Pages - Menu

Friday, 1 July 2016

அன்பின் மகிழ்வு

அன்பின் மகிழ்வு

AMORIS LAETITIA. The Joy & Love

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய திருத்தூது மடலில் காணப்படும் கல்வியியல் கூறுகள் :
(சென்ற இதழ் தொடர்ச்சி)

- அருட்பணி. பிரான்சிஸ், பாபநாசம்

7. மேய்ப்புப்பணி செயல்பாடுகள் (199 - 258) :

இறைத்திட்டத்தின்படி உறுதியான பலனளிக்கும் குடும்பங்கள் உருவாக்கப்படல் வேண்டும். இந்த ஆறாம் அதிகாரம் குடும்பம் பற்றிய இரு பேரவை அமர்வுகளின் கருத்துக்கள், திருத்தந்தையர் பிரான்சிஸ் மற்றும் ஜான் பால் ஆகியோரின் மறைக்கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். குடும்பம் ஒவ்வொன்றும் தன்னையே நற்செய்தியாக்கிப் பிறருக்கும், நற்செய்திப் பணியாற்ற வேண்டும். எண் 202இல் அருள் பணியாளர்கள் குடும்பப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பயிற்சியில் குறைந்து காணப்படுகின்றனர் என்று வருத்தத்தோடு திருத்தந்தை குறிப்பிடுகின்றார். ‘குருமாணவர்களின் பயிற்சி மனங்களை தீர்வு காணும் முறையிலும், தேர்ச்சி பெறும் முறையிலும் அமைந்திருக்க வேண்டும்’ (எண் : 203) என்று குறிப்பிடுகிறார்.
இல்லற வாழ்வின் ஓட்டத்தில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சனையிலிருந்தும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்கின்றோம். இத்தகு பின்னிணியில் குடும்பத்தில் உறவுப் பாலங்கள் உருவாகாது கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் மனங்கள் ஒருங்கிணைந்து வாழவேண்டும். எனவே திருமணத் தயாரிப்பு மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
பெருகி வரும் திருமண முறிவுகள் பற்றி கவலை கொண்டுள்ள திருத்தந்தை, சிறுகுழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படாதிருத்தலின் நிமித்தமாக திருமண முறிவு பற்றிய ஒரு சில நடைமுறை மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார்.
மணமுறிவு மாபெரும் தீமை. இது எண்ணிக்கையில் பெருகுவது வருத்தம் தரக்கூடியது. எனவே தம்பதியரிடையே அன்பின் பிணைப்பினை வலுவாக்குவதும், இவர்களின் மனக்காயங்களுக்கு மருந்திடுவதுமே மேய்ப்புப்பணியின் மேன்மையான அலுவல் ஆகும் (எண் : 246). கத்தோலிக்கர் மற்றும் கத்தோலிக்கரல்லாதோர், கத்தோலிக்கர் மற்றும் பிற மதத்தைச் சார்ந்தவர் மத்தியில் உருவாகும் திருமண உறவு நீடித்திருக்கவும் ஆவண செய்திடல் வேண்டும்.

8. குழந்தைகளுக்கான மேம்பாட்டுக் கல்வி நோக்கி (எண் 259 - 290) :

அறநெறிப் பயிற்சி, கட்டுப்பாடு, பொறுமைமிகு காத்திருப்பு, பாலினக் கல்வி, ஒருபாலினத்தோரிடையே திருமணம் போன்றவற்றில் தற்காலக் கல்வி முக்கிய பங்காற்றிட வேண்டும். சிறு குழந்தைகளின் மனதில் பாலியல் வல்லுறவு, வன்முறை, ஆகிய தீயன கண்டு அஞ்சிடும் மனப்பாங்கு என்ற, ஒரே திசை காட்டும் கருவியாக இன்றைய கல்வி அமைந்திருத்தல் அவசியமானதாகும். செக்ஸ் பற்றிய குற்றங்கள் பெருகிக் கொண்டே வருகின்றன. எனவே செக்ஸ் கல்வி, கல்விக் கூடங்களில் மிகவும் அவசியமாகக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அன்பிற்கான கல்வி மற்றும் பரஸ்பர தற்கையளிப்பு போன்ற பண்புகள் பரந்து விரிந்த மனப்பாங்கினை உருவாக்கும். இதுவே உன்னதக் கல்வியாகும் (எண் : 280). பாதுகாப்பான பாலுறவு இயற்கையான மக்கட்பேற்றினுக்கெதிரான சிந்தனை உருவாகிட வழிவகுக்கும். இது தொடர்ந்தால் சுய இன்பம் மற்றும் அடக்கி ஆளும் சக்தி போன்றவை ஏற்புடையினுக்கெதிராக மாற்றம் பெறும் (எண் : 283).

9. வழிகாட்டுதல், தேர்ந்தளித்தல் மற்றும் பலவீன ஒருங்கிணைப்பு (எண் : 291 - 312) :


இந்தப் பகுதியில் மேய்ப்புப்பணி புரிவோர் மேற்கொள்ள வேண்டிய இரக்கம் பற்றிக் குறிப்பிடுகிறது. இதனை விளக்குவதற்கு வழிகாட்டுதல், தேர்ந்து தெளிதல் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற வழிமுறைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இவை செயலாக்கம் பெற திருச்சபை ஒரு நடமாடும் மருத்துவமனை போல் செயல்பட வேண்டும் (எண் : 291). இல்லற வாழ்வு பற்றி திருச்சபை போதிக்காத நல்ல கருத்துக்கள் எங்கிருந்து வந்தாலும் திருச்சபை அதனை ஒதுக்கித்தள்ளிவிடலாகாது (எண் : 292). இறைவன் இரக்கம் மிக்கவர். நிபந்தனையற்ற விதத்தில் தகுதியற்ற நிலையிலிருந்தாலும் எல்லையில்லா அளவுக்கு நாம் இரக்கம் காட்ட வேண்டும் (எண் : 291).
மணமுறிவு அளித்து மறுமண வாழ்வினைத் தேர்ந்து வாழும் திருமுழுக்குப் பெற்றோர் முழுமையுமாகக் கிறிஸ்துவ குழுக்களில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். பிறருக்குத் தவறான முன்னுதாரணவாதிகளாகிய இவர்கள், தங்களின் செயல்பாடு தவறு எனப் புரிந்து, கத்தோலிக்கத் திருச்சபையோடு இணைந்து வாழத் துடிக்கும் இவர்கள் மீது, குழந்தைக்குரிய கரிசனையினை வெளிப்படுத்தி, கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்க்க, அருள்பணியாளர்கள்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் (எண் : 299). மேலும் திருமண உறவில் இணைந்திருப்போர், மணமுறிவு நிலைக்குத் தள்ளப்படாதவாறு அவர்களை அன்புக்கயிற்றால் பிணைத்து வாழச் செய்ய ஆவண செய்திடல் வேண்டும்.

10. இல்லற ஆன்மீகத்தில் வேரூன்றுதல் :

இல்லற வாழ்வில் ஏற்படும் இன்பம், துன்பம், விழாக்கள், மனமகிழ்வு நேரங்கள் ஏன் உடலின்ப அனுபவங்கள் கூட இயேசுவின் உயிர்ப்பில் முழுமையுமாகப் பங்கேற்க கூடியதாகத் திகழ்ந்திடல் வேண்டும் (எண் : 317). இறைவனின் பிரமாணிக்கத்திலும், நம்பிக்கையிலும் வேரூன்றி, உயிர்ப்பின் ஒளியில் குடும்பத்தில் ஏற்படும் அனைத்து அனுபவங்களும் ஆன்மீகத்தில் திளைத்திடும் வாய்ப்புக்களாகத் கருதி மூவொரு இறைவனில் இணைந்திருக்க வேண்டும். குடும்பங்களில் அன்பு புரிவதில் வளர்ச்சியும், முதிர்ச்சியும் நிறைந்திருத்தல் அவசியம். இதனால் விண்ணருளால் ஒன்றிணைந்த குடும்ப உறுப்பினர்கள் எந்த நிலையிலும் பிரிந்திடாதிருக்க முடியும். நான், எனது குடும்பம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து விலகி, பக்கத்து வீட்டாரையும் அன்பால் பிணைத்து உயரிய உன்னதமான நிலையினை அடைய வேண்டும் என்பதனைச் சிந்தையில் இருத்தி, ஒவ்வொருவரும் வாழ்ந்திடல் வேண்டும். நமது மனித பலவீனங்களைப் புறந்தள்ளி, அன்பின் முழுமையும் நிறைவுமான ஒரே பரம்பொருள்மீது முழுக்கவனத்தையும் இருத்தி வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம் (எண் : 325). உண்மை அன்பில் ஊறித் திளைக்கும் குடும்பமே நம்பிக்கையில் எழும் அனுபவ மொழியாகத் திகழும்.
இறுதியாக ... இன்பம் அளிப்பது அன்பு. அன்புள்ளம் கொண்ட மக்களாக நாளைய சமுதாயத்தினைப் படைக்கும் பொறுப்பில் உள்ளோர் கீழ்க்காணும் கருத்துக்களை கல்விக் கொள்கையாகப் பெற்றிருத்தல் பாராட்டினுக்குரியது.

1. மனசாட்சியின் குரலுக்குச் செவிசாய்க்க வைக்கும் கல்வி.

2. குடும்பத்தின் மாண்பினைக் கட்டிக் காக்கச் செய்வது கல்வி.

3. மனித மாண்பினையும், பாலின நிகர் நிலையினை முன்னிறுத்தும் கல்வி.

4. செக்ஸ் பற்றிய முதிர்ச்சியும், நல்புரிதலும் கொண்டது கல்வி.

No comments:

Post a Comment

Ads Inside Post