைக்கிறோம். தீமை என்ற நெருப்பை, இரக்கம் என்ற நீரினால் அழிக்கவே இறைவன் வழிகாட்டுகிறார். இரக்கம் காட்ட, இறைவனைப் போன்ற இதயத்தை பெற்றால்தான் அது சாத்தியமாகும். இறைவனோடு ஒன்றித்திருக்கும் ஆன்மீக அனுபவத்தில் தினமும் மூழ்கவேண்டும். நமது குறைகளையும் தாண்டி, எவ்வாறு மற்றவர்கள் நம்மை பொறுத்துக் கொள்கிறார்கள் என்பதையும் உணரவேண்டும்.
இஸ்ரயேல் மக்கள்மீது எப்படி இறைவன் இரக்கம் காட்டினார் என்று ஓசே 11 : 1 - 9 தெளிவாகக் கூறுகிறது. இஸ்ரயேல் பிறந்தது முதல் எவ்வாறு அவர்கள்மீது இரக்கம் காட்டி வளர்ந்து வந்தார் என்று கூறுகிறது.
No comments:
Post a Comment